Wednesday, August 29, 2012

ஆறாம் அறிவு

அன்றும் எப்போதும் போல 4.45 மணிக்கு எழுந்துவிட்டான் நவீன். ஐந்து மணியிலிருந்து ஐந்தரை மணிவரை அவன் நடைபயிற்சி செய்யும் நேரம். விடிந்தும் விடியாத அந்த அதிகாலை பொழுது அவனுக்கு சற்றே புதிதாய் தோன்றியது. ஆங்காங்கே "கொக்கரக்கோ" என்று சேவல் கூவுவதும், எங்கோ ஒரு நாய் "வௌவ்" என்று ஊளையிடுவதும் அவனுக்கு மிகத்தெளிவாய் கேட்டது. முகத்தைக் கழுவிக்கொண்டு, காலில் ஷூவை மாட்டிக்கொண்டு நடக்க ஆரம்பித்தான் நவீன்.
அவனுடைய வீட்டிலிருந்து சுமார் அரை கிலோமீட்டர் தூரத்தில் ஒரு பூங்கா உள்ளது. பூங்காவின் பெயர் "சுந்தரவனம்" பூங்கா. பெயருக்கேற்றாற்போல், எங்கும் அடர்ந்த மரங்களும், ஆங்காங்கே அழகிய மலர்களுமாய் மனதைக் கொள்ளை கொள்ளும்படி இருந்தது. கல்மனம் படைத்த மனிதன் கூட அந்த பூங்காவினுள் நுழைந்தால் திருந்தி நல்மனம் படைத்தவன் ஆகிவிடுவான். மனிதனே, என்னைப்பார்! ஒரே நாளில் பூத்து உதிரும் நான் எப்படி முகம் மலர்ந்து, அகம் மலர்ந்து சிரித்துக் கொண்டிருக்கிறேன்; ஆனால் நீயோ தினமும் கவலைகளில் மூழ்கி, முகம் சோர்ந்து, அகம் சோர்ந்து உள்ளுக்குள் புழுங்கிக் கொண்டிருக்கிறாய். எனக்கும் ஒரே வாழ்க்கைதான்; உனக்கும் ஒரே வாழ்க்கைதான். அந்த ஒரு வாழ்கையை என்னை மாதிரி சிரித்துகொண்டே வாழு என்று சொல்லாமல் சொல்லி கண்சிமிட்டியது அங்கிருந்த ஒரு ரோசாப்பூ.
நவீன் தினமும் அந்த பூங்காவரை நடந்து வந்து, பூங்காவினுள் சிறிது நேரம் அமர்ந்து, இயற்கையை ரசித்துவிட்டு பிறகு வீடு திரும்புவான். அது அவனுக்கு மிகுந்த புத்துணர்ச்சியைத் தந்தது. அந்த நாளை அவன் உற்சாகமாய்த் துவங்க அது உதவியது. ஆனால், அது மட்டுமே காரணம் என்று சொல்லிவிட முடியாது. வேறொரு காரணமும் இருக்கிறது. அது அந்த பூங்காவினுள் இருக்கும் ஒரு நாய். நாயைப் பற்றி நினைவுகள் வந்ததும் நவீனின் எண்ணங்கள் சற்று பின்னோக்கி நகர்ந்தன.

சில மாதங்களுக்கு முன்பு வழக்கம்போல அதிகாலையில் நடைபயிற்சி செய்து கொண்டிருந்தான் நவீன். அதிகாலை என்பதால் மக்கள் நடமாட்டம் மிகக்குறைவாக இருந்தது. அவனைப் போலவே சிலர் நடைபயிற்சி செய்து கொண்டிருந்தார்கள். சாலையில் அவ்வப்போது சில கார்களும், பேருந்துகளும், இருசக்கர வாகனங்களும் சென்று கொண்டிருந்தன. நவீன் பூங்காவை நெருங்கினான். அங்கே அவன் கண்ட காட்சி அவனைப் பரிதாபப்பட வைத்தது. சாலையின் ஓரமாக ஒரு நாய் "வௌவ்" "வௌவ்" என்று தன் உயிர் கரையும் மட்டும் கத்திக்கொண்டிருந்தது. அதன் கண்களில் கண்ணீர் வடிந்து கொண்டிருந்தது. அதன் ஒரு காலில் பலமாக அடிபட்டு ரத்தம் வடிந்து கொண்டிருந்தது. எதாவது ஒரு வாகனம் மோதிச் சென்றிருக்க வேண்டும்.
நடைபயிற்சி செய்து கொண்டிருந்தவர்கள் அந்த நாயை வேடிக்கை பார்த்தபடி சென்று கொண்டிருந்தனர். மனிதர்கள் செத்துக்கிடந்தாலே கண்ணிருந்தும் குருடராய் கண்டுகொள்ளாமல் கடந்து செல்லும் கல்மனம் படைத்த இந்த கலிகாலத்தில் ஒரு நாய் துடித்துக் கொண்டிருப்பதை வேடிக்கைப் பார்த்தபடி சென்று கொண்டிருப்பது அவனுக்கு எந்த விதமான அதிர்ச்சியையும் ஏற்படுத்திவிடவில்லை. ஆனால் நவீனால் அப்படி இருக்க முடியவில்லை. ஒரு நாய் துடித்துக்கொண்டிருப்பதைப் பார்த்ததும் ஏதோ ஒரு மனிதன் அங்கே உயிருக்குப் போராடிக்கொண்டிருப்பதாகத்தான் அவனுக்குத் தோன்றியது. நாய்க்கும் மனிதனுக்கும் அங்கே அவனுக்கு வித்தியாசம் தெரியவில்லை. உலகில் உள்ள எல்லா உயிரினங்களும் காற்றைத் தான் சுவாசிக்கின்றன. உயிரின் மதிப்பை அறிந்தவன் ஒரு சிறு புழு பூச்சி துடித்துக்கொண்டிருந்தாலும் கண்ணின் ஓரம் ஈரம் கசிவான். உயிரின் வலியை உணர்ந்தவன் எந்த ஒரு உயிருக்கும் தீங்கு விளைவிக்க மாட்டான். ஒரு உயிர் துடித்துக் கொண்டிருப்பதைப் பார்த்துக் கண்டும் காணாமல் செல்வது அந்த உயிரைக் கொல்வதற்குச் சமம்.

மனிதாபிமானம் என்பது சட்டம் இயற்றியோ அல்லது தண்டனைகள் தருவதாலோ வருவதில்லை. அப்படி வந்தால் அது பயத்தினாலேயன்றி உள்ளத்தால் அல்ல. உள்ளத்தால் உயர்ந்தவராலேயே ஒரு உயிரின் மதிப்பை உணர முடியும். நவீன் சற்றும் யோசிக்கவில்லை. உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த அந்த நாயைத் தூக்கிக்கொண்டு வீட்டை நோக்கி விரைந்து சென்றான். வீட்டிற்குச் சென்றதும் அந்த நாயின் காலைச் சுத்தமாகக் கழுவி அடிபட்ட இடத்தில் மருந்திட்டு கட்டுபோட்டு வீட்டின் ஓரத்தில் கிடத்தினான். நாயின் கண்ணோரத்தில் இன்னும் சிறிது கண்ணீர் வடிந்து கொண்டிருந்தது. ஆனால் அந்த நாய் அவனை ஒரு கனிவான பார்வையில் வைத்த கண் வைத்தபடி பார்த்துக் கொண்டிருந்தது. அந்த பார்வை அவனை ஏதோ செய்வது போல் இருந்தது. அப்படியே அந்த நாயை கட்டி அனைத்துக் கொண்டான். அவன் மனம் மிகவும் லேசாகி, நெஞ்சம் குளிர்ந்து, உயிர் கரைவது போல் இருந்தது. அவனின் அப்போதைய மனநிலையை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. இந்த உலகத்தில் வாழும் நவீனை போன்ற சில உள்ளங்களாலேயே அதை உணர முடியும்.
நவீன் அந்த நாய்க்கு "ராம்" என்று பெயர் வைத்தான். பிறகு அந்த நாய் சற்று தேறியதும் அதனை கொண்டுபோய் அந்த பூங்காவினுள் விட்டுவிட்டான். அன்றிலிருந்து இன்றுவரை அந்த நாய் தினமும் காலையில் நவீனின் வருகைக்காக காத்திருப்பதும், அவன் வந்தவுடன் அவன் தோளில் ஏறி விளையாடுவதும் இன்றளவும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. ஏதாவது ஒருநாள் அவன் வரவில்லையென்றால் அது அன்று முழுவதும் எதையோ பறிகொடுத்தது போல அங்கும் இங்கும் அலைந்து கொண்டு இருக்கும். அதனால் அதை பார்ப்பதற்காகவே தினமும் அவன் வருவான். சற்று நேரம் அந்த நாயுடன் கொஞ்சிவிட்டு வீடு திரும்புவான். அது அவனுக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தந்தது. அந்த நாய்க்கும்தான்.
இப்படி கடந்த கால நினைவுகளில் மூழ்கி போனவனாய் சாலையோரம் நடந்து சென்று கொண்டிருந்தான். பூங்காவிற்கு அருகில் வந்துவிட்டான். ராம் அவனின் வருகையை மிகுந்த ஆவலோடு பார்த்துக் கொண்டிருந்தது. நவீன் இன்னும் அந்த நினைவுகளில் இருந்து மீளாதவனாய் சாலையோரத்தில் இருந்து விலகி சாலைக்கு நடுவில் சென்றுவிட்டான். அந்த நேரம் பார்த்து அந்த சாலை வழியே ஒரு "லாரி" மிக வேகமாக வந்துகொண்டிருந்தது. பூங்காவிற்கு அருகில் இருந்த ராம் இந்த காட்சியைப் பார்த்து திகிலடைந்தது. ஏதோ விபரீதம் நடக்க போகிறது என்று அதன் உள்மனம் பதறியது. நவீன் இன்னும் புற உலகிற்குள் வராதவனாய் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தான். ராம் தன் உயிர் கரையும் மட்டும் கத்திகொண்டிருந்தது. ஆனால் நவீன் இன்னும் அகவுலகில் இருந்து மீளவில்லை. லாரி நவீனை மோத இருந்த சமயத்தில் ராம் பாய்ந்து சென்று நவீனை ஓரமாக தள்ளிவிட்டது.

ராம் தள்ளிவிட்டதில் சிறிய சிராய்ப்புகளுடன் கீழே விழுந்து கிடந்தவன் எழுந்து பார்த்தபோது அங்கே அவன் கண்ட காட்சி அவனை நிலைகுலையச்செய்தது. அங்கே ராம் லாரியின் சக்கரத்தில் அடிபட்டு தலை நசுங்கி அந்த இடத்திலேயே செத்துக்கிடந்தது. நவீனுக்கு எல்லாம் கனவு போலத் தோன்றியது. அப்படியே சாலையோரமாக சரிந்து விழுகிறான். மனதில் எண்ண அலைகள் ஓடியது. முன்னொரு நாள் அந்த நாய் அடிபட்டு கிடந்தபோது அதற்கு யாரும் உதவ முன்வராததும்; இன்று தான் செய்த ஒரு சிறிய உதவிற்கு நன்றிக்கடனாய் தன்னைக் காப்பாற்றிவிட்டு அது உயிரைவைட்டதும்; மனிதன் தன்னை ஆறு அறிவுடையவனாக நினைத்து பெருமை பேசிக்கொள்வதும்; மற்ற விலங்குகளை அறிவில் தன்னைவிட தாழ்ந்த பிறப்பாக கருதுவதும்; இப்படி என்னென்னவோ அவன் மனதில் தோன்றியது.

இன்று அவனுக்கு உண்மையிலேயே யார் உயர்ந்தவர்கள் என்று விளங்கியது. அவன் சுயநினைவு திரும்ப மிக நீண்ட நேரம் ஆயிற்று.