Thursday, March 12, 2009

கண்ணப்பனின் கணக்கு!
















நீண்ட நாட்களாக நீடித்த சஸ்பென்ஸ் நேற்று முடிவுக்கு வந்தது. ம.தி.மு.க வின் அவைத் தலைவர் கண்ணப்பன் தி.மு.க வில் இணைந்தார். அவர் தி.மு.க வில் இணைந்ததன் காரணம் எல்லோருக்கும் தெரிந்ததே. ஆனால் தி.மு.க வில் இணைந்தவுடன் கண்ணப்பன் கூறியதாவது.


முதல்வர் கருணாநிதி உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தபோது, அவரது உடல்நலம் பற்றி விசாரிக்க மருத்துவமனை சென்று அவரைப் பார்த்து விட்டுத் திரும்பினேன். பிறகு வைகோவிற்கு போன் செய்து அதைப் பற்றிக் கூறினேன். அப்போது வைகோ தன்னிடம் மிகவும் கோபப்பட்டு பேசினார். சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நான் உடல்நிலை சரியில்லாமல் இருந்தபோது உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் என்னிடம் வந்து நலம் விசாரித்தார். அதனால் மனிதாபிமானத்தின் அடிப்படையில் முதல்வரைச் சந்தித்தேன். இதில் எந்த உள்நோக்கமும் இல்லை என்று வைகோவிடம் கூறினேன். ஆனால் அவர் தன்னிடம் பேச வேண்டாம் எனக் கூறிவிட்டார்.


வைகோ கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் இருந்தபோதும் அவரைத் தொடர்பு கொண்டேன். ஆனால் அவரைத் தொடர்பு கொள்ள முடியவில்லை. அவர் என்னிடம் பேச விரும்பவில்லை எனத் தெரிந்தவுடன் அந்த முயற்சியை நிறுத்தி விட்டேன். லோக்சபா தேர்தல் குறித்து தோழமைக் கட்சிகளுடன் பேசுவதற்கு குழு அமைக்கப்பட்டிருப்பதாக மார்ச் 1ம் தேதி செய்தித்தாள் மூலமாக அறிந்தேன். அதை பற்றி என்னிடம் யாரும் கலந்த்தாலோசிக்கவில்லை. வைகோ என்னிடம் பல வகைகளிலும் முரண்பட்டார். நான் வேண்டுமென்றே புறக்கணிக்கப்பட்டேன்.


நான் முதல்வரை சந்தித்து குறித்து கருத்து தெரிவித்த வைகோ, நான் தி.மு.க வின் சூழ்ச்சிக்கு இரையாகிவிட்டதாகவும் அதிமுக கூட்டணியை பிளவுபடுத்தும் செயல் என்றும் கூறுகிறார். அதனால் நான் மதிமுக வின் அவைத் தலைவர் பதவியிலிருந்தும், அதன் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தும் விலகிக் கொள்கிறேன். இவ்வாறு கண்ணப்பன் கூறினார்.


பிறகு ஸ்டாலினைச் சந்தித்து தன்னைத் திமுக வில் இணைத்துக் கொள்வதாக அறிவித்தார். திரு. கண்ணப்பன் அவர்களின் நீண்ட நாள் குழப்பம் ஒருவாறாக முடிவுக்கு வந்தது. திமுக அவருக்கு எவ்வளவு பணம் கொடுத்தது என்பது கருணாநிதிக்கும், கண்ணப்பன் இருவருக்குமே வெளிச்சம். மதிமுகவை அழிக்க நினைக்கும் கருணாநிதியின் சூழ்ச்சி தொடரும் என்று நம்பலாம். இதற்கு வைகோவின் பதிலடி எப்படி இருக்கும் என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

No comments: