Tuesday, April 28, 2009

கருணாநிதியின் உச்சகட்ட நாடகம் - வைகோஇலங்கை அரசு போரை நிறுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழக முதல்வர் கருணாநிதி நேற்று காலை சென்னை அண்ணா நினைவிடத்தில் உண்ணாவிரதம் மேற்கொண்டார். கலைஞரின் உண்ணாவிரத்தை அறிந்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பிரதமர் மன்மோகன் சிங், உலக தமிழர்கள் பலர் உடல் நலத்தை கருத்தில்கொண்டு உண்ணாவிரத்தை கைவிட வேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர். இந்நிலையில் இலங்கையில் அந்நாட்டு அதிபர் ராஜபக்சே தலைமையில் போர் நிறுத்தம் குறித்து ஆலோசனையில் ஈடுபட்டனர். உண்ணாவிரத்தில் பேசிய கலைஞர், இலங்கையில் போர் நிறுத்தப்பட்டு விட்டது என்று மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் உறுதியான தகவலை கொடுத்துள்ளதால் இத்துடன் உண்ணாவிரத்தை முடித்துக்கொள்வதாக அறிவித்தார்.

கருணாநிதியின் உச்சகட்ட நாடகம் - வைகோ:
முதல்வர் கருணாநிதியின் உண்ணாவிரதப் போராட்டம் உச்சகட்ட நாடகம் என்று மதிமுக ‌பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார். ஊட்டி அருகே கூடலூரில் ‌செய்தியாளர்களிடம் பேசிய அவர், இலங்கைத் தமிழர்கள் பிரச்சனையில் கருணாநிதி இதுவரை நடத்திய நாடகங்களில் இந்த உண்ணாவிரதம் தான் உச்சகட்ட நாடகம் என்றார். அவர் மேலும் கூறுகையில், கருணாநிதி அவரது குடும்பத்துக்காக காங்கிரசு‌டன் சேர்ந்து தமிழினத்திற்கு துரோகம் இழைத்து விட்டார். போரை நிறுத்த வேண்டும் என சிறிலங்கா அரசுக்கு மத்திய அரசு ஏதாவது உத்தரவு அனுப்பியதற்கான ஆதாரம் ஒன்றை காட்டினாலும், நான் தீவிர அரசியலில் இருந்து விலகி விடுகிறேன். கடந்த இருண்டு நாட்களாக சிறிலங்கா இராணுவம் ரசாயண குண்டுகளை அதிக அளவில் பயன்படுத்தி வருகிறது. கடந்த 5 ஆண்டு காலமாக சிறிலங்காவிற்கு இந்தியா இராணுவ உதவி அளித்து வருகிறது. அதைத் தடுக்க கருணாநிதி என்ன செய்தார். இப்போது ஏன் இந்த திடீர் உண்ணாவிரதம்?. இலங்கைத் தமிழர் பிரச்சினை தமிழக மக்களை உலுக்கிப் போட்டுள்ளது. இதன் காரணமாக திமுக, காங்கிரஸ் கூட்டணிக்கு தமிழகத்தில் மிகப் பெரிய அடி விழும், படு தோல்வியைச் சந்திப்பார்கள். ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசும், திமுக அரசும் இலங்கைத் தமிழர்களுக்கு துரோகம் இழைத்து விட்டனர், காக்கத் தவறி விட்டனர் என்ற உணர்வு தமிழக மக்கள் மனதில் விஸ்வரூபம் எடுத்து வியாபித்துள்ளது. இது தேர்தலில் எதிரொலிக்கும். கடந்த ஆறு மாதங்களாக இலங்கைத் தமிழர் பிரச்சினை குறித்து காங்கிரஸ் தலைவர் சோனியாவும், ஐக்கிய முற்போக்குக் கூட்டணியும் பெருத்த அமைதி காத்து வருகின்றனர். இந்தப் பிரச்சினை தொடர்பாக 14 பேர் இதுவரை உயிர் நீத்தும் கூட அவர்களது மவுனம் கலையவில்லை. சிவகங்கை தொகுதியில் ப.சிதம்பரத்திற்கு எதிராக பிரசாரம் செய்த 50 மாணவர்களை போலீஸார் கைது செய்துள்ளனர். இது கண்டனத்துக்குரியது என்றார் வைகோ. இதேவேளை, இன்று காலை சிறிலங்கா அரசு போரை நிறுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழக முதல்வர் கருணாநிதி இன்று காலை ஆறு மணி முதல் சென்னை அண்ணா நினைவிடத்தில் உண்ணாவிரதம் மேற்கொண்டார்.
கலைஞரின் உண்ணாவிரத்தை அறிந்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பிரதமர் மன்மோகன் சிங், உலக தமிழர்கள் பலர் உடல் நலத்தை கருத்தில்கொண்டு உண்ணாவிரத்தை கைவிட வேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர். அத்துடன் மருத்தவர்கள் வந்து அவரது உடல்நிலையைப் பரிசோதித்து தமது கவலையை வெளியிட்டனர். இந்நிலையில் 9 மணிக்கு உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டு பேசிய கலைஞர், இலங்கையில் போர் நிறுத்தப்பட்டு விட்டது என்று மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் உறுதியான தகவலை கொடுத்துள்ளதால் இத்துடன் உண்ணாவிரத்தை முடித்துக்கொள்வதாக அறிவித்தார். தமிழக முதல்வர் இவ்வாறு தெரிவித்துள்ள போதும் சிறீலங்கா அரசு போர் நிறுத்தம் எதனையும் இதுவரை அறிவிக்கவில்லை என்பதுடன் கனரக ஆயுதங்களைப் பாவிக்காமல் தாக்குதலை நடத்தி வருவதாக அறிவித்துள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது.

Tuesday, April 14, 2009

இளைஞர்களே இந்தியாவின் வளர்ச்சி உங்கள் கையில்!

இந்தியா ஒரு விவசாய நாடு என்பது நாம் எல்லோரும் அறிந்ததே. எந்த ஒரு நாட்டிற்கும் பாரம்பரிய தொழில் என்று ஒன்று உண்டு. இந்தியாவுக்கு விவசாயத்தைப் போல. அதே மாதிரி அந்தந்த நாட்டின் வளர்ச்சியும் அந்த பாரம்பரிய தொழிலை சார்ந்தே இருந்தால்தான் அந்த நாடு பொருளாதாரத்தில் திடமான வளர்ச்சி அடைய முடியும் என்பது என் கருத்து. அதற்காக சாப்ட்வேர் தொழில், அல்லது மற்ற துறைகளை ஒதுக்கி விடுங்கள் என்று நான் ஒருபோதும் சொல்ல மாட்டேன். அது மிகவும் தவறு. ஆனால் நம்முடைய பாரம்பரிய தொழிலான விவசாயத்தில் முழுமையான கவனம் செலுத்தாமல் இருந்தோமேயானால் இந்தியா ஒருபோதும் நிரந்தர வளர்ச்சியைக் காண முடியாது.

இன்று ஒரு விவசாயின் நிலைமை எப்படி இருக்கிறது?. நானும் ஒரு விவசாய குடும்பத்தை சேர்ந்தவன் என்பதால் ஒரு விவசாயின் நிலைமைப் பற்றி ஓரளவு தெரியும் என்பதால் இதை சொல்கிறேன். நாங்கள் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு பயிரிட்டு விளைந்ததைப் பற்றியும் இப்போது பயிரிட்டு விளைந்ததைப் பற்றியும் கணக்கில் எடுத்தால் ஒரு விவசாயின் நிலைமையை நன்கு உணரலாம். கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு நாங்கள் ஒரு ஏக்கரில் வேர்க்கடலைப் பயிரிட்டோம். அது விளைந்து அந்த ஒரு ஏக்கரில் இருந்து இருபத்தைந்து மூட்டை பயிறு கிடைத்தது. ஒரு மூட்டைப் பயிறு 1500 ரூபாய் என்று வைத்துக் கொண்டால் 25 மூட்டைப் பயிரின் விலை 37500 ரூபாய். ஆனால் இந்த வருடம் நாங்கள் மூன்று ஏக்கரில் வேர்க்கடலைப் பயிரிட்டு அதனால் கிடைத்த மகசூல் வெறும் 20 மூட்டைதான். ஒவ்வொரு வருடமும் குறைந்து கொண்டே வருகிறதே தவிர கொஞ்சம் கூட மகசூல் அதிகரிக்கவில்லை.

நிலைமை இப்படி இருக்க என்ன காரணம் என்று பார்த்தோமேயானால், பல காரணங்கள் இருக்கின்றன. அதில் ஒன்று விவசாய நிலத்தில் உள்ள மண்ணின் தன்மை முழுவதுமாக கெட்டு போகக்கூடிய நிலையில் இருக்கிறது. காலங்காலமாக நாம் பயன்படுத்தி வந்த செயற்கை உரங்கள் மண்ணின் தன்மையை அடியோடு மாற்றி விட்டன. இயற்கை உரங்களைப் போட்டு பயிர்களை வளர்க்கும் முறை இன்று விவசாயிகளிடம் இல்லை. மற்றொன்று அரசின் அலட்சியம். விவசாய வளர்ச்சிக்கு உண்மையான, தேவையான, முழுமையான பலன் தரக்கூடிய செயல்களை விட்டுவிட்டு குறுகிய நோக்கில், அரசியல் ஆதாயம் தேடும் நோக்கிலேயே இன்று வரை அத்தனை அரசுகளும் செயல்பட்டுள்ளன. இப்போது 60000 கோடி ரூபாய் விவசாய கடனை தள்ளுபடி செய்தார்கள். நல்ல விஷயம்தான். அதனால் சில விவசாயிகள் பயன் அடைந்தார்கள் என்பதை விட பெரும் பணமுதலைகள் தான் அதிகமாக பயன் அடைந்தார்கள். ஆனால் கடன் தள்ளுபடி செய்வதனால் விவசாய வளர்ச்சிக்கு முழு பலன் கிடைக்குமா என்று பார்த்தால் இல்லை என்றே பதில் கிடைக்கும்.

இதற்கு அரசு எந்த மாதிரி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மாவட்டந்தோறும் வேளாண்மை பல்கலைக் கழகங்களை அமைத்து நல்ல வீரியமுள்ள விதைகளை உற்பத்தி செய்து அதனை விவசாயிகளுக்கு குறைந்த விலையில் விற்பனை செய்யலாம். விவசாயிகளுக்கு எந்தெந்த மாதங்களில் எந்தெந்த வகையான பயிர்களை இடலாம் என்று சொல்லி தரலாம். பிறகு முக்கியமாக இயற்கை உரங்களை உற்பத்தி செய்யும் முறை பற்றியும், விவசாய உரங்களை பயன்படுத்தி பயிர்களை விளைவிப்பதை பற்றியும், அதனால் மண்ணின் தன்மை எப்படி வளமையாகின்றன என்பதைப் பற்றியும் சொல்லி தரலாம். இதெல்லாம் அரசு மேற்கொள்ள வேண்டிய சில சீரியசான நடவடிக்கைகள். அதை விட்டுவிட்டு வெறும் கடனைத் தள்ளுபடி செய்வதால் மட்டுமே விவசாயிகள் மகிழ்ச்சியடைய மாட்டார்கள். விவசாய வளர்ச்சிக்கும் அதனால் தொலைநோக்கு பயன் கிடைக்க போவதில்லை.


அடுத்தது விவசாய நிலத்தில் விளையும் பயிர்களுக்கு விவசாயிகளே விலை நிர்ணய செய்யும் நிலை இந்தியாவில் வர வேண்டும். ஒரு சோப்பு தயாரிக்கும் கம்பெனி எப்படி அந்த சோப்புக்கு அதுவே விலையை நிர்ணயம் செய்யுதோ அதே மாதிரி ஒரு விவசாயியும் அவன் விளைவித்த பயிர்களுக்கு அவனே விலை நிர்ணயம் நிலைமை வர வேண்டும். அரசே விவசாயிகள் விளைவித்த பயிரை நேரடியாக உரிய விலை கொடுத்து கொள்முதல் செய்ய வேண்டும். இதெல்லாம் அரசு நினைத்தால் முடியாத காரியமல்ல. உடனடியாக அரசு தீர்க்கமான நடவடிக்கைகளை மனசாட்சியோடு எடுக்க வேண்டும். அப்போதுதான் விவசாயம் வளர்ச்சி பெரும்.

முடிவாக ஒன்று. ஒரு இன்ஜினியர் தந்தை தன் மகன் ஒரு இன்ஜினியர் ஆக வேண்டும் என்று ஆசைப் படுகிறார். ஒரு டாக்டர் தந்தை தன் மகன் ஒரு டாக்டர் ஆக வேண்டும் என்று ஆசைப்படுகிறார். ஒரு பிசினஸ் மேன் தன் மகன் ஒரு பெரிய பிசினஸ் மேக்னட்டாக வரவேண்டும் என்று ஆசைபடுகிறார். எதுவும் தவறில்லை. ஆனால் ஒரு விவசாயி தந்தை தன் மகன் ஒரு பெரிய விவசாயியாக வரவேண்டும் என்று ஏன் நினைப்பதில்லை. அவனை ஊக்கப்படுத்துவதில்லை. இது எவ்வளவு பெரிய தவறு. பிறகு பிற்காலத்தில் யார் விவசாயம் செய்வார்கள். உணவிற்காக மற்ற நாடுகளிடம் பிச்சை எடுக்க வேண்டிய நிலைமை வரவேண்டுமா?. என்று ஒரு விவசாயி தன் மகனும் ஒரு விவசாயியாக வரவேண்டும் என்று நினைக்கிறானோ அன்றுதான் இந்தியாவின் உண்மையான வளர்ச்சி தொடங்கும். இளைஞர்களே கொஞ்சம் யோசித்து பாருங்கள். இப்போது வேறு வேலை பார்த்தாலும் பிற்காலத்தில் உங்களால் முடிந்த அளவு விவசாய வளர்ச்சிக்கு உறுதுணையாய் இருங்கள். வணக்கம்.

Sunday, April 12, 2009

இந்த தேர்தலில் விஜயகாந்தின் பலம்


இந்த லோக்சபா தேர்தலில் யார் ஜெயிக்க போகிறார்கள் என்பதைப் பற்றிய ஒரு சிறிய அலசல் இது. கிட்டத்தட்ட எல்லா கட்சிகளும் தங்களது வேட்பாளர்களை அறிவித்து விட்டன. இதில் யார் நிறைய தொகுதிகளை வென்று முதலிடம் பிடிக்க போகிறார்கள் என்பது இன்னும் புரியாத புதிராகவே உள்ளது. இதில் இலங்கை பிரச்சினை யார் ஜெயிக்கப் போகிறார்கள் என்பதை தீர்மானிக்கும் ஒரு விஷயமாக இருக்குமா?. திமுகவின் சாதனைகள் இந்த தேர்தலில் அதற்கு முதன்மை பெற்று தருமா?. இப்படி பல கேள்விகள் நமக்குள் இருக்கின்றன.

இருந்தாலும் இந்த தேர்தலில் திமுக ஜெயிக்கும் என்பது என் பலமான கருத்தாக உள்ளது. காரணம் அந்த அரசின் சாதனைகள். ஒரு கிலோ அரிசி ஒரு ரூபாய் என்ற திட்டம் ஏழைகள் மற்றும் நடுத்தர மக்களின் பலமான வரவேற்பை பெற்றுள்ளன. ஏழை விவசாயிகளின் ஏழாயிரம் கோடி ரூபாய் தள்ளுபடி ஒரு நல்ல விஷயம். அதே மாதிரி மத்திய அரசு அறிவித்த 60000 கோடி ரூபாய் தள்ளுபடி இந்த தேர்தலில் பிரதிபலிக்கும் என்பதும் எனது கருத்தாக உள்ளது. இலவச கலர் டிவி திட்டம், ஏழைகளுக்கு இரண்டு ஏக்கர் திட்டம், ஒரு லட்சம் ரூபாய் இன்சூரன்ஸ் திட்டம் என்று பல திட்டங்களை திமுக அரசு செயல்படுத்தியுள்ளது. இவையெல்லாம் இந்த திமுக அரசுக்கு வெற்றியைப் பெற்றுக் கொடுக்கும் என்பது என் யூகம்.

ஆனால் இந்த தேர்தலில் திமுக அரசின் கூட்டணி கொஞ்சல் பலவீனமாகவே உள்ளது. போன தேர்தலில் 40/40 என்று ஜெயித்தவர்கள் இந்த தேர்தலில் கண்டிப்பாக அந்த விகிதத்தில் ஜெயிக்க முடியாது என்பது அனைவரும் அறிந்ததே. அதே மாதிரி அதிமுக இந்த தேர்தலில் பலமான கூட்டணியுடன் களமிறங்குகிறது. அது அதிமுக கட்சிக்கு ஒரு பழம். ஆனால் அதிமுக ஒரு பொறுப்புள்ள எதிர்கட்சியாக செயல்பட்டுள்ளதா என்று பார்த்தால் கண்டிப்பாக இல்லை என்றே சொல்ல தோன்றும். ஆ ஊ என்றால் ஜெயலலிதா சிறுதாவூர் பங்களாவுக்குள் ஓடி மறைந்து கொள்கிறார். பாமகவுக்கு உள்ள மரியாதையை ராமதாசே கெடுத்துக் கொண்டார். வைகோவை பற்றி சொல்ல தேவையில்லை. ஒன்றுக்கும் ரெண்டுக்கும் ஜெயலலிதாவிடம் கையேந்திக் கொண்டிருக்கிறார். அவர் காட்சியில் அவரைத் தவிர வேறு யாரும் இல்லை. நாஞ்சில் சம்பத்தும் சிறையில் இருக்கிறார்.

இதில் கேப்டன் விஜயகாந்த் என்ற ஒருவர் தான் தேறுகிறார். இந்த தேர்தலில் தனியாக களம் காண்பது அவருக்கு மிகுந்த பலத்தைக் கொடுத்துள்ளது. மற்ற கட்சிகளின் வயிற்றில் புளியைக் கரைத்துள்ளது. இளைஞர்களின் ஒட்டு அந்த கட்சிக்கு நிறையவே உள்ளது. நான் கேட்ட நிறைய பேர் விஜயகாந்துக்கு ஒட்டு போடுவார்கள் என்றே சொன்னார்கள். அதை வைத்து பார்க்கும் போது இந்த தேர்தலில் அவர் ஒரு அசைக்க முடியாத சக்தியாக விளங்குவார் என்பது மறுக்க முடியாத உண்மை. இந்த தேர்தலில் கண்டிப்பாக 15 சதவீத ஓட்டுக்களை பெறுவார் என்று நம்புகிறேன். சரி இந்த தேர்தலில் எந்தெந்த கட்சி எத்தனை இடங்களைப் பெறும் என்று இங்கே கொடுத்துள்ளேன்.

திமுக - 23

அதிமுக - 13

தேமுதிக - 4

தேமுதிக இந்த தேர்தலில் நான் மேலே குறிப்பிட்டுள்ள நான்கு தொகுதிகளில் ஜெயித்தால் அவருக்கு அது மிகப்பெரிய வெற்றியாக இருக்கும். இது லோக்சபா தேர்தல் என்றாலும் மாநில அரசின் சாதனைகள் திடமாக பிரதிபலிக்கும்.
சரி இலங்கைப் பிரச்சினைப் பற்றி பேசவே இல்லையே என்று கேட்கிறீர்களா?. ஆனால் அந்த பிரச்சினை இந்த தேர்தலில் ஒரு தீர்மானிக்கும் சக்தியாக இருக்காது. பெரும்பாலான மக்கள் அதை ஒரு தேர்தல் பிரச்சினையாக நினைக்கவில்லை.

Wednesday, April 8, 2009

இந்தியாவும் பாகிஸ்தானும் இணைந்தால்!

எனக்கு ரொம்ப நாளாக ஒரு ஆசை. ஒரு விஷயத்தைப் பற்றி அலசாமலேயே வெறும் தலைப்பைக் கொடுத்துவிட்டு நம்முடைய பிளாக் நண்பர்களின் கருத்தை அறிய வேண்டும் என்று. என்ன தலைப்புக் கொடுக்கலாம் என்று யோசித்த போது மனதில் உதித்ததுதான் மேலே சொன்ன தலைப்பு.

சரி விஷயத்திற்கு வருவோம். சுதந்திரத்திற்கு முன்பு இந்தியாவும் பாகிஸ்தானும் ஒன்றாக இருந்தது என்பது அனைவரும் அறிந்ததே. இப்போது இரண்டும் எதிரி நாடாக இருப்பதும் அனைவருக்கும் தெரிந்த விஷயமே. இரண்டு நாடுகளும் மறுபடியும் சேருவது என்பது நடக்கக் கூடிய காரியமா?. ஒருவேளை அப்படி இரு நாடுகளும் சேர்ந்தால் அது இந்தியாவுக்கு லாபமா அல்லது நஷ்டமா?. அல்லது பாகிஸ்தானுக்கு அது லாபமா இல்லை நஷ்டமா?. இதனால் இரு நாடுகளும் பயனடையுமா?. இதற்கெல்லாம் என்னிடம் தெளிவான பதில் இல்லை. அதனால் வாசகர்களாகிய நீங்கள் தான் என்னுடைய சந்தேகத்தை தீர்க்க வேண்டும். ஆவலுடன் உங்கள் கருத்தை எதிர்பார்க்கிறேன்.

Tuesday, April 7, 2009

வடகொரியா ஏவுகணை சோதனையும், இந்தியா கற்றுக் கொள்ள வேண்டிய பாடமும்!

சில நாட்களுக்கு முன்பு வடகொரியா நீண்ட தூரம் சென்று தாக்கக்கூடிய ஏவுகணையை சோதனை செய்தது. இதற்கு உலகின் பல பகுதிகளில் இருந்தும் எதிர்ப்பு கிளம்பின. முக்கியமாக அமெரிக்காவிடம் இருந்து. வடகொரியா ஏவுகணை சோதனை செய்தது சரியா? அல்லது தவறா? என்று பல பகுதிகளில் இருந்தும் சந்தேகங்கள் கிளம்பியுள்ளன. அதைப் பற்றி கீழே சற்று அலசுவோம்.
எந்த ஒரு நாடும் அதிநவீன போர் உபாயங்களை சோதனை செய்தால் அதற்கு முதலில் எங்கிருந்து எதிர்ப்பு கிளம்புகிறது என்று பார்த்தால் அது அமெரிக்காவில் இருந்துதான். காரணம் ராணுவத்தில் தான்தான் பெரிய ஆளாக (தாதா) இருக்க வேண்டும் என்ற மனோபாவம். வடகொரியா தற்போது சோதித்துள்ள ஏவுகணை 7600 கிலோமீட்டர் தூரம் சென்று தாக்கக்கூடிய ஏவுகணையாம். அதாவது அமெரிக்காவின் அலாஸ்கா நகரத்தைக் கூட இந்த ஏவுகணையால் தாக்க முடியுமாம். ஆனால் இந்த சோதனை சில வினாடிகளிலேயே தோல்வி அடைந்ததாக அமெரிக்கா கூறுகிறது. வடகொரியாவிற்கு நீண்ட தூரம் சென்று தாக்கக்கூடிய திறன் கொண்ட ஏவுகணையை வெற்றிகரமாக செலுத்தக்கூடிய திறன் இல்லை என்றும் அமெரிக்க கூறுகிறது. அவ்வாறு செலுத்துவது மிகவும் கடினமான காரியம் என்றும் இன்னும் பத்து வருடத்திற்கு வடகொரியாவால் அத்தகைய ஏவுகணையை வெற்றிகரமாக சோதிக்க முடியாது என்றும் அமெரிக்க கூறியுள்ளது. வடகொரியா ஏற்கனவே நிறைய ஏவுகணையை சோதனை செய்துள்ளது. ஆனால் நிறைய சோதனை தோல்வியிலேயே முடிந்துள்ளது. இருந்தாலும் அவற்றை ராணுவத்தில் சேர்த்துள்ளது. போர் சமயத்தில் அத்தகைய ஏவுகணையை செலுத்தினால் அது தவறாக வேறு பகுதியில் விழுந்து அது நிறைய மக்கள் மடிவதற்கு காரணமாக இருக்கும்.

சரி முக்கியமான விஷயத்திற்கு வருவோம். ஏன் வடகொரியா ஏவுகணை சோதனை நடத்தினால் அமெரிக்காவிற்கு கோபம் வருகிறது. அமெரிக்கா மட்டும் மற்ற நாடுகளைத் தாக்கக்கூடிய நீண்ட தூர ஏவுகணை சோதனை செய்யலாம். அமெரிக்காவிடம் 10000 கிலோமீட்டர் தூரம் வரை சென்று துல்லியமாக தாக்கக்கூடிய ஏவுகணைகள் பல உள்ளன. மற்ற நாடுகள் அணுகுண்டு சோதனை செய்தால் அதன் மீது பொருளாதாரத் தடை விதிக்கும் அமெரிக்கா தன்னிடம் மட்டும் 10000 - க்கும் அதிகமான அணுகுண்டுகளை வைத்துள்ளன. இதை அனைத்து நாடுகளும் சிந்தித்துப் பார்க்க வேண்டும். முக்கியமாக இந்தியா அதனை கருத்தில் கொள்ள வேண்டும்.
அமெரிக்காவின் இந்த பெரிய அண்ணன் கொள்கையை மற்ற மற்ற நாடுகள் கடுமையாக எதிர்க்க வேண்டும். இதில் சீனாவின் கொள்கையை அனைத்து நாடுகளும் பின்பற்ற வேண்டும். எனக்குத் தெரிந்து அமெரிக்காவை தைரியமாக எதிர்க்கக் கூடிய நாடு எது என்றால் அது சீனாவாகத்தான் இருக்க முடியும். அந்த தைரியம் மற்ற நாடுகளுக்கும் இருக்க வேண்டும். குறிப்பாக இந்தியா இந்த விஷயத்தில் சீனாவை முழுமையாக பின்பற்ற வேண்டும். அமெரிக்கா எது சொன்னாலும் தலையாட்டும் மனோபாவத்தை இந்தியா விடவேண்டும். இந்தியாவால் எந்த ஒரு விஷயத்தையும் சுயமாக சிந்தித்து முடிவு எடுக்கக் கூடிய தைரியம் வரவேண்டும்.

வடகொரியா ஏவுகணை சோதனை செய்தது மிகச்சரியே. எந்த ஒரு நாட்டுக்கும் தன்னைக் காத்துக் கொள்ள கூடிய சக்தி இருக்க வேண்டும். அது அமெரிக்காவிடம் மட்டும் இருக்க வேண்டிய விஷயமல்ல. இதற்காக அமெரிக்காவிடம் அனுமதி வாங்கிவிட்டா செய்ய முடியும். வடிவேலு பாஷையில் சொன்னால் இது சின்ன புள்ள தனமா இல்ல இருக்கு. இறையாண்மையை எந்த ஒரு நாடும் விட்டுக் கொடுக்க முடியாது. அப்படி விட்டுக் கொடுத்தால் அந்த நாடு அழிவின் பாதையை நோக்கி செல்கிறது என்று அர்த்தம். இந்தியா இந்த விஷயத்தில் நிறைய கற்றுக் கொள்ள வேண்டும்.

Monday, April 6, 2009

அயன் - திரைவிமர்சனம்

இரண்டு நாட்களுக்கு முன்பே அயன் திரைப்படத்தை சென்னை சைதாபேட்டை ராஜ் தியேட்டரில் பார்த்து விட்டேன். ஆனால் இன்று தான் விமர்சனம் எழுத நேரம் கிடைத்தது. சரி கதைக்கு வருவோம்.

பிரபு கள்ளக்கடத்தல் செய்யும் ஆசாமி. சூர்யா அவரிடம் வேலை பார்க்கிறார். சூர்யாவின் அப்பாவும் பிரபுவிடம் வேலை பார்த்தவர்தான். அவரை எதிரிகள் கொன்று விடுகிறார்கள். அதனால் சூர்யாவும் பிரபுவிடம் வேலை பார்ப்பது அவரது அம்மாவுக்கு பிடிக்கவில்லை. எங்கே தன் மகனுக்கும் தன் கணவனின் கதி வந்துவிடுமோ என்று பயப்படுகிறார். ஆனால் சூர்யா பிரபுவிடமே வேலை செய்கிறார். சூர்யா அழகாய் இருக்கிறார். அதேபோல் தமன்னாவும்.

காங்கோவில் சூர்யா வைரம் கடத்தும் போது அதை எதிரிகள் பறித்து விட்டு ஓடும் போது வரும் சண்டை காட்சிகளை மிக அருமையாய் எடுத்து இருக்கிறார்கள். அது ஏதோ ஒரு ஆங்கில படத்தில் வரும் சண்டை காட்சியாம். இருந்தாலும் அருமையாய் இருக்கிறது. வில்லனின் அடியாளாக வரும் விஜய் டிவி நண்டு சூர்யாவிடம் சேர்ந்து வில்லனுக்காக வேவு பார்க்கிறார். அவரது தங்கைதான் தமன்னா. ஆனால் அண்ணன் நண்டுவை மாமா ரேஞ்சுக்கு காட்டியிருக்கிறார்கள். தங்கையை ஐட்டம் என்று சொல்கிறார். அதனைத் தவிர்த்திருக்கலாம். மற்றபடி நண்டு நன்றாக நடித்திருக்கிறார்.

வில்லன் தமிழ் சினிமாவிற்கு புதுசு. நடிப்பில் இன்னும் கொஞ்சம் தேறனும். இந்தியாவிலிருந்து வெளிநாட்டிற்கு வயிற்றில் வைத்து போதை மருந்து கடத்துவதும், அதனை வயிற்றைக் கிழித்து வெளியே எடுப்பதும் நெஞ்சைப் பிழியும் உண்மைகள். கள்ளக்கடத்தல் சூர்யாவை வைத்தே கள்ளக்கடத்தல்காரர்களை பிடிக்கும் வேலையை கட்சிதமாக செய்கிறார் பொன்வண்ணன். கடைசியில் சூர்யாவிற்கு கஸ்டம்ஸ் ஆபீஸில் வேலை போட்டுக் கொடுப்பது கமர்ஷியல் சினிமா.

ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் அனைத்து பாடல்களும் நன்றாக இருக்கிறது. எம். எஸ். பிரபுவின் ஒளிப்பதிவு நன்றாக இருக்கிறது. இயக்குனர் கே.வி. ஆனந்த் படத்தை ஜாலியாக இயற்றியிருக்கிறார். இடைவேளைக்குப் பிறகு படம் ஜெட் வேகத்தில் போகும் என்று பார்த்தால் கொஞ்சம் ஆமை வேகத்தில் போகிறது. அதனைக் கொஞ்சம் தவிர்த்திருக்கலாம். அவரின் முதல் படமான கனா கண்டேன் எனக்கு மிகவும் பிடித்த படம். அந்த படம் பின்பாதியில் மிகவும் விறுவிறுப்பாக இருக்கும். ஆனால் இந்த படத்தில் அது மிஸ்ஸிங். மற்றபடி சூர்யா பிரமாதபடுத்தியிருக்கிறார். சூர்யாவின் மானரிசம் ஒவ்வொரு படத்திலும் நல்ல வித்தியாசம். படத்தை ஜாலியாக ஒருமுறை பார்க்கலாம்.

Sunday, April 5, 2009

படுக்கையறை


நீல வெளிச்சத்தில்
விலக்கப்பட்ட முள்தேடி
ஓயாமல் சுழல்கிறது
இசைத்தட்டு

திராட்சை பறிக்கும் பெண்ணின்
ஓவியத்திற்குக் கீழே
வெறுமையாக உள்ளது
பழக்கூடை

பூனைகளுக்குக்
குழந்தைகளின் குரலைக் கொடுத்து
எதையெதையோAdd Imageகேட்க வைக்கிறது
இந்த இரவு

கவிஞர் - பழநிபாரதி
புத்தகம் - புறாக்கள் மறைந்த இரவு

Friday, April 3, 2009

புத்தகம் எழுத உங்களுக்கு ஆசையா?

உங்களுக்கு புத்தகம் எழுத வேண்டும் என்று ஆசையா?. அப்படியென்றால் இதனை சிறிது நேரம் படியுங்கள். மனிதனாய்ப் பிறந்த ஒவ்வொருவருக்கும் ஒரு பொழுதுபோக்கு இருக்க வேண்டும். அது விளையாட்டாக இருக்கலாம்; நெட்டில் அரட்டை அடிக்கலாம்; பூங்காவிற்கு செல்லலாம்; பிளாகில் கிறுக்கலாம் (என்னை மாதிரி); சினிமாவிற்கு செல்லலாம்; இப்படி நிறைய பொழுதுபோக்குகள் இருக்கின்றன. அப்படி ஒன்றுதான் புத்தகம் எழுத ஆரம்பிப்பது. ஆனால் புத்தகம் எழுத வேண்டும் என்றால் உங்களுக்கு தேவையான மிக முக்கியமான ஒன்று புத்தகம் எழுத வேண்டிய ஆர்வம் உங்களுக்கு கொஞ்சம் இருக்க வேண்டும். ஆர்வம் இல்லாமல் புத்தகம் எழுத ஆரம்பிக்காதீர்கள்.

எந்த வேலையை செய்தாலும் அதில் ஒரு ஐம்பது சதவீதமாவது ஆர்வம் இருக்க வேண்டும். அதற்கு மேல் இருந்தால் மிக்க நலம். சரி மேட்டருக்கு வருவோம். உங்களுக்கு புத்தகம் எழுத வேண்டிய ஆர்வம் இருந்தால் எதைப் பற்றி எழுத வேண்டும் என்று நிச்சயம் நீங்கள் யோசித்து வைத்திருப்பீர்கள். உதாரணமாக சிலருக்கு காதல் காதல் கவிதைகள் எழுத வேண்டும் என்று ஆர்வம் இருக்கும். சிலருக்கு சிறுகதைகள் எழுத வேண்டும் என்று ஆர்வம் இருக்கும். சிலருக்கு தன்னம்பிக்கை கட்டுரை எழுத வேண்டும் என்ற ஆர்வம் இருக்கும். சிலருக்கு அன்றாட வாழ்க்கையின் மற்றும் மனிதர்களின் நிஜங்களைப் பற்றி எழுத வேண்டும் என்று ஆர்வம் இருக்கும். இவை சில உதாரணங்கள் தான். இன்னும் எக்கச்சக்கமான உதாரணங்கள் இருக்கின்றன. உங்களுக்கு பிடித்தமானவற்றை தேர்வு செய்து கொள்ளலாம்.

உதாரணத்திற்கு நீங்கள் அன்றாட மனிதர்களின் வாழ்க்கையைப் பற்றி எழுத விரும்புகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். தினமும் நீங்கள் பேருந்தில் பயணம் செய்வீர்கள். ரயிலில் பயணம் செய்வீர்கள். நீங்கள் வேலை செய்யும் அலுவலகத்தில் நிறைய பேரை காணக் கூடும். அவர்களின் செயல்கள் உங்களுக்கு வித்தியாசமாக தெரியலாம். நீங்கள் பேருந்தில் பயணம் செய்யும் போது பல எளிமையான மனிதர்களை பார்த்திருப்பீர்கள். நான் பேருந்தில் பயணம் என்று சொல்வது சென்னையில் பயணம் செய்வதை அல்ல. சென்னையில் இருந்து வெளியூருக்கு பயணம் செய்வதைத்தான் சொல்கிறேன். சென்னையில் நான் தினமும் பயணம் செய்கிறேன். ஆனால் எனக்கு ஒரு கற்பனையும் வரவில்லை. அதற்கு சில அமைதியான சூழ்நிலை நிலவ வேண்டும்.


சரி. இப்போது நீங்கள் உங்கள் சொந்த ஊருக்கு சென்னையில் இருந்து பயணம் செய்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். ஊர் போய் சேர குறைந்தது எட்டு மணி நேரம் ஆகும் என்று வைத்துக் கொள்வோம். இதில் முக்கியமான ஒன்று நீங்கள் பேருந்தில் பயணம் செய்யும் போது ஜன்னலோர இருக்கையை தேர்வு செய்வது அவசியம். அப்போதுதான் வெளி உலகை ரசிக்க முடியும். உலகத்தை முழுமையாக அனுபவிக்க முடியும். காணும் மனிதர்களின் உள்ளங்களைக் களவாட முடியும். அவர்களின் மனதில் வழிந்தோடும் எண்ணங்களைப் புரிந்து கொள்ள முடியும். அவர்களின் சுகதுக்கங்களை அறிந்து கொள்ள முடியும். பாடும் பறவைகளின் ஓசையை ரசிக்க முடியும். கூவும் குயில்களின் கூரிய இசையை சந்திக்க நேரிடும். சாலையோரத்தில் ஆடுமாடுகள் மேய்த்துக் கொண்டிருக்கும் சிறுவர் சிறுமியர்களின் நிஜ வாழ்க்கையின் நிஜத்தினைப் புரிந்து கொள்ள முடியும். அவர்களின் மனதில் உள்ள சந்தோஷங்கள், கவலைகள், ஆசைகள், நிராசைகள் என பலவற்றை நீங்கள் புரிந்து கொள்ள முயல்வீர்கள். நானும் நிறைய முறை மாடு மேய்த்து இருக்கிறேன். இப்போது வீட்டுக்கு சென்றாலும் நான் மாடு மேய்ப்பேன்.

நான் பயணம் செய்யும் போது ஒவ்வொரு முறையும் ஆடுமாடுகள் மேய்க்கும் சிறுவர் சிறுமிகளை பார்த்திருக்கிறேன். அவர்களை எண்ணி மிகவும் மகிழ்ந்திருக்கிறேன். அதே சமயம் அதே அளவு வருத்தமும் இருக்கும். அவர்கள் மகிச்சியாக இருக்கிறார்களா. அவர்களுக்கும் ஆசைகள் இருக்கும்; நிறைய சம்பாதிக்க வேண்டும்; சந்தோஷமாக இருக்க வேண்டும்; அவர்களின் ஆசைகளை எப்படி அவர்கள் நிறைவேற்றிக் கொள்வார்கள் என இப்படி பல வருத்தங்கள் எனக்குள் இருக்கும். அவர்களின் மனதிற்குள் இருக்கும் ஆசைகளை அவர்களின் வாயிலாக கேட்க வேண்டும் என்று எனக்கு நீண்ட நாட்களாக ஆசை. ஆனால் அது இன்னும் நிறைவேறவில்லை. நான் நிறைவேற்றிக் கொள்ளவில்லை. இன்னும் மனிதர்களின் உள்ளங்களை நன்றாக புரிந்து கொள்ள வேண்டும் என்றால் நிறைய மனிதர்களை சந்தியுங்கள். நகரத்து மனிதர்களை அல்ல; கிராமத்து மனிதர்களை. எளிமையான மனிதர்களை. குக்கிராமங்களுக்கு பயணம் செல்லுங்கள். அங்கு வாழும் எளிமையான, உண்மையான, கருப்பு உருவத்தில் இருக்கும் வெள்ளை மனிதர்களை, குடிக்க நீர் கேட்டால் மோர் கொண்டு வந்து கொடுக்கும் சங்க காலத்து விருந்தோம்பல் மிக்க மனிதர்களிடம் பேசிப் பழகுங்கள். பிறகு நீங்களே எழுத வேண்டாம் என்று நினைத்தால் கூட உங்களால் எழுதாமல் இருக்க முடியாது.

சரி. முதலில் எழுத ஆரம்பிப்பவர்கள் சிறிது சிறிதாக எழுத ஆரம்பிக்கலாம். ஒரே அடியாக பெரிய புத்தகமாக எழுத நினைக்காதீர்கள். முதலில் ஒரு ஐந்து பக்கம் அல்லது பக்கம் கொண்ட சின்ன கட்டுரை எழுதிப் பழகலாம். நீங்கள் எழுதியதை மற்றவர்களிடம் காட்டி கருத்துகள் கேட்கலாம். அவருக்கும் அதில் ஆர்வம் இருக்க வேண்டும். சிலர் உங்கள் முயற்சியை கேலி செய்யலாம். அவர்களைக் கண்டுகொள்ளாதீர்கள்; அவர்களை அலட்சியப்படுத்திவிடுங்கள். நீங்கள் எழுதியதை பத்திரிகை எழுத்தாளர்களை தொடர்பு கொண்டு அவர்களின் கருத்துகளைக் கேட்கலாம். அவர்களின் உதவியை நாடலாம். நீங்கள் நல்ல சிறந்த எழுத்தாளராக வர வேண்டும் என்று நினைத்தால் நிறைய புத்தகங்களைப் படியுங்கள். நான் கூறியது உங்களுக்கு சிறிதளவாவது பயனுள்ளதாக இருந்திருக்கும் என்று நினைக்கிறேன். விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன.

பின்குறிப்பு:

கவிப்பேரரசு வைரமுத்துவின் கள்ளிக்காட்டு இதிகாசம் என்ற நூலைப் படியுங்கள். மிகச் சிறந்த நூல். விலை அதிகமில்லை. நூற்று பத்து ரூபாய்தான்.

Thursday, April 2, 2009

உங்கள் ஒட்டு கேப்டன் விஜயகாந்திற்கு!


நான் ஏற்கனவே சொன்னது போல விஜயகாந்த் இந்த தேர்தலில் தனித்தே களம் காண்கிறார். அவருக்கு என்னுடைய வாழ்த்துக்கள். வேறு யாராவது இந்த தேர்தலில் தனித்து நிற்கிறார்களா?. இல்லை. ஏன்?. ஏனென்றால் அவர்களுக்கு பயம். தனியாக நின்றால் தோற்றுவிடுவோமோ என்ற பயம். இத்தனை வருடங்கள் திமுகவும் அதிமுகவும் தமிழ்நாட்டை மாறி மாறி ஆட்சி செய்தார்களே, இன்னும் ஏன் அவர்களுக்கு தனியாக நிற்க தைரியம் வரவில்லை. அவர்களுக்கே தெரியும் அவர்கள் மக்களாட்சி செய்யவில்லை என்று.

கருணாநிதி மக்களாட்சி என்பதை தன் மக்களுக்கு (குடும்பம்) செய்ய வேண்டிய ஆட்சி என்று நினைத்து விட்டார். அதனால் தான் இன்று பல கோடிகளுக்கு அதிபராகி விட்டார். முதல்வன் படத்தில் வருவது போல கருணாநிதி அரசியலில் நுழையும் பொது எவ்வளவு ரூபாய் வைத்து இருந்திருப்பார். மிஞ்சிப்போனால் ஒரு லட்சம் ரூபாய் வைத்து இருந்திருப்பாரா? (இதுவே அதிகம் என்று நினைக்கிறேன்.). ஆனால் இன்று எத்தனை கோடிகள் வைத்திருப்பார். ஒரு பத்தாயிரம் கோடிகள். இல்லை மேலும் இருக்கும் என்று உறுதியாக நம்புகிறேன். கருணாநிதி எவ்வளவு பணம் வைத்திருப்பார் என்று அவருக்கே தெரியாது. ஏனென்றால் தினமும் அவர் கஜானாவில் கோடிக்கணக்கில் பணம் ஏறிக்கொண்டேயிருக்கும். எல்லாம் மக்களின் வரிப்பணம். அரசாங்கமே அவர் கையில் இருக்கிறதல்லவா. அரசாங்கத்தை அவர் கையில் கொடுத்தது மக்கள் தானே. அதற்கான பலன் தான் இது. நியூட்டனின் மூன்றாம் விதி என்ன சொல்கிறது?. ஒவ்வொரு செயலுக்கும் ஒரு எதிர்ச்செயல் உண்டு. (For every action, there is an equal and opposite reaction) அதைத்தான் இன்று தமிழக மக்கள் அனுபவித்து கொண்டிருக்கிறார்கள்.

அடுத்தது ஜெயலலிதா (இவரை அம்மா என்று அதிமுகவினர் அன்போடு அழைப்பார்களாம்.என்ன கொடுமை சரவணன் இது). யாரை அம்மா என்று சொல்ல வேண்டும் என்று தமிழக அரசியல்வாதிகளுக்கு ஒரு நாள் தனியாக பாடம் எடுக்க வேண்டும். அவர் மேல் எத்தனை ஊழல் வழக்குகள். என்னால் என்ன முடியவில்லை. ஆனால் எனக்கு ஜெயலலிதாவிடம் பிடித்தது அவரது தைரியம். ஆணாதிக்கம் மிக்க அரசியலில் தன்னாலும் கொள்ளையடிக்க முடியும் என்று நிரூபித்து காட்டியிருக்கிறார். எவ்வளவு வழக்குகள் போட்டாலும் நான் பயப்பட மாட்டேன், நான் கொள்ளையடித்து கொண்டே இருப்பேன் என்ற அந்த தைரியம் தான் எனக்கு அவரிடம் மிகவும் பிடித்தது.


அடுத்தது நம் ராமதாஸ் (இவரை கொய்யா ஸாரி அய்யா என்று கூப்பிடுவார்கள்). நம் விஜயகாந்த் சொன்னது மாதிரி இவர் ஐந்து வருடம் வேஷ்டியைத் துவைப்பார். இன்னொரு ஐந்து வருடம் சேலையைத் துவைப்பார். போன ஜென்மத்தில் டோபியாக (மற்றவர்களின் துணிகளைத் துவைப்பவர்கள்) பிறந்திருப்பார் என்று நினைக்கிறேன். (டோபிகளை தவறாக நினைக்கிறேன் என்று யாரும் என்னை நினைக்க வேண்டாம். அவர்களின் மேல் எனக்கு மிகுந்த அன்பு உள்ளது). இவர் கடைசி நிமிடம் வரைக்கும் காங்கிரஸில் இருந்து விட்டு (மகன் அன்புமணியின் பதவிக்காக மற்றும் மக்கள் டிவியின் அரசாங்க விளம்பிரத்திற்கு) பதவிக்காலம் முடிய இரண்டு மாதம் மட்டுமே உள்ள நிலையில் அதிமுகவிடம் பணம் வாங்கிக் கொண்டு சகோதரி (ஐந்து வருடத்திற்கு ஒருமுறை தத்து எடுத்து விடுகிறார்) ஜெயலலிதாவின் சேலையைத் துவைக்க கிளம்பி விட்டார். இவருக்கு இதெல்லாம் ஒரு பொழப்பு. இதுக்கு பேசாம ....... கட்.கட்..வேண்டாம்... அதற்கு மேல் என் வாயில் நல்ல வார்த்தைகள் இல்லை.


அடுத்தது கேப்டன். விஜயகாந்தை விஜயகாந்த் என்று சொல்வதை விட அவரை கேப்டன் என்று சொல்வதே எனக்கு பெருமையாக இருக்கிறது. அவருக்கு அந்த பெயர் மிக பொருத்தமாக இருக்கிறது. உங்களுக்கும் அப்படித்தான் என்று நினைக்கிறேன். அவர் நடிகனாக ஆரம்பித்து, அவர் பின்னாடி இன்று இவ்வளவு லட்சக்கணக்கான ரசிகர்கள் சேர்ந்தது வரை அவருடைய உழைப்பு எவ்வளவு இருந்திருக்கும். அவர் இருக்கும் உருவத்திற்கு அவர் நடிகனாக நுழைந்ததே பெரிய விஷயம். இன்று வரை நீடித்து நிற்பது அதை விட பெரிய விஷயம். லட்சக்கணக்கான ரசிகர்களை இவ்வளவு கட்டுக்கோப்புடன் வைத்திருக்கும் அவரை கேப்டன் என்று சொல்வதில் தவறில்லை என்றே நினைக்கிறேன்.

நின்ற முதல் சட்டசபைத் தேர்தலில் விருத்தாசலம் தொகுதியில் பதினைந்தாயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் ஜெயித்தார். எப்படி?. மக்கள் அவர் மேல் நம்பிக்கை வைத்தார்கள். அவர் மக்கள் மீது நம்பிக்கை வைத்தார். அதனால் தான் இன்று வரை தனித்தே நிற்கிறார். அவர் நினைத்திருந்தால் பல கோடிகளைப் பெட்டியில் வாங்கிக் கொண்டு போயிருக்க முடியும். ஆனால் அப்படி செய்யவில்லை. மக்களுக்கு ஏதாவது நல்லது செய்ய வேண்டும் என்று நினைத்தார். இவ்வளவு காலம் திமுகவுக்கும் அதிமுகவுக்கும் மாறி மாறி ஒட்டு போட்டோம். ஒரு மயிரும் நடக்கவில்லை. ஒரு தடவை கேப்டன் விஜயகாந்திற்கு போடுவோம். என்ன செய்கிறார் என்று பார்ப்போம்.


பின்குறிப்பு:

யார் மனதாவது புண்படும்படி எழுதியிருந்தால் என்னை மன்னிக்கவும் (ஹி.ஹி. ஹி.).