Monday, December 21, 2009

அவதார்- திரைவிமர்சனம்


நேற்று தேவி தியேட்டரில் "அவதார்" திரைப்படம் பார்த்தேன். நான் அவ்வளவாக ஆங்கில படம் பார்ப்பதில்லை. பார்க்க விருப்பமுமில்லை. நண்பர்கள் இன்டர்நெட்டில் புக் செய்துவிட்டதால் வேறு வழியில்லாமல் செல்ல நேரிட்டது. ஆனால் படம் பார்த்து முடித்தவுடன் எனக்கு கிடைத்த திருப்தி..அப்பப்பா..அதை வார்த்தைகளில் வர்ணிக்க முடியாது. படத்தை பார்த்தால்தான் அதை உணரமுடியும். சரி கதைக்கு வருவோம்.

வேற்று கிரகத்தில் இருக்கும் விலைமதிக்க முடியாத மினரல்களைக் கவர்ந்துபோக அமெரிக்க படைகள் அந்த கிரகத்தை முற்றுகையிட திட்டமிடுகிறது. அதற்கு அந்த கிரகத்தில் இருக்கும் மக்களைக் கொன்றாக வேண்டும். அதற்காக அந்த மக்களின் வாழ்க்கை முறைகளைப் பற்றி தெரிந்து கொள்ள நம்ம ஹீரோ (சாம் வொர்திங்டன்) தேர்ந்தெடுக்கபடுகிறார்.

வேற்று கிரகத்தில் இருக்கும் மனிதர்கள் உருவத்தில் மிகவும் வித்தியாசமானவர்கள். சாதாரண மனிதர்களைப் போல அல்லாமல் மிகவும் உயரமாக, பெரிய காதுகளோடு, பின்னால் வாலோடு இருப்பவர்கள். அதனால் அவர்களோடு சேர்ந்து பழக நமது ஹீரோவின் ஒரு ஜீனை எடுத்து க்ளோனிங் செய்து, அந்த க்ளோனிங் ஹீரோவை அனுப்புகிறார்கள்.

நம்முடைய ஹீரோ அந்த கிரகத்தில் இருக்கும் பண்டோரா என்னும் அடர்ந்த காட்டிற்குள் நுழைகிறார். அந்த காடு பல விசித்திரங்களை தன்னுள்ளே கொண்டது. தொங்கும் மலைகளும், விசித்திரமான விலங்குகளும், கலர்கலர் பூச்சிகளும் நிறைந்த அழகிய காடு. சாதாரண மக்களால் அந்த காட்டில் சுவாசிக்க முடியாது. அந்த காட்டில் நுழையும் நம் ஹீரோவை அந்த கிரகத்தில் வாழும் ஒருத்தி (அதான்...நம்ம ஹீரோயின்) காப்பாற்றி, அந்த கிரகத்தில் உயிர் பிழைத்திருக்க வேண்டிய விஷயங்களைக் கற்று கொடுக்கிறாள். இரண்டு பெரும் ஒருவரையொருவர் காதலிக்கிறார்கள். நம் ஹீரோ அந்த மக்களோடு அன்பாக பழகுகிறான். தான் வந்த நோக்கம் அழிந்து அந்த மிக அழகிய கிரகத்தையும், அதில் வாழும் மக்களையும் காப்பாற்ற முயல்கிறான்.அவனுக்கு உதவியாக மேலும் நான்கு பேர் வருகிறார்கள்.இதனிடையே அமெரிக்க படைகள் அந்த கிரகத்தை முற்றுகையிடுகின்றன. அமெரிக்க படைக்கும் வேற்று கிரக வாசிகளுக்கும் இடையே பயங்கர சண்டை மூள்கிறது. இறுதியில் யார் வென்றார்கள் என்பது கிளைமாக்ஸ்.

ஜேம்ஸ் கேமரூனின் மிக பிரம்மாண்ட படைப்பு "அவதார்". சுமார் 500 மில்லியன் டாலர் செலவில் எடுக்கப்பட்ட திரைப்படம். அந்த உழைப்பு படம் முழுக்க தெரிகிறது. ஒவ்வொரு காட்சியிலும் அவ்வளவு பிரம்மாண்டம். படத்தின் ஒளிப்பதிவு படத்தைப் பல மடங்கு தூக்கி நிறுத்தியிருக்கிறது. பின்னணி இசையும் படத்திற்கு பக்க பலம். கதை, நாம் ஏற்கனவே பல தமிழ் படங்களில் பார்த்த கதைதான் என்றாலும், அதை எடுத்த விதம் சூப்பர். டெக்னிகலாக மிரட்டியிருக்கிறார்கள்.


தேவி தியேட்டரில் படத்தை 2D -யில் காண்பித்தார்கள். மறுபடியும் நாளை மறுநாள் சத்யம் தியேட்டரில் 3D -யில் பார்க்க நண்பர்களிடம் சொல்லியாகி விட்டது. கண்டிப்பாக அனைவரும் "திரையரங்கம்" மட்டுமே சென்று பார்க்க கூடிய திரைப்படம் "அவதார்".

அவதார்- பிரம்மாண்டத்தின் பிறப்பிடம்.

பின்குறிப்பு:

இந்த படத்தை பார்ப்பதற்கு முன்னால் "வேட்டைக்காரன்" படத்தை பார்க்கலாமென்று இருந்தேன். ஆனால் "அவதார்" படத்தைப் பார்த்தவுடன் அந்த முடிவை மாற்றி கொண்டேன்.