
கனவொன்று கண்டேன்
தோழி-நான்
கனவொன்று கண்டேன்!
கடற்கரை மணலில்
கால் பதித்து
அலையதை அழிக்காமல்
நான் பார்த்து நிற்க-நீ
அழகழகாய் வைத்து
நடந்த உந்தன்
பாதச் சுவடுகளை,
மாலைச் சூரியனின்
மயக்கும் விழிப் பார்வைக்குள்
இரவுப் போர்வை
நெருங்கும் போது
நிலவுக்கும் இரவுக்கும் சண்டையாம்,
நீ நிற்கும் போது
நிலவு வர வெட்கமாம்!
பாதத்தில் ஒட்டியிருந்த
கடற்கரை மணலை
கடல் நீரில்
கழுவி நீ வந்த போது
கடல் குளித்தெழுந்த
நிலவொன்றை நேரில் கண்டேன்-அதை
உன்னிடமும் சொன்னேன்,
அசடு வழிகிறது
ஆபத்து எனக்கென்றாய்,
கடலலைகள் கைதட்டிச் சிரித்தது, அதில்
ஒரு அலை மேலெழுந்து
உன்னைப் பார்த்துக் கொண்டது,
சரி, ஏதோ முக்கியமான
விடயம் பேச வேண்டும் என்றாயே!
நான் பேச வேண்டிய விடயங்கள்
உன்னைக் கண்டாலே
மறந்து விடுகின்றன என்பது
உனக்கு புரியுமா?
இருள் சூழ்ந்து விட்டது
இனியும் நிற்க முடியாது-நீ
கூறிக் கொண்டே வந்தாய்
நானும் ஆமோதித்தேன்
சில...
வெள்ளாப்பு பூச்சிகள்
என்னைக் கிள்ளி
உன் காதலைச் சொல் என்றது
அதை அடித்துப் புதைத்து விட,
என்ன? என்றாய்
குற்றுயிராய் கிடந்த
வெள்ளாப்புப் பூச்சி
மீண்டும்,
அதை காலால் நசுக்கி விட்டு
ஒன்றுமில்லை என்றேன்,
சரி, நடப்போம்
நடந்து கொண்டே
கேட்டேன்
நாளைக்கும் வருவோமா?
சிரித்துக் கொண்டே
ஒரு வாரமாக
இதுதானே நடக்குதென்றாய்,
மௌன இடைவெளிக்குப் பின்
வருகிறேன் என்றாய்
முட்டை உடைந்து
குஞ்சு வெளி வரும்
வேளை வந்தது!
நாளைக்காவது சொல்வானா
என்ற ஏக்கம்
அவளிடம்?
அவள் ஞாபங்களோடே...
கடற்கரை நோக்கி
நான்...
சென்று கொண்டிருந்தேன்!
ஒரு பெரும்
சுனாமியின்
பேரழிவின் பின்புதான்
புரிந்தது எனக்கு!
அவளை நான்
கடலுக்கு அறிமுகம்
செய்தது தவறென்று!
கவிஞர் அல்லையூர் சி.விஜயன்
No comments:
Post a Comment