Saturday, July 17, 2010

என்னை எழுத தூண்டியது...

நான் ப்ளாக் எழுதி பல மாதங்கள் ஆகிவிட்டன. இப்போது எழுத வேண்டிய கட்டாயம். சென்னையில் சமீபத்தில் பார்த்த சம்பவம் என்னை மிகவும் பாதித்துவிட்டது. ஏற்கனவே பலமுறை இம்மாதிரியான சம்பவங்களை பார்த்திருந்த போதிலும் சமீபத்தில் பார்த்த சம்பவம் என்னை வலைப்பதிவில் எழுத வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளிவிட்டது. சரி விஷயத்திற்கு வருவோம்.

ஒரு மாலைப்பொழுது. நேரம் சுமார் 6.30 pm இருக்கும். திநகர் சரவணா ஸ்டோர்ஸ் -இல் துணிமணிகள் எடுத்துக் கொண்டு வேளச்சேரியில் நான் தங்கியிருக்கும் வீட்டிற்கு செல்ல திநகர் பேருந்து நிலையத்தில் 5A பேருந்துக்காக காத்திருந்தேன். அப்போது பேருந்து நிலையத்தின் ஓரத்தில் சுமார் 80 வயதான பாட்டி ஒருவர் பிச்சை எடுத்து கொண்டிருந்தார். மிகவும் தளர்ந்த தேகம். சுருங்கிவிட்ட தோள்கள். ஒடுங்கிவிட்ட கண்கள். இன்றோ நாளையோ என்று சொல்ல முடியாத அளவிற்கு ஒட்டிய வயிறு. எந்த ஒரு மனிதனுக்கும் அந்த காட்சியைப் பார்த்தால் கண்ணீர் வரும். எனக்கும் வந்தது. நான் மனிதன். ஒரு சிலர் அந்த பாட்டி வைத்திருந்த தட்டில் ஒன்று இரண்டு என்று போட்டு சென்றனர். நான் என் பையிலிருந்த ஒரு பத்து ரூபாய் நோட்டை எடுத்து அந்த பாட்டியின் கையில் கொடுத்து விட்டு வந்துவிட்டேன். பின் யோசித்து பார்த்தேன். அந்த பத்து ரூபாயை வைத்து அந்த பாட்டி ஒருவேளை சாப்பாடு கூட சாப்பிட முடியாது என்று நினைத்து ஒரு ஐம்பது ரூபாய் நோட்டை அந்த பாட்டியின் கையில் வைத்துவிட்டு வந்தேன்.


5A பேருந்து வந்ததும் ஏறிக்கொண்டேன். பேருந்து திரும்பும்வரை அந்த பாட்டியைப் பார்த்துக் கொண்டே சென்றேன். மனதில் எண்ண அலைகள் வந்து போய்க்கொண்டிருந்தன. அந்த பாட்டியைப் போல எத்தனை பேர் அனாதைகளாக சொந்த வீட்டிலிருந்து துரத்தப்பட்டிருக்கின்றனர். கடைசி காலத்தில் தான் பெற்ற மகன் தன்னைக் காப்பாற்றுவான் என்று எண்ணியிருந்த அந்த தாயின் எண்ணங்களே அந்த மகனுக்கு பெருஞ்சாபமாக மாறாதா? தன்னுடைய கடைசிகாலத்தில் தன் மகன் தன்னையும் அனாதையாக விடக்கூடும் என்று யோசிக்க தெரியாதா?அனாதையாக விடப்பட்ட அந்த தாயின் கண்ணீர், பிற்காலத்தில் அந்த மகனின் கண்களில் ரத்தக்கண்ணீராய் வெளிப்படக்கூடும். திநகர் பேருந்து நிலையத்தில் பார்த்த பாட்டியிடம் என் தாயைப் பார்த்தேன். அனாதைகளாக விடப்பட்ட ஒவ்வொரு முதியவர்களிடமும் என் ரத்த சொந்தங்களைப் பார்க்கிறேன். என்னுடைய இந்த எண்ணங்கள் இதைப் படித்துக் கொண்டிருக்கும் பலருக்கும் ஒத்துப்போகும் என்று நினைக்கின்றேன்.

சமீபத்தில் இப்படி அனாதைகளாக விடப்பட்ட வயதான ஒருவரின் புகாரின்பேரில் அவருடைய மகனைக் கைது செய்தது சென்னை மாநகராட்சி. வரவேற்கப்பட வேண்டிய விஷயம். ஆனால், இதனால் அந்த மகன் உண்மையிலேயே தன் தவறை உணர்வானா என்பது கவனிக்கப்பட வேண்டிய விஷயம். பள்ளிபருவத்திலேயே பிள்ளைகளிடம் நற்பண்புகளை வளர்க்க வேண்டிய பொறுப்பு ஆசிரியர்களிடம் உள்ளது. சான்றோர்களை மதித்தல்; பெற்றோர்களிடம் தினமும் ஆசிபெறுதல்; தாய்நாட்டை நேசித்தல் போன்ற உயர்ந்த பண்புகளை மாணவர்களுக்கு ஆசிரியர்கள் போதிக்க வேண்டும். இதனால் மாணவர்கள் பிற்காலத்தில் ஒழுக்கத்தில் உயர்ந்தவர்களாக வருவார்கள். இதற்கான பொறுப்பு அரசிடமும், ஆசிரியர்களிடமும் உள்ளது.ஒவ்வொரு குடிமகனும் தன்னுடைய மனசாட்சியின்படி நடந்துகொண்டால் அநாதைகளே இல்லாத இந்தியா மிக விரைவில் மலரும் என்பது திண்ணம்.

3 comments:

Anonymous said...

Very good post. Actually it is a serious problem we should take this matter now and act instantly.

உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) said...

பதிவு மிக அருமை

பாராட்க்கள்

அனைவரும் யோசிக்க வேண்டிய விடயம் ...

உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) said...

பாராட்டுக்கள் ....