Wednesday, August 5, 2009

களவாடிய பொழுதுகள்














கடற்கரை மணல்திட்டுகளில்
காலில் மணலூற-நாம்
களவாடிய பொழுதுகள்
கருகிப் போனதடி
என் கண்ணே!

மடிமீது தலைவைத்து
மனதை வான்வைத்து-அழகு
மயில்போல மறைந்த
மாலை பொழுதுகள்
மீண்டும் திரும்புமோ
என் கண்ணே!

கன்னம் திருப்பினாய்
செவ்விதழில் முத்தமிட்டேன்
பொய்யாய் அடித்தாய்-சிறு
பொய்யாகவேனும் புலருமோ
அந்த பொழுதுகள்
என் கண்ணே!

இரவைச் சுட்டெரித்த
சூரியன் போல- நம்
பிரிவை சுட்டெரிக்க
நினைவுகள் ஒன்றே போதும்
என் கண்ணே!

Tuesday, August 4, 2009

திரைப்பட ரசிகர்களின் வன்மம்..


சமீபத்திய சில படங்களின் வெற்றி என்னை பாதித்திருக்கிறது. குறிப்பாக சுப்ரமணியபுரம் மற்றும் நாடோடிகள். தமிழ் திரைப்பட ரசிகர்கள் இத்தகைய படங்களுக்கு கொடுக்கும் ஆதரவைப் பார்க்கும்போது எங்கே அவர்களின் உள்ளங்களிலும் அத்தகைய வன்மம் இருக்குமோ என்ற பயம் எழுகிறது. சுப்ரமணியபுரம் படத்தில் இயக்குனர் சசிகுமார் ஒருவனுடைய தலையை ஆடு அறுப்பது போல் அறுக்கும் காட்சிக்கு ரசிகர்கள் கைகொட்டி ஆரவாரம் செய்தபோது அப்படிதான் எனக்கு தோன்றியது. அதே மாதிரி நாடோடிகள் படத்தில் இரண்டு காதலர்கள் சில காரணங்களால் பிரிந்து விடுகின்றனர். அவர்களை சேர்த்துவைத்த நண்பர்கள் அவர்களை கடத்திக் கொண்டு போய் சித்திரவதை செய்வதையும் வெகுவாக ரசித்தனர் ரசிகர்கள்.

படத்தை மேலோட்டமாக பார்க்கும்போது சில விஷயங்கள் நன்றாக இருப்பதுபோல் தோன்றும். ஆனால் அதை சற்று நிதானமாக யோசித்துப் பார்க்கும் போது அதனுள் இருக்கும் வக்கிரம் புரிய வரும். திரைப்படங்கள் மக்களை எளிதாய் சென்றடையக் கூடிய ஒரு மீடியா. அதில் நல்லதும் இருக்கும். தீயதும் இருக்கும். மக்களாகிய நாம்தான் எது நல்லது எது கெட்டது என்று பகுத்தறிய வேண்டும். மக்களுக்கு நல்ல விஷயங்கள் சொல்ல வேண்டியது இயக்குனர்களின் கடமை. மக்கள் மனதில் வன்மங்களை வளர்க்க அவர்கள் காரணமாக இருக்க கூடாது. இயக்குனர்களின் படைப்புரிமையில் தலையிட நான் இங்கே வரவில்லை. மக்களின் மனதில் நல்ல எண்ணங்களை உருவாக்குவதில் அவர்களுக்கு பெரும்பங்கு உண்டு என்பதை அவர்கள் உணர வேண்டும்.


காதல் செய்யும் காதலர்கள் பிரிவது என்பது நம் நாட்டில் தினமும் நடக்கின்ற ஒரு கேவலமான விஷயமாக மாறிவிட்டது. அதற்காக தாங்கள் சேர்த்து வைத்தோம் என்ற ஒரே காரணத்திற்காக அவர்களை கடத்தி துன்புறுத்துவது என்பது முட்டாள்தனமான செயல். அதை ரசிகர்கள் ஏற்றுகொள்கிறபோது மனதில் ஒருவித நெருடல். இனிவரும் படங்களிலாவது மக்கள் இத்தகைய காட்சிகளை ரசிக்காமல் இருக்க கற்றுக்கொள்ள வேண்டும். இயக்குனர்கள் சற்று கவனத்துடன் செயல்படுவது நல்லது.