Friday, March 20, 2009

காதலித்துப்பார்!


உன்னைச் சுற்றி
ஒளிவட்டம் தோன்றும்

உலகம் அர்த்தப்படும்

ராத்திரியின் நீளம்
விளங்கும்

உனக்கும்
கவிதை வரும்

கையெழுத்து
அழகாகும்

தபால்காரன்
தெய்வமாவான்

உன் பிம்பம் விழுந்தே
கண்ணாடி உடையும்

கண்ணிரண்டும்
ஒளிகொள்ளும்


காதலித்துப் பார்
------------------------------

தலையணை நனைப்பாய்
மூன்றுமுறை பல்துலக்குவாய்

காத்திருந்தால்
நிமிஷங்கள் வருஷமென்பாய்

வந்துவிட்டால்
வருஷங்கள் நிமிஷமென்பாய்

காக்கைக்கூட உன்னை
கவனிக்காது
ஆனால் - இந்த உலகமே
உன்னையே கவனிப்பதாய்
உணர்வாய்

வயிற்றுக்கும் தொண்டைக்குமாய்
உருவமில்லா உருண்டையொன்று
உருளக் காண்பாய்

இந்த வானம் இந்த அந்தி
இந்த பூமி இந்த பூக்கள்
எல்லாம்
காதலை கௌரவிக்கும்
ஏற்பாடுகள் என்பாய்


காதலித்துப்பார்
--------------------------------

இருதயம் அடிக்கடி
இடம்மாறித் துடிக்கும்

நிசப்த அலைவரிசைகளில்
உனது குரல் மட்டும்
ஒலிபரப்பாகும்

உன் நரம்பே நாணேற்றி
உனக்குள்ளே அம்புவிடும்

காதலின் திரைச்சீலையைக்
காமம் கிழிக்கும்

ஹார்மோன்கள்
நைல்நதியாய்ப் பெருக்கெடுக்கும்
உதடுகள் மட்டும்
சகாராவாகும்

தாகங்கள் சமுத்திரமாகும்
பிறகு
கண்ணீர்த் துளிக்குள்
சமுத்திரம் அடங்கும்

காதலித்துப்பார்
-----------------------------------

பூக்களில் மோதி மோதியே
உடைந்து போக
உன்னால் முடியுமா?

அகிம்சையின் இம்சையை
அடைந்ததுண்டா

அழுகின்ற சுகம்
அறிந்ததுண்டா?
உன்னையே உனக்குள்ளே
புதைக்கத் தெரியுமா?

சபையில் தனிமையாகவும்
தனிமையை சபையாக்கவும்
உன்னால் ஒண்ணுமா?

அத்வைதம்
அடைய வேண்டுமா?

ஐந்தங்குல இடைவெளியில்
அமிர்தம் இருந்தும்
பட்டினி கிடந்து பழகியதுண்டா?

காதலித்துப்பார்
---------------------------------------

சின்னச்சின்னப் பரிசுகளில்
சிலிர்க்க முடியுமே

அதற்காகவேனும்

புலன்களை வருத்திப்
புதுப்பிக்க முடியுமே

அதற்காகவேனும்

ஆண் என்ற சொல்லுக்கும்
பெண் என்ற சொல்லுக்கும்
அகராதியில் ஏறாத
அர்த்தங்கள் விளங்குமே

அதற்காகவேனும்

வாழ்ந்துகொண்டே
சாகவும் முடியுமே
செத்துக்கொண்டே
வாழவும் முடியுமே

அதற்காகவேனும்

காதலித்துப்பார்
------------------------------------

சம்பிரதாயம்
சட்டை பிடித்தாலும்
உறவுகள்
உயிர்பிழிந்தாலும்

விழித்துப் பார்க்கையில்
உன் தெருக்கள்
களவு போயிருந்தாலும்

ஒரே ஆணியில் இருவரும்
சிக்கனச் சிலுவையில்
அறையப்பட்டாலும்

நீ நேசிக்கும்
அவனோ அவளோ
உன்னை நேசிக்க மறந்தாலும்

காதலித்துப்பார்

சொர்க்கம் - நரகம்
இரண்டில் ஒன்று
இங்கேயே நிச்சயம்

காதலித்துப்பார்

கவிஞர் - கவிப்பேரரசு வைரமுத்து
நூல் - இந்தப் பூக்கள் விற்பனைக்கல்ல

4 comments:

மோனி said...

சரி .. சரி ..
அழக்கூடாது ...

மோனி said...

என்ன கொடுமை வெங்கடேசன் இது ?
என் கமென்ட்-க்கு கூட
ஒரு பதில் கமென்ட்-ஐ காணோம் ...

Venkatesan P said...

sorry mony. Thanks for ur comments. Keep reading my blog. You will c much more interesting things.

venky said...

உனக்கும்
கவிதை வரும்..................