Sunday, March 7, 2010

உன்னைக் கைவிடமாட்டேன் - ஒரு பக்க கதை..



அன்று சிறுவர்கள் அந்த அழகிய கிராமத்துத் தெருவில் விளையாடிக் கொண்டிருந்தனர். திருடன் போலீஸ் விளையாட்டு. அதாவது ஒருவன் தன் கண்ணை மூடிக்கொள்ள வேண்டும். மற்றவர்கள் எங்காவது சென்று ஒளிந்து கொள்ள வேண்டும். ஒளிந்து கொண்டவர்களைக் கண்ணைமூடிக்கொள்பவன் கண்டுபிடிக்க வேண்டும். இதுதான் விளையாட்டு. கண்ணை மூடிக் கொள்பவன் போலீஸ். நம்ம ஊரில் நடப்பது போல. ஆனால் நம்ம போலீஸ் கொஞ்சம் திறமைசாலி. ஹீரோவாச்சே. ஓடி உஷாராக ஒளிந்து கொள்பவர்கள் திருடர்கள். இப்போது நம்ம ஹீரோ கண்ணை திறந்து கொள்கிறான். எதிரில் யாரும் இல்லை. சுற்றும் முற்றும் பார்க்கிறான். ஒரு நாதியில்லை.

நீண்ட நேரம் அலைந்து தேடியும் எந்த திருடனையும் பிடிக்க முடியவில்லை நம்ம ஹீரோவால். என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருந்த போது அந்த தெருவில் உள்ள ஒரு வீட்டில் ஏதோ ஒரு உருவத்தின் நிழல் அசைவதைக் கண்டான். அவன் முகம் சந்தோஷத்தில் பிரகாசித்தது. திருடன் அகப்பட்டுவிட்டான் என்ற சந்தோஷத்தில் அந்த வீட்டை நோக்கி ஓடினான். மூச்சிரைக்க ஓடி அந்த வீட்டின் வாசலை அடைந்தவனுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது. அந்த வீட்டில் வசிக்கும் ஒரு சிறுமி தன்னுடைய பென்சில் பாக்ஸ்-ஐ எடுப்பதற்காக ஒரு நாற்காலியில் ஏறி தேடிக்கொண்டிருந்தாள். நம்ம ஹீரோ வந்த அதிர்ச்சியில் அந்த சிறுமி பயந்து நாற்காலியில் இருந்து தவறி விழப்போனாள். விழப்போன அந்த சிறுமியை நம்ம ஹீரோ தாங்கிக் கொள்கிறான்.


கொஞ்ச நேரம் நம்ம ஹீரோ அந்த சிறுமியை தன் கைகளில் தாங்கியபடியே அவளுடைய அழகிய முகத்தை பார்த்துக் கொண்டிருந்தான். அவள் தன்னை இறக்கி விடும்படி கூறுகிறாள். ஹீரோவும் அவளை இறக்கி விடுகிறான். அவளின் பெயர் என்னவென்று கேட்கிறான். தமிழரசி என்கிறாள். அவளின் பெயர் அவளைப் போலவே அழகாக இருப்பதாக கூறுகிறான். அவள் சிறிதாக புன்னகைக்கிறாள். அவனுடைய பெயர் என்னவென்று கேட்கிறாள். தமிழரசன் என்கிறான். அவள் சிரிக்கிறாள். சிறிது நேரம் இருவரும் பேசிக்கொள்கிறார்கள். நம்ம ஹீரோவுக்கு நேரம் ஆகிவிட்டது. ஏதாவது ஒரு திருடனைக் கண்டுபிடித்தாக வேண்டும். அவளிடம் இருந்து விடைபெற்று கொள்கிறான்.


சிறிது நேரத்தில் ஒரு திருடனைக் கண்டுபிடித்து விடுகிறான். ஆட்டம் முடிகிறது. மறுபடியும் புது ஆட்டம். இப்போது கண்டுபிடிக்கப்பட்ட திருடன்தான் போலீஸ். அவன் மற்றவர்களைக் கண்டுபிடிக்க வேண்டும். போலீஸ் கண்ணை மூடிக் கொள்கிறான். மற்றவர்கள் ஓடி மறைந்து கொள்கிறார்கள். நம்ம ஹீரோ ஹீரோயின் வீட்டை நோக்கி ஓடுகிறான். வாசலில் நின்று கொண்டிருந்த நம்ம ஹீரோயின் அவன் வருவதைக் கண்டு நாற்காலியில் ஏறிக் கொள்கிறாள். ஹீரோ வீட்டில் நுழைந்தவுடன் அவள் நாற்காலியில் இருந்து தவறி விழுகிறாள். நம்ம ஹீரோ அவளைத் தாங்கிக் கொள்கிறான். அவளுக்குத் தெரியும் தன் தலைவன் தன்னைத் தாங்கிக் கொள்வான் என்று...

3 comments:

Jerry Eshananda said...

ரசித்தேன்.

DREAMER said...

நல்லாயிருக்குங்க...

நானும் பலமுறை திருடன் போலீஸ் ஆட்டம் ஆடியிருக்கிறேன், ஆனா, எனக்கு இப்படி ஒரு சேன்ஸ் கிடைக்கலையேன்னு வருத்தமா இருக்கு...

நல்ல கதை...

-
DREAMER

எல் கே said...

nalla iruku