Sunday, March 22, 2009

ஐபிஎல் போட்டிகள் வெளிநாட்டுக்கு மாற்றம்



மக்களவை தேர்தல் நடப்பதால் ஐபிஎல் 20-20 கிரிக்கெட் போட்டிக்கு பாதுகாப்பு அளிக்க மாநில அரசுகள் மறுத்துவிட்டன. இதனால் போட்டிகளை இந்தியாவில் நடத்துவதில்லை என ஐபிஎல் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. தென் ஆப்ரிக்கா அல்லது இங்கிலாந்தில் போட்டிகள் நடக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய கிரிக்கெட் வாரியம் சார்பில் தொடங்கப்பட்ட அமைப்பு ஐபிஎல். இந்த அமைப்பு கடந்த ஆண்டு நடத்திய போட்டிகள் பெரும் வரவேற்பைப் பெற்றன. இதில் விளையாட உலகின் முன்னணி வீரர்கள் பல கோடி ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டனர். இதையடுத்து இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் வரும் ஏப்ரல் 10 ஆம் தேதி தொடங்கி மே 26 ஆம் தேதி வரை இந்தியாவில் நடைபெறுவதாக இருந்தது. ஆனால் மக்களவை தேர்தல் ஏப்ரல் 16 தொடங்கி மே 13 வரை நடைபெறும் என தேர்தல் கமிஷன் அறிவித்தது. பாகிஸ்தானில் இலங்கை வீரர்கள் மீது தாக்குதல் நடந்ததால் வீரர்களுக்கு பாதுகாப்பு அளிக்க முடியாது என மத்திய அரசு கூறியது. அட்டவணையை மாற்றியமைக்கும் படி கேட்டுக்கொண்டது.

இதையடுத்து சில மாறுதல்களுடன் புதிய அட்டவணையை மத்திய அரசுக்கு அனுப்பியது ஐபிஎல் நிர்வாகம். ஆனால் அதையும் மத்திய அரசு ஏற்றுக் கொள்ளவில்லை. அதனால் மீண்டும் இரண்டு முறை அட்டவணையை மாற்றி கொடுத்தது ஐபிஎல். அதையும் மத்திய அரசு ஏற்றுக் கொள்ளவில்லை. மக்களவை தேர்தலை நடத்துவதே எங்களுக்கு முக்கியம் என்று உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்தார்.

இதையடுத்து, இந்திய கிரிக்கெட் நிர்வாகிகள் இன்று மும்பையில் கூடி ஆலோசனை நடத்தினர். இதில் ஐபிஎல் போட்டிகளை இந்தியாவில் நடத்துவதில்லை என முடிவு செய்யப்பட்டது. இது குறித்து பிசிசிதலைவர் ஷாசங் மனோகர் கூறியதாவது:

இந்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் இந்தியாவில் நடத்தப்படமாட்டாது.தேர்தலை முன்னிட்டு பாதுகாப்பு காரணங்களுக்காக வெளிநாட்டுக்கு இந்த போட்டிகள் மாற்றப்படுகிறது. தென் ஆப்ரிக்கா அல்லது இங்கிலாந்தில் போட்டிகள் நடக்கலாம். இதனால் இந்திய மக்களிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்கிறோம். மாநில அரசுகள் பாதுகாப்பு அளிக்க முடியாது என்று கூறியதால் இந்த முடிவை மேற்கொள்ள வேண்டியதாகிவிட்டது. இந்திய மக்கள் போட்டிகளை பார்க்கும் வசதியாக இந்திய நேரப்படி மாலை 4 மணிக்கு அனைத்து போட்டிகளும் தொடங்கும். இவ்வாறு அவர் கூறினார்.

1 comment:

ttpian said...

உலகத்தின் 5 ஆம் படை(சொறி/சிரங்கு)இருந்தும் ஒன்றும் புடுங்கமுடியாதா?