Tuesday, March 10, 2009

விடுதலைப் புலிகளுக்கு அடைக்கலம் தந்தேன்


விடுதலைப் புலிகள் முப்பத்தேழு பேரை தனது வீட்டில் தங்க வைத்திருந்ததாக ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்தார். எழுத்தாளர் மதுராவின் நூல்கள் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடந்தது. அப்போது வைகோ பேசியதாவது. புலிகளிடம் காசு வாங்கிக்கொண்டு அவர்களுக்கு ஆதரவாக செயல்படுவதாக கருணாநிதி கூறுகிறார். திருடனுக்குக் கூட புலிகளிடம் காசு வாங்கும் எண்ணம் வராது. 37 புலிகளை ஒன்றரை ஆண்டுகள் எனது வீட்டில் வைத்திருந்து, சோறு போட்டு, மருந்து கொடுத்து சிகிச்சை பார்த்திருக்கிறேன். ஸ்ரீபெரும்புதூர் சம்பவத்திற்குப் பிறகும் ஆறு மாதம் அவர்கள் என் வீட்டில் தங்கி இருந்தனர்.அவர்களைக் காட்டிக் கொடுத்த துரோகி யார் என்பதை பிறகு கூறுவேன்.

என்னிடம் இருந்த விடுதலைப் புலிகள் சிலர் சிகிச்சை முடிந்து சென்றுவிட்டனர். 17 பேர் மட்டும் என்னுடன் இருந்தனர். அவர்களை போலீசார் கைது செய்யும் வாய்ப்பு வந்தபோது, அவர்களிடம் இருந்த நச்சுக்குப்பியை என்னிடம் கொடுத்து விடுமாறு கேட்டேன். இரவு முழுவதும் பேசி அவர்களிடமிருந்து நச்சுக்குப்பியைப் பெற்றேன். என் தம்பி, "நான் தான் நச்சுக்குப்பியைப் பாதுகாத்து வைத்திருந்தேன். அது கடமை என கருதினேன்' எனக் கூறி, ஓர் ஆண்டு சிறை சென்றான். அவனுக்கு நான் பதவி வழங்கியதில்லை. இன்னும் சொல்லப்போனால், அவன் தாயகத்தையே பார்த்ததில்லை.

புலிகளிடம் நான் காசு வாங்கியதாகக் கூறும் கருணாநிதிக்கு இதயமே கிடையாது. சீமான், நாஞ்சில் சம்பத் மற்றும் கொளத்தூர் மணி பேசியதில் எந்தத் தவறுமில்லை. இவர்கள் எல்லோரும் நாட்டின் இறையாண்மை காப்பாற்றப்பட வேண்டும் என்ற ஆதங்கத்தில்தான் பேசினர். நாட்டின் ஒருமைப்பாட்டில் எங்களுக்கு இல்லாத அக்கறையா?. இவ்வாறு வைகோ பேசினார்.

No comments: