Friday, March 27, 2009

விபத்தில் பலியான ஆசிரியருக்கு சேரன் நடத்திய அஞ்சலி!


விபத்தில் பலியான் தன் முன்னாள் ஆசிரியருக்கு இயக்குநர் சேரன் அஞ்சலிக் கூட்டம் நடத்தினார்.

சேரனுக்கு சிறு வயதில் ஆசிரியராக இருந்தவர் கே. சுவாமிநாதன் (வயது 58). சேரன் படித்த மதுரை அருகே உள்ள மேலூரை அடுத்த ஒக்குப்பட்டி நடுநிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராகப் பணியாற்றியவர். அவர் மீது சேரனுக்கு அதிக அன்பும் மரியாதையும் உண்டு. காரணம் சேரனுக்கு பல நிலைகளிலும் பக்க பலமாக இருந்தவர் சுவாமிநாதன்.

சமீபத்தில் ஆசிரியர் சுவாமிநாதன் வாகன விபத்தில் பலியானார். அவரது உடல் உறுப்புகளை குடும்பத்தினர் தானம் செய்தனர். கண்கள், சிறுநீரகம், கல்லீரல், இருதய வால்வு போன்றவை 6 பேருக்கு பொருத்தப்பட்டன.

இதையடுத்து சுவாமிநாதனுக்கு அஞ்சலி மற்றும் பாராட்டு கூட்டத்தை சேரன் ஏற்பாடு செய்து நடத்தினார். சென்னையில் இருந்து நடிகர்களை அழைத்துச் சென்று இந்த நிகழ்ச்சியை நடத்தினார்.

இந்த விழாவில் சேரன் பேசியது:

என்னை போல் பல பிரபலங்களை உருவாக்கியவர் ஆசிரியர் சுவாமிநாதன். பொதுவாக பிரபலங்கள்தான் வெளியில் தெரிவார்கள். ஆனால் அவர்களை உருவாக்கிய ஆசிரியர்கள் கடைசிவரை வெளியே தெரிவதில்லை. எனக்கு சோதனை வந்த போதெல்லாம் அறிவுரை கூறி பக்கபலமாக இருந்தவர் என் ஆசிரியர்தான்.

வாகனத்தில் செல்லும்போது மிகவும் கவனம், எச்சரிக்கை அவசியம். நம்மை நம்பி நமது குடும்பத்தினர் உள்ளனர் என்பதை நினைத்து அனைவரும் ஹெல்மெட் அணிவதன் அவசியத்தை உணர்ந்து உறுதி எடுக்கவேண்டும் என்றார் சேரன் கண்ணீருடன்.

நிகழ்ச்சியில் சரத்குமார் பேசுகையில், குழந்தைகளை நல்ல மனிதர்களாகவும், நல்ல தலைவர்களாகவும் உருவாக்குவது ஆசிரியர்கள்தான். ஆசிரியர் பணி தூய்மையானது. ஒரு மனிதனை பெயர் சொல்லி அழைத்தவர்கள் அவர் இறந்து விட்டால் பாடியை எப்போது எடுப்பார்கள் என்று கேட்கிறார்கள்.

இப்படி வீணாக போகும் உடலை தானம் செய்வதால் பலரது வாழ்வில் ஒளியேற்றலாம். ஆசிரியர் சுவாமிநாதன் உடல் தானம் செய்ததன் மூலம் எடுத்துக்காட்டாக விளங்குகிறார். அவரது பெயரில் அறக்கட்டளை அமைத்து அவரது குடும்பத்தினரும், டைரக்டர் சேரனும் தமிழ்நாடு முழுவதும் உடல்தானம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றார்.

நன்றி - தட்ஸ்தமிழ்

No comments: