Sunday, July 26, 2009

அழகிய திருமுகம்

தெருவோரம்
நடந்து செல்கையில்
தெய்வத்தினும் அழகிய
திருமுகத்தைப் பார்த்தேன்

சிரித்த தெனைப்பார்த்து
சிரித்தேன் அதைப்பார்த்து
கண்ணடித்த தெனைப்பார்த்து
கண்ணடித்தேன் அதைப்பார்த்து
கைநீட்டி அழைத்தது
கையருகில் சென்றேன்

இருகைகளையும் உயர்த்தியது-தூக்கி
மார்போடு இருத்திக் கொண்டேன்
முத்தமிட்டது கன்னத்தில்
முத்தமிட்டேன் அதன் கன்னத்தில்

நேரமாகிவிட்டது எனக்கு
செல்லவேண்டும் ஓரிடம்
இறக்கி விடைகொடுத்தேன்
பிரிய மனமில்லாமல்

தெருகடந்து செல்லும்வரை
திரும்பி நடந்தேன்
தெய்வத்தினும் அழகிய-அந்த
திருமுகத்தைப் பார்த்தபடி....

Thursday, July 23, 2009

அவள் அன்று விடுமுறை

மனம் மயக்கும்
மாலை வேளையில்
மனம் அலைபாய்ந்தது
அவளை எண்ணி...

அலுவலகத்தில் நாளை
அவளிடம் பேச வேண்டும்-என
ஆவல் கொள்ளும்
என் மனம்...

மனதின் ஆற்றல்
மகாவல்லமை-என
மறுநாள் உணர்த்தியது
அவள் அன்று விடுமுறை.....

Thursday, July 9, 2009

புதிய தேடல்.....


நேற்று சைதை ராஜ் தியேட்டரில் 'பசங்க' படம் பார்த்தேன். அருமையாக இருந்தது. தமிழ் சினிமாவில் சிறுவர்களுக்கான படங்கள் மிக குறைவான அளவே எடுக்கிறார்கள். அதுதான் ஏன் என்று புரியவில்லை. சிறுவர்களுக்கான ஹாலிவுட் படங்கள் நிறைய வருகின்றன. ஆனால் தமிழ் சினிமாவில் ஒரு வருடத்தில் சிறுவர்களுக்கான படம் எத்தனை வருகின்றது என்று பார்த்தால் மிக அதிகமாக இரண்டு அல்லது மூன்று படங்கள்தான் இருக்கும். இத்தகைய நிலை மாற வேண்டும். சிறுவர்களுக்கான படங்கள் நிறைய வெளி வர வேண்டும். அது தமிழ் சினிமாவிற்கு நல்லது.

சிறுவர்களுக்கான படங்களை குடும்பத்துடன் சென்று பார்ப்பதால் வசூலும் கூடும். அது சிறுவர்களுக்கான நல்ல பாடமாகவும் இருக்கும். 'பசங்க' படம் சிறுவர் மற்றும் பெரியவர்களுக்கான படம். பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை எப்படி வளர்க்க வேண்டும் என்பதை இயக்குனர் அழகாக, சுவாரஸ்யமாக சொல்கிறார். பிள்ளைகள் தங்கள் பெற்றோர்களிடமிருந்து தாங்கள் செய்யும் ஒவ்வொரு நல்ல செயலுக்கும் பாராட்டை எதிர்பார்க்கிறார்கள். அது கிடைக்காத போது அவர்களுடைய உள்ளம் உடைந்து போகிறது. அது கொடுமையான விஷயம்.


குழந்தைகள் செய்யும் செயல்களுக்கு பாராட்டு கிடைத்து விட்டால் அது அவர்களை உற்சாகப்படுத்தும். அது அவர்களை மேதைகளாய் உருவாக்க வழிவகுக்கும். சிறுவர்கள் செய்யும் எந்த செயலையும் அலட்சிய படுத்தாதீர்கள். உங்களின் லட்சியங்களை அவர்களின் மேல திணிக்காதீர்கள். அவர்களின் உணர்ச்சிகளைப் புரிந்து கொள்ளுங்கள். முக்கியமாக அவர்களிடம் அன்பு செலுத்துங்கள். அன்பு ஒன்றுதான் சிறுவர்கள் எதிர்பார்க்கும் மருந்து. அந்த மருந்தை அவர்களுக்கு முடிந்த மட்டும் ஊட்டுங்கள்.

பெற்றோர்கள் தங்களுக்குள் இருக்கும் சண்டையை குழந்தைகளின் முன்னால் வெளிப்படுத்தாதீர்கள். அது அவர்களை மனரீதியாய் பாதிக்கும். நாமும் பெண்களிடம் இப்படிதான் நடந்து கொள்ள வேண்டுமோ என்ற எண்ணத்தை அது ஏற்படுத்தும். அதனால் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்காகவேனும் விட்டுக் கொடுத்து நடக்க வேண்டும். அவர்களிடம் தினமும் மனம் விட்டு பேசுங்கள். அவர்களுக்காக நேரத்தை ஒதுக்குங்கள். இன்றைய சூழ்நிலையில் வீட்டில் கணவன் மனைவி இருவருமே வேலைக்கு சென்று விடுகின்றனர். அவர்கள் வருவதற்குள் இரவு நேரமாகிவிடுகிறது. பிள்ளைகள் அவர்களிடம் பேச வந்தால் தனக்கு அசதியாய் இருக்கிறது என்று சொல்லிவிட்டு சிறிது சாப்பிட்டுவிட்டு உறங்கி விடுகின்றனர். பிள்ளைகள் எப்படி வளர்கிறார்கள் என்பதைப் பற்றி அவர்கள் கண்டு கொள்வதில்லை. அவர்கள் எப்படி படிக்கிறார்கள், அவர்களின் நண்பர்கள் சகவாசம் எப்படி என்பதைப் பற்றி அவர்கள் அறிந்து கொள்வதில்லை.


இப்படி இருந்தால் பிள்ளைகள் எப்படி உயர்ந்தவர்களாய் உருவாவார்கள். சில வருடங்களுக்கு முன்பு பிள்ளைகள் தாத்தா பாட்டிகளிடம் நல்ல கதை கேட்டு வளர்ந்தனர். எனக்கு என்னுடைய அம்மா நல்லதங்காள் புராணத்தையும், என்னுடைய அப்பா ராமாயணம் மற்றும் மகாபாரதம் ஆகியவற்றை சொல்லி வளர்த்ததும் இன்றும் பசுமையான நினைவுகளாய் இருக்கின்றன. ஆனால் இன்று துரதிஷ்டவசமாக அவையெல்லாம் குழந்தைகளுக்கு கிடைக்க பெறுவதில்லை. இந்தியாவின் எதிர்காலம் இளைஞர்களின் கையில் என்று விவேகானந்தர் முதல் அப்துல் கலாம் வரை கூறுகின்றனர். இன்றைய சிறுவர்களே நாளைய இளைஞர்கள். இந்தியா வல்லரசாக ஆவது அவர்கள் கையில்தான் இருக்கிறது என்பதை ஒவ்வொரு பெற்றோரும் உணர வேண்டும். அது அந்த சிறுவர்களின் வளர்ச்சியை பொறுத்தே உள்ளது. அதனால் பெற்றோர்கள் தங்களின் பிள்ளைகளின் மேல் அன்பு செலுத்தி அவர்களை வருங்கால வல்லரசு இந்தியாவின் தூண்களாய் உருவாக்க முயற்சிக்க வேண்டும். ஜெய் ஹிந்த்....

Tuesday, July 7, 2009

கடவுள்!


கடவுள் இல்லையென்று
யார் சொன்னது?
உன்னைப் படைத்த தாயின்
பெயர் என்ன?

- வெங்கடேசன்

Monday, July 6, 2009

இன்பம் துன்பமற்ற வாழ்க்கை!


மனித வாழ்க்கையில் இன்பம் துன்பம் இரண்டுமே நம் மரணத்தின் கடைசி நொடி வரை நம்மை ஆட்டுவித்துக் கொண்டிருக்கிறது. இன்பம் வரும்போது மகிழ்வதும், துன்பம் வரும்போது வருந்துவதும் மனித இயல்பு. ஆனால் துரதிஷ்டவசமாக பெரும்பாலான நேரங்களில் பெரும்பாலான மனிதர்களை துன்பங்களே ஆட்டுவிக்கின்றன. நமக்கு வரும் இன்பம் மற்றும் துன்பம் ஆகிய இரண்டிற்குமே நாம்தாம் காரணம் என்பது யாரும் மறுக்க முடியாத உண்மை. அப்படியிருந்தும் நாம் துன்பத்தின் வாயிலில் சென்று சிக்கிக் கொள்கிறோம். அதற்கு காரணம்தான் என்ன? ஒரு சிறிய அலசல்.

ஒரு வேலையை நாம் தொடங்குகிறோம் என்று வைத்துக் கொள்வோம். அந்த வேலையை பற்றின்றி செய்ய கற்றுக் கொள்ள வேண்டும். அதாவது அந்த வேலையின் பலனை எதிர்பாராமல் செய்ய வேண்டும். பற்றின்றி செய்ய வேண்டும் என்பதை யாரும் தவறாக எடுத்துக் கொள்ள கூடாது. எடுத்த வேலையை ஏனோ தானோ என்று செய்வதற்கு பற்றின்றி வேலை செய்தல் என்பது பொருள் இல்லை. ஒரு செயலை எந்த பற்றும் இல்லாமல், அதாவது அந்த வேலைக்கு அடிமையாகாமல், அதன் பந்தத்திற்கு உள்ளாகாமல், அதன் முடிவு பற்றிய பயம் இல்லாமல், முழு மூச்சோடு அந்த வேலையை செய்ய வேண்டும். அப்போது அந்த வேலையை நாம் நன்றாக செய்ய முடியும். அந்த செயலின் முடிவு நமக்கு சாதகமாக இருந்தாலும் நாம் அதனால் மகிழ்ச்சி கொள்ள மாட்டோம். முடிவு பாதகமாக இருந்தாலும் அதனால் நாம் வருத்தம் கொள்ளவும் மாட்டோம். காரணம் நாம் பற்றின்றி வேலை செய்கிறோம்.

எந்த ஒரு வேலையையும் என் உடம்பு செய்வதில்லை. நான் என்ற என் ஆன்மா இந்த உடம்பைக் கருவியாகக் கொண்டு செயல்படுகிறது என்ற எண்ணத்துடன் ஒரு செயலை செய்ய செய்ய முயற்சிக்க வேண்டும். அவ்வாறு செய்யும் போது நம்மை இன்பம் துன்பம் ஆகிய இரண்டுமே நம்மை நெருங்குவதில்லை. காரணம் நாம் அந்த செயலை ஆன்மாவால் செய்கிறோம். ஆன்மா இன்பம் துன்பம் ஆகிய எதுவுமே அறியாதது. ஆன்மா நிலையானது, அழிவற்றது. இந்த உடம்பு நிலையற்றது. கண்டிப்பாக ஒருநாள் அழியக் கூடியது. உடம்பு அழியும்போது ஆன்மா வேறொரு உடலைத் தேடி செல்கிறது.

இப்படி ஒரு செயலைப் பற்றில்லாமல் செய்ய முயற்சிப்போம். பிறகு நம்மை இன்பம் துன்பம் எதுவுமே கட்டுப்படுத்தாது. எந்த ஒரு மனிதன் இன்பம் துன்பம் ஆகிய நிலைகள் இல்லாமல் எப்போதும் ஒரே நிலையில் இருக்கின்றானோ, அந்த மனிதன் ஒரு செயலை ஆன்மாவால் செய்கிறான் என்று அர்த்தம். அவன் முழு சுதந்திரம் உடையவனாக இருக்கின்றான் என்று சுவாமி விவேகானந்தர் கூறுகிறார்.

மேலே சொன்ன கருத்துக்கள் கீதையின் மையக் கருத்தாகும். அதனைக் கடைப்பிடிப்பது என்பது சாதாரண விஷயமில்லை. ஆனால் கடைபிடித்தால் உங்களுக்கு இன்பமும் இல்லை; துன்பமும் இல்லை. ஆன்மாவில் நிலைபெற்று விட்டீர்கள். அடுத்த பிறவியும் இல்லை. காரணம் உங்களுக்கு ஆசைகள் இருப்பதில்லை. ஆசை இருக்கும் வரை உங்களுக்கு மறுபிறவி என்ற ஒன்று இருந்து கொண்டே இருக்கும். அதனால்தான் ஆசையில்லாமல், பற்றில்லாமல் வேலை செய்ய வேண்டும் என்று கீதையில் சொல்லப்படுகிறது.

நான் ஏதோ கீதையை உபதேசிப்பதாக யாரும் நினைக்க வேண்டாம். கீதையில் நான் படித்த எனக்கு பிடித்த விஷயத்தை பகிர்ந்து கொண்டேன். அவ்வளவுதான். உங்களுக்கு பிடித்திருந்தால் நீங்கள் மேலே கூறியவற்றை கடைபிடிக்க முயற்சி செய்யலாம். இல்லையென்றால் விட்டுவிடலாம். வாசித்தமைக்கு மிக்க நன்றி....

Thursday, July 2, 2009

கவிதைகள்

கடவுள்:என்ன வரம் வேண்டும்?
என்றார் கடவுள்.
அதுகூடத் தெரியாத
நீர் என்ன கடவுள்?

நன்றி - கவிஞர் நீலமணி

தண்டனை:

கண்களால்
நான் செய்யும் தவறுகளுக்கு
இதழ்களால் நீ
தண்டனை தருவதால்
திருந்துவதாக இல்லை நான்!

நன்றி - கவிஞர் செல்வமுத்துக்குமரன்