Monday, March 9, 2009

நீலமிருகம்


கடலே
உன் உப்பு
இனி எனக்கு ஆகாது

என் மக்களின் உணவை
எனது உணவில்
சேர்க்க முடியாது

நீலம் நிறம் என்றிருந்தோம்
விஷமென்று
விளங்கிவிட்டது

ஆண்கள்
பெண்கள்
குழந்தைகளைத் தின்று
வாயில் நுரைதள்ள
இன்னும்
வேட்டையாடக் காத்திருக்கும்
தண்ணீர் மிருகமாய்
படுத்துக்கிடக்கிறாய்

உலகெங்கும்
உன் கரையில்
குழந்தைகள் கட்டும்
மணல் வீடுகளில்
இனி ஆவிகள் வசிக்கக்கூடும்

இனி எப்போதும்
உன்னிடம் நான் வரமாட்டேன்
என் மக்களின் கண்ணீரில்
என்னால்
கால் நனைக்க முடியாது

- கவிஞர் பழநிபாரதி

No comments: