Tuesday, February 12, 2013

சென்ற வாரம் நீயா நானா பார்த்தேன். அருமையாக இருந்தது. ஒரு பக்கம் நன்கு படிக்கும் மாணவர்களும் மற்றொரு பக்கம் பத்திரிகையாளர்களும் இருந்தனர். நடுவர் கோபிநாத் மாணவர்கள் பக்கம் பார்த்து இன்றைய இந்தியாவின் தலையாய பிரச்சனை என்னவென்று கேட்டார். அதற்கு மாணவர்கள் ஊழல், அரசியல்வாதிகளின் செயல்பாடு, இட ஒதிக்கீடு என்று சொல்லிக்கொண்டே போனார்கள். கூடன்கூளத்தில் அணு உலைக்கு எதிராக போராட்டம் நடக்கிறதே, அதைப் பற்றி உங்கள் கருத்து என்ன என்று கேட்டார். அதற்கு மாணவர்கள், அணு உலை வேண்டும் என்றார்கள். ஆனால் ஒருவரிடமும் அங்கே உண்மையாக என்னதான் நடந்து கொண்டிருக்கிறது என்று தெரியவில்லை. ஒருவரின் (உதயகுமார்) பின்னால் பல ஊர்கள் திரண்டு வருகிறதென்றால் அந்த ஊரில் உள்ளவர்களெல்லாம் முட்டாள்களா? இன்னொன்று இட ஓதிக்கீட்டு பிரச்சனை. இட ஒதிகீட்டை எத்தனை பேர் ஆதரிக்கிறீர்கள் என்று கேட்டதற்கு ஒரு சிலரைத் தவிர எல்லோருமே கையை தூக்கினார்கள். காரணம் கேட்டால் அது எங்களையெல்லாம் பாதிக்கிறது என்றார்கள். குறைந்த மதிப்பெண் பெற்ற தாழ்ந்த சாதி மாணவர்களெல்லாம் இதனால் பயன்பெறுகிறார்கள் என்றார்கள்.இந்த தாழ்ந்த ஜாதி மக்களால் இவர்களும் இவர்களுடைய முன்னோர்களும் எவ்வளவு பயனடைந்தனர் என்று இவர்களுக்கு தெரியவில்லை. இன்றும் கூலிகளாக இருக்கும் நிறைய பேர் இந்த தாழ்ந்த ஜாதி மக்கள்தான். இவர்களால்தான் இன்று நாம் சாப்பிடுகிறோம். இப்படி பல நூற்றாண்டுகளாக அடிமைப்பட்டு கிடந்த இனம் மற்ற உயர் ஜாதி (?) வகுப்பினருக்கு சமமாக வரவேண்டும் என்ற நல்ல எண்ணத்தில்தான் இந்த இட ஒதிக்கீடு தொடங்கப்பட்டது. ஆனால் இதெல்லாம் ஒரு மாணவருக்கும் தெரியவில்லை. எல்லா விசயங்களையும் மேலோட்டமாகவே பார்கிறார்கள். நான் நல்லாயிருந்தால் சரி என்று சுயநலமாகவே சிந்திக்கிறார்கள். அரசியல்வாதிகள்தான் அப்படி இருந்தால் போகட்டும். ஆனால் நாளைய எதிர்காலமான மாணவர்கள் ஒரு விசயத்தை மேலோட்டமாக பார்ப்பதை நினைக்கும்போது மிகவும் வருத்தமாக இருக்கிறது. இன்னும் எத்தனை கிராமங்களில் இரண்டு டம்ளர் முறை இருக்கிறது? ஊரையும் சேரியையும் பிரிக்கும் சுவர் இருக்கிறது? இதெல்லாம் இன்றைய அறிவில் சிறந்த சமூகத்திற்கு தெரிந்திருக்கிறதா என்றால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். இந்த சமூகத்தை ஏற்ற தாழ்வுகள் இல்லாத சமூகமாக மாற்றுவது படித்த நம் போன்ற இளைஞர்கள் கையில்தான் இருக்கிறது. அதானால் தான் மற்றும் தன் குடும்பம் மட்டும் நல்ல இருந்தால் போதும் என்று சுயநலமாக இருப்பதை விட்டுவிட்டு எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும் என்று பொதுநலமாக சிந்தித்தால் அது நமக்கும் நம் வருங்கால சந்ததியினருக்கும் உபயோகமாக இருக்கும். வீடு நலம்பெறும் நம் நாடும் நலம்பெறும். http://www.youtube.com/watch?v=QubyOMCTkHc

Wednesday, August 29, 2012

ஆறாம் அறிவு

அன்றும் எப்போதும் போல 4.45 மணிக்கு எழுந்துவிட்டான் நவீன். ஐந்து மணியிலிருந்து ஐந்தரை மணிவரை அவன் நடைபயிற்சி செய்யும் நேரம். விடிந்தும் விடியாத அந்த அதிகாலை பொழுது அவனுக்கு சற்றே புதிதாய் தோன்றியது. ஆங்காங்கே "கொக்கரக்கோ" என்று சேவல் கூவுவதும், எங்கோ ஒரு நாய் "வௌவ்" என்று ஊளையிடுவதும் அவனுக்கு மிகத்தெளிவாய் கேட்டது. முகத்தைக் கழுவிக்கொண்டு, காலில் ஷூவை மாட்டிக்கொண்டு நடக்க ஆரம்பித்தான் நவீன்.
அவனுடைய வீட்டிலிருந்து சுமார் அரை கிலோமீட்டர் தூரத்தில் ஒரு பூங்கா உள்ளது. பூங்காவின் பெயர் "சுந்தரவனம்" பூங்கா. பெயருக்கேற்றாற்போல், எங்கும் அடர்ந்த மரங்களும், ஆங்காங்கே அழகிய மலர்களுமாய் மனதைக் கொள்ளை கொள்ளும்படி இருந்தது. கல்மனம் படைத்த மனிதன் கூட அந்த பூங்காவினுள் நுழைந்தால் திருந்தி நல்மனம் படைத்தவன் ஆகிவிடுவான். மனிதனே, என்னைப்பார்! ஒரே நாளில் பூத்து உதிரும் நான் எப்படி முகம் மலர்ந்து, அகம் மலர்ந்து சிரித்துக் கொண்டிருக்கிறேன்; ஆனால் நீயோ தினமும் கவலைகளில் மூழ்கி, முகம் சோர்ந்து, அகம் சோர்ந்து உள்ளுக்குள் புழுங்கிக் கொண்டிருக்கிறாய். எனக்கும் ஒரே வாழ்க்கைதான்; உனக்கும் ஒரே வாழ்க்கைதான். அந்த ஒரு வாழ்கையை என்னை மாதிரி சிரித்துகொண்டே வாழு என்று சொல்லாமல் சொல்லி கண்சிமிட்டியது அங்கிருந்த ஒரு ரோசாப்பூ.
நவீன் தினமும் அந்த பூங்காவரை நடந்து வந்து, பூங்காவினுள் சிறிது நேரம் அமர்ந்து, இயற்கையை ரசித்துவிட்டு பிறகு வீடு திரும்புவான். அது அவனுக்கு மிகுந்த புத்துணர்ச்சியைத் தந்தது. அந்த நாளை அவன் உற்சாகமாய்த் துவங்க அது உதவியது. ஆனால், அது மட்டுமே காரணம் என்று சொல்லிவிட முடியாது. வேறொரு காரணமும் இருக்கிறது. அது அந்த பூங்காவினுள் இருக்கும் ஒரு நாய். நாயைப் பற்றி நினைவுகள் வந்ததும் நவீனின் எண்ணங்கள் சற்று பின்னோக்கி நகர்ந்தன.

சில மாதங்களுக்கு முன்பு வழக்கம்போல அதிகாலையில் நடைபயிற்சி செய்து கொண்டிருந்தான் நவீன். அதிகாலை என்பதால் மக்கள் நடமாட்டம் மிகக்குறைவாக இருந்தது. அவனைப் போலவே சிலர் நடைபயிற்சி செய்து கொண்டிருந்தார்கள். சாலையில் அவ்வப்போது சில கார்களும், பேருந்துகளும், இருசக்கர வாகனங்களும் சென்று கொண்டிருந்தன. நவீன் பூங்காவை நெருங்கினான். அங்கே அவன் கண்ட காட்சி அவனைப் பரிதாபப்பட வைத்தது. சாலையின் ஓரமாக ஒரு நாய் "வௌவ்" "வௌவ்" என்று தன் உயிர் கரையும் மட்டும் கத்திக்கொண்டிருந்தது. அதன் கண்களில் கண்ணீர் வடிந்து கொண்டிருந்தது. அதன் ஒரு காலில் பலமாக அடிபட்டு ரத்தம் வடிந்து கொண்டிருந்தது. எதாவது ஒரு வாகனம் மோதிச் சென்றிருக்க வேண்டும்.
நடைபயிற்சி செய்து கொண்டிருந்தவர்கள் அந்த நாயை வேடிக்கை பார்த்தபடி சென்று கொண்டிருந்தனர். மனிதர்கள் செத்துக்கிடந்தாலே கண்ணிருந்தும் குருடராய் கண்டுகொள்ளாமல் கடந்து செல்லும் கல்மனம் படைத்த இந்த கலிகாலத்தில் ஒரு நாய் துடித்துக் கொண்டிருப்பதை வேடிக்கைப் பார்த்தபடி சென்று கொண்டிருப்பது அவனுக்கு எந்த விதமான அதிர்ச்சியையும் ஏற்படுத்திவிடவில்லை. ஆனால் நவீனால் அப்படி இருக்க முடியவில்லை. ஒரு நாய் துடித்துக்கொண்டிருப்பதைப் பார்த்ததும் ஏதோ ஒரு மனிதன் அங்கே உயிருக்குப் போராடிக்கொண்டிருப்பதாகத்தான் அவனுக்குத் தோன்றியது. நாய்க்கும் மனிதனுக்கும் அங்கே அவனுக்கு வித்தியாசம் தெரியவில்லை. உலகில் உள்ள எல்லா உயிரினங்களும் காற்றைத் தான் சுவாசிக்கின்றன. உயிரின் மதிப்பை அறிந்தவன் ஒரு சிறு புழு பூச்சி துடித்துக்கொண்டிருந்தாலும் கண்ணின் ஓரம் ஈரம் கசிவான். உயிரின் வலியை உணர்ந்தவன் எந்த ஒரு உயிருக்கும் தீங்கு விளைவிக்க மாட்டான். ஒரு உயிர் துடித்துக் கொண்டிருப்பதைப் பார்த்துக் கண்டும் காணாமல் செல்வது அந்த உயிரைக் கொல்வதற்குச் சமம்.

மனிதாபிமானம் என்பது சட்டம் இயற்றியோ அல்லது தண்டனைகள் தருவதாலோ வருவதில்லை. அப்படி வந்தால் அது பயத்தினாலேயன்றி உள்ளத்தால் அல்ல. உள்ளத்தால் உயர்ந்தவராலேயே ஒரு உயிரின் மதிப்பை உணர முடியும். நவீன் சற்றும் யோசிக்கவில்லை. உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த அந்த நாயைத் தூக்கிக்கொண்டு வீட்டை நோக்கி விரைந்து சென்றான். வீட்டிற்குச் சென்றதும் அந்த நாயின் காலைச் சுத்தமாகக் கழுவி அடிபட்ட இடத்தில் மருந்திட்டு கட்டுபோட்டு வீட்டின் ஓரத்தில் கிடத்தினான். நாயின் கண்ணோரத்தில் இன்னும் சிறிது கண்ணீர் வடிந்து கொண்டிருந்தது. ஆனால் அந்த நாய் அவனை ஒரு கனிவான பார்வையில் வைத்த கண் வைத்தபடி பார்த்துக் கொண்டிருந்தது. அந்த பார்வை அவனை ஏதோ செய்வது போல் இருந்தது. அப்படியே அந்த நாயை கட்டி அனைத்துக் கொண்டான். அவன் மனம் மிகவும் லேசாகி, நெஞ்சம் குளிர்ந்து, உயிர் கரைவது போல் இருந்தது. அவனின் அப்போதைய மனநிலையை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. இந்த உலகத்தில் வாழும் நவீனை போன்ற சில உள்ளங்களாலேயே அதை உணர முடியும்.
நவீன் அந்த நாய்க்கு "ராம்" என்று பெயர் வைத்தான். பிறகு அந்த நாய் சற்று தேறியதும் அதனை கொண்டுபோய் அந்த பூங்காவினுள் விட்டுவிட்டான். அன்றிலிருந்து இன்றுவரை அந்த நாய் தினமும் காலையில் நவீனின் வருகைக்காக காத்திருப்பதும், அவன் வந்தவுடன் அவன் தோளில் ஏறி விளையாடுவதும் இன்றளவும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. ஏதாவது ஒருநாள் அவன் வரவில்லையென்றால் அது அன்று முழுவதும் எதையோ பறிகொடுத்தது போல அங்கும் இங்கும் அலைந்து கொண்டு இருக்கும். அதனால் அதை பார்ப்பதற்காகவே தினமும் அவன் வருவான். சற்று நேரம் அந்த நாயுடன் கொஞ்சிவிட்டு வீடு திரும்புவான். அது அவனுக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தந்தது. அந்த நாய்க்கும்தான்.
இப்படி கடந்த கால நினைவுகளில் மூழ்கி போனவனாய் சாலையோரம் நடந்து சென்று கொண்டிருந்தான். பூங்காவிற்கு அருகில் வந்துவிட்டான். ராம் அவனின் வருகையை மிகுந்த ஆவலோடு பார்த்துக் கொண்டிருந்தது. நவீன் இன்னும் அந்த நினைவுகளில் இருந்து மீளாதவனாய் சாலையோரத்தில் இருந்து விலகி சாலைக்கு நடுவில் சென்றுவிட்டான். அந்த நேரம் பார்த்து அந்த சாலை வழியே ஒரு "லாரி" மிக வேகமாக வந்துகொண்டிருந்தது. பூங்காவிற்கு அருகில் இருந்த ராம் இந்த காட்சியைப் பார்த்து திகிலடைந்தது. ஏதோ விபரீதம் நடக்க போகிறது என்று அதன் உள்மனம் பதறியது. நவீன் இன்னும் புற உலகிற்குள் வராதவனாய் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தான். ராம் தன் உயிர் கரையும் மட்டும் கத்திகொண்டிருந்தது. ஆனால் நவீன் இன்னும் அகவுலகில் இருந்து மீளவில்லை. லாரி நவீனை மோத இருந்த சமயத்தில் ராம் பாய்ந்து சென்று நவீனை ஓரமாக தள்ளிவிட்டது.

ராம் தள்ளிவிட்டதில் சிறிய சிராய்ப்புகளுடன் கீழே விழுந்து கிடந்தவன் எழுந்து பார்த்தபோது அங்கே அவன் கண்ட காட்சி அவனை நிலைகுலையச்செய்தது. அங்கே ராம் லாரியின் சக்கரத்தில் அடிபட்டு தலை நசுங்கி அந்த இடத்திலேயே செத்துக்கிடந்தது. நவீனுக்கு எல்லாம் கனவு போலத் தோன்றியது. அப்படியே சாலையோரமாக சரிந்து விழுகிறான். மனதில் எண்ண அலைகள் ஓடியது. முன்னொரு நாள் அந்த நாய் அடிபட்டு கிடந்தபோது அதற்கு யாரும் உதவ முன்வராததும்; இன்று தான் செய்த ஒரு சிறிய உதவிற்கு நன்றிக்கடனாய் தன்னைக் காப்பாற்றிவிட்டு அது உயிரைவைட்டதும்; மனிதன் தன்னை ஆறு அறிவுடையவனாக நினைத்து பெருமை பேசிக்கொள்வதும்; மற்ற விலங்குகளை அறிவில் தன்னைவிட தாழ்ந்த பிறப்பாக கருதுவதும்; இப்படி என்னென்னவோ அவன் மனதில் தோன்றியது.

இன்று அவனுக்கு உண்மையிலேயே யார் உயர்ந்தவர்கள் என்று விளங்கியது. அவன் சுயநினைவு திரும்ப மிக நீண்ட நேரம் ஆயிற்று.

Monday, July 19, 2010

கருணாநிதியின் கொள்கை!

கலைஞர் கருணாநிதியின் டாப் டென்:


1 .பிடித்தது: தம் மக்கள்
2 .பிடிக்காதது: தமிழக மக்கள்
3 .கனவில் வருபவர்: எதிர்க்(எதிரிக்)கட்சி தலைவர் ஜெயலலிதா
4 .பிடித்த பொருள்: பேனா
5 .கொள்கை: பகுத்தறிவு (பிறருக்கு மட்டும்)
6 .சாதனை: அனைத்திலும் இலவசம், குடும்பம் முழுவதையும் ஆட்சியில் அமர வைத்தது
7 .தொழில்: தினசரி அறிக்கை விடுவது, அடிக்கடி விழா நடத்தி தன்னைப் பற்றி துதிபாட வைப்பது
8 .உபதொழில்: சினிமாவிற்கு திரைக்கதை, வசனம் எழுதுவது
9 .பிடித்த நாடு: தமிழ்நாடு
10 .பிடிக்காத நாடு: என்றுமே குடைச்சல் தரும் இலங்கை

Saturday, July 17, 2010

என்னை எழுத தூண்டியது...

நான் ப்ளாக் எழுதி பல மாதங்கள் ஆகிவிட்டன. இப்போது எழுத வேண்டிய கட்டாயம். சென்னையில் சமீபத்தில் பார்த்த சம்பவம் என்னை மிகவும் பாதித்துவிட்டது. ஏற்கனவே பலமுறை இம்மாதிரியான சம்பவங்களை பார்த்திருந்த போதிலும் சமீபத்தில் பார்த்த சம்பவம் என்னை வலைப்பதிவில் எழுத வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளிவிட்டது. சரி விஷயத்திற்கு வருவோம்.

ஒரு மாலைப்பொழுது. நேரம் சுமார் 6.30 pm இருக்கும். திநகர் சரவணா ஸ்டோர்ஸ் -இல் துணிமணிகள் எடுத்துக் கொண்டு வேளச்சேரியில் நான் தங்கியிருக்கும் வீட்டிற்கு செல்ல திநகர் பேருந்து நிலையத்தில் 5A பேருந்துக்காக காத்திருந்தேன். அப்போது பேருந்து நிலையத்தின் ஓரத்தில் சுமார் 80 வயதான பாட்டி ஒருவர் பிச்சை எடுத்து கொண்டிருந்தார். மிகவும் தளர்ந்த தேகம். சுருங்கிவிட்ட தோள்கள். ஒடுங்கிவிட்ட கண்கள். இன்றோ நாளையோ என்று சொல்ல முடியாத அளவிற்கு ஒட்டிய வயிறு. எந்த ஒரு மனிதனுக்கும் அந்த காட்சியைப் பார்த்தால் கண்ணீர் வரும். எனக்கும் வந்தது. நான் மனிதன். ஒரு சிலர் அந்த பாட்டி வைத்திருந்த தட்டில் ஒன்று இரண்டு என்று போட்டு சென்றனர். நான் என் பையிலிருந்த ஒரு பத்து ரூபாய் நோட்டை எடுத்து அந்த பாட்டியின் கையில் கொடுத்து விட்டு வந்துவிட்டேன். பின் யோசித்து பார்த்தேன். அந்த பத்து ரூபாயை வைத்து அந்த பாட்டி ஒருவேளை சாப்பாடு கூட சாப்பிட முடியாது என்று நினைத்து ஒரு ஐம்பது ரூபாய் நோட்டை அந்த பாட்டியின் கையில் வைத்துவிட்டு வந்தேன்.


5A பேருந்து வந்ததும் ஏறிக்கொண்டேன். பேருந்து திரும்பும்வரை அந்த பாட்டியைப் பார்த்துக் கொண்டே சென்றேன். மனதில் எண்ண அலைகள் வந்து போய்க்கொண்டிருந்தன. அந்த பாட்டியைப் போல எத்தனை பேர் அனாதைகளாக சொந்த வீட்டிலிருந்து துரத்தப்பட்டிருக்கின்றனர். கடைசி காலத்தில் தான் பெற்ற மகன் தன்னைக் காப்பாற்றுவான் என்று எண்ணியிருந்த அந்த தாயின் எண்ணங்களே அந்த மகனுக்கு பெருஞ்சாபமாக மாறாதா? தன்னுடைய கடைசிகாலத்தில் தன் மகன் தன்னையும் அனாதையாக விடக்கூடும் என்று யோசிக்க தெரியாதா?அனாதையாக விடப்பட்ட அந்த தாயின் கண்ணீர், பிற்காலத்தில் அந்த மகனின் கண்களில் ரத்தக்கண்ணீராய் வெளிப்படக்கூடும். திநகர் பேருந்து நிலையத்தில் பார்த்த பாட்டியிடம் என் தாயைப் பார்த்தேன். அனாதைகளாக விடப்பட்ட ஒவ்வொரு முதியவர்களிடமும் என் ரத்த சொந்தங்களைப் பார்க்கிறேன். என்னுடைய இந்த எண்ணங்கள் இதைப் படித்துக் கொண்டிருக்கும் பலருக்கும் ஒத்துப்போகும் என்று நினைக்கின்றேன்.

சமீபத்தில் இப்படி அனாதைகளாக விடப்பட்ட வயதான ஒருவரின் புகாரின்பேரில் அவருடைய மகனைக் கைது செய்தது சென்னை மாநகராட்சி. வரவேற்கப்பட வேண்டிய விஷயம். ஆனால், இதனால் அந்த மகன் உண்மையிலேயே தன் தவறை உணர்வானா என்பது கவனிக்கப்பட வேண்டிய விஷயம். பள்ளிபருவத்திலேயே பிள்ளைகளிடம் நற்பண்புகளை வளர்க்க வேண்டிய பொறுப்பு ஆசிரியர்களிடம் உள்ளது. சான்றோர்களை மதித்தல்; பெற்றோர்களிடம் தினமும் ஆசிபெறுதல்; தாய்நாட்டை நேசித்தல் போன்ற உயர்ந்த பண்புகளை மாணவர்களுக்கு ஆசிரியர்கள் போதிக்க வேண்டும். இதனால் மாணவர்கள் பிற்காலத்தில் ஒழுக்கத்தில் உயர்ந்தவர்களாக வருவார்கள். இதற்கான பொறுப்பு அரசிடமும், ஆசிரியர்களிடமும் உள்ளது.ஒவ்வொரு குடிமகனும் தன்னுடைய மனசாட்சியின்படி நடந்துகொண்டால் அநாதைகளே இல்லாத இந்தியா மிக விரைவில் மலரும் என்பது திண்ணம்.

Sunday, March 7, 2010

உன்னைக் கைவிடமாட்டேன் - ஒரு பக்க கதை..அன்று சிறுவர்கள் அந்த அழகிய கிராமத்துத் தெருவில் விளையாடிக் கொண்டிருந்தனர். திருடன் போலீஸ் விளையாட்டு. அதாவது ஒருவன் தன் கண்ணை மூடிக்கொள்ள வேண்டும். மற்றவர்கள் எங்காவது சென்று ஒளிந்து கொள்ள வேண்டும். ஒளிந்து கொண்டவர்களைக் கண்ணைமூடிக்கொள்பவன் கண்டுபிடிக்க வேண்டும். இதுதான் விளையாட்டு. கண்ணை மூடிக் கொள்பவன் போலீஸ். நம்ம ஊரில் நடப்பது போல. ஆனால் நம்ம போலீஸ் கொஞ்சம் திறமைசாலி. ஹீரோவாச்சே. ஓடி உஷாராக ஒளிந்து கொள்பவர்கள் திருடர்கள். இப்போது நம்ம ஹீரோ கண்ணை திறந்து கொள்கிறான். எதிரில் யாரும் இல்லை. சுற்றும் முற்றும் பார்க்கிறான். ஒரு நாதியில்லை.

நீண்ட நேரம் அலைந்து தேடியும் எந்த திருடனையும் பிடிக்க முடியவில்லை நம்ம ஹீரோவால். என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருந்த போது அந்த தெருவில் உள்ள ஒரு வீட்டில் ஏதோ ஒரு உருவத்தின் நிழல் அசைவதைக் கண்டான். அவன் முகம் சந்தோஷத்தில் பிரகாசித்தது. திருடன் அகப்பட்டுவிட்டான் என்ற சந்தோஷத்தில் அந்த வீட்டை நோக்கி ஓடினான். மூச்சிரைக்க ஓடி அந்த வீட்டின் வாசலை அடைந்தவனுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது. அந்த வீட்டில் வசிக்கும் ஒரு சிறுமி தன்னுடைய பென்சில் பாக்ஸ்-ஐ எடுப்பதற்காக ஒரு நாற்காலியில் ஏறி தேடிக்கொண்டிருந்தாள். நம்ம ஹீரோ வந்த அதிர்ச்சியில் அந்த சிறுமி பயந்து நாற்காலியில் இருந்து தவறி விழப்போனாள். விழப்போன அந்த சிறுமியை நம்ம ஹீரோ தாங்கிக் கொள்கிறான்.


கொஞ்ச நேரம் நம்ம ஹீரோ அந்த சிறுமியை தன் கைகளில் தாங்கியபடியே அவளுடைய அழகிய முகத்தை பார்த்துக் கொண்டிருந்தான். அவள் தன்னை இறக்கி விடும்படி கூறுகிறாள். ஹீரோவும் அவளை இறக்கி விடுகிறான். அவளின் பெயர் என்னவென்று கேட்கிறான். தமிழரசி என்கிறாள். அவளின் பெயர் அவளைப் போலவே அழகாக இருப்பதாக கூறுகிறான். அவள் சிறிதாக புன்னகைக்கிறாள். அவனுடைய பெயர் என்னவென்று கேட்கிறாள். தமிழரசன் என்கிறான். அவள் சிரிக்கிறாள். சிறிது நேரம் இருவரும் பேசிக்கொள்கிறார்கள். நம்ம ஹீரோவுக்கு நேரம் ஆகிவிட்டது. ஏதாவது ஒரு திருடனைக் கண்டுபிடித்தாக வேண்டும். அவளிடம் இருந்து விடைபெற்று கொள்கிறான்.


சிறிது நேரத்தில் ஒரு திருடனைக் கண்டுபிடித்து விடுகிறான். ஆட்டம் முடிகிறது. மறுபடியும் புது ஆட்டம். இப்போது கண்டுபிடிக்கப்பட்ட திருடன்தான் போலீஸ். அவன் மற்றவர்களைக் கண்டுபிடிக்க வேண்டும். போலீஸ் கண்ணை மூடிக் கொள்கிறான். மற்றவர்கள் ஓடி மறைந்து கொள்கிறார்கள். நம்ம ஹீரோ ஹீரோயின் வீட்டை நோக்கி ஓடுகிறான். வாசலில் நின்று கொண்டிருந்த நம்ம ஹீரோயின் அவன் வருவதைக் கண்டு நாற்காலியில் ஏறிக் கொள்கிறாள். ஹீரோ வீட்டில் நுழைந்தவுடன் அவள் நாற்காலியில் இருந்து தவறி விழுகிறாள். நம்ம ஹீரோ அவளைத் தாங்கிக் கொள்கிறான். அவளுக்குத் தெரியும் தன் தலைவன் தன்னைத் தாங்கிக் கொள்வான் என்று...