Friday, March 5, 2010

மனிதனை மனிதனாய்ப் பாருங்கள்...


சாமியார்கள் என்றாலே சந்தி சிரிக்கிறது. சாமியார்கள் என்றாலே காமியார்கள் என்றாகிவிட்ட பிறகு வேறென்னே சொல்ல?. சுவாமி (?!) நித்யானந்தரின் காமலீலைகள் நமக்கு அதைத்தான் காட்டுகின்றன. இந்திய மக்களுக்கோ அல்லது தமிழக மக்களுக்கோ இது புதிய பிரச்சனை அல்ல. அநேகமாக நாள்தோறும் போலி சாமியார்களைப் பற்றிய வேண்டதகாத செய்திகள் வந்துகொண்டுதான் இருக்கின்றன. ஆனாலும் நம் மக்களின் மனநிலை மாறுவதாக இல்லை. படிக்காத பாமர மக்களில் இருந்து படித்த பணக்காரர்கள் வரை சாமியார்களின் கால்களில் விழுந்து கொண்டிருக்கிறார்கள். இதில் பெரிய காமெடி என்னவென்றால் நம் தமிழக அரசியல்வாதிகளே சாமியார்களின் புகழைப் பாடுவதுதான். இந்த சாமியார் எனக்கு தன் மந்திர சக்தியால் மோதிரம் தந்தார்? செயினை தந்தார்? என்று பகுத்தறிவு இயக்கமான திமுக அமைச்சர்கள் காமெடி அடிக்கிறார்கள். பிரேம்ஜி ஸ்டைலில் சொல்வதென்றால் என்ன கொடுமை சார்.



சாமியார்கள் ஆகிவிட்டாலே அவர்களைப் பணக்காரர்களாக மாற்றிவிடுவது நமது மண்ணின் பெருமை போல. நம் நாட்டில் உள்ள சாமியார்களில் 99 சதவீத சாமியார்கள் காமியார்களாகத்தான் இருக்கிறார்கள். மீதி இருக்கிற ஒரு சதவீத சாமியார்கள் (சந்நியாசிகள்) நமக்கு தெரியாதவர்களாக இருக்கின்றனர். அதுதான் பிரச்சினை. தெரிந்து கொள்ள வேண்டியவற்றை தெரிந்து கொள்ளாமலிருப்பதும்; தெரிந்து கொள்ள கூடாததை தெரிந்து கொள்வதும் நமக்கு வாடிக்கையாகிவிட்டது. கடவுள் இருக்கிறாரா இல்லையா என்பது ஆதி காலம் முதலே நமக்கு விளங்காத விஷயமாகிவிட்டது. கடவுள் மனிதனைப் படைத்தானா அல்லது மனிதன் கடவுளைப் படைத்தானா?. இதற்கும் பதில் இல்லை. ஆத்திகர்கள் கடவுள் மனிதர்களைப் படைத்தார்கள் என்று நம்பிக்கை கொள்கிறார்கள். நல்லது. இருந்து கொள்ளட்டும். அப்படி இருக்கையில் அவர்கள் அந்த கண்ணுக்கு தெரியாத கடவுளை கும்பிடட்டும். ஏன் கண்ணுக்கு தெரிகிற சா(கா)மியார்களை கும்பிடுகின்றனர். நாத்திகர்கள் இந்த வகையில் மிகவும் போற்றத்தக்கவர்கள். கண்ணுக்கு தெரியாதவற்றை நம்ப அவர்கள் தயாராக இல்லை.

சுவாமி விவேகனந்தர் கூட இதையே சொல்கிறார். மூடநம்பிக்கைகள் மண்டிக்கிடக்கும் நாட்டிற்கு ஆத்திகத்தைவிட நாத்திகமே மேல் என்று?. இன்று நம் நாட்டில் சாமியார்கள் என்றாலே ஏதோ வானத்தில் இருந்து குதித்தவர்கள் என்று நினைத்து கொள்கிறார்கள். கடவுள் என்ற ஒன்றே மனிதன் தன் மனசாட்சிக்கு பயந்து தவறு செய்யாமல் இருப்பதற்கு படைக்கப்பட்ட ஒரு பொருள் என்று நிறைய நூல்களில் படித்திருக்கிறேன். அது உண்மைதான் என்பது என் கருத்து. இல்லையென்றால் இவ்வளவு கூத்து நடந்த பின்பும் அந்த கடவுள் வானத்தில் இருந்து இறங்கி வரவில்லை என்றால் அப்புறம் என்ன அவர் கடவுள்?.


மனிதனை மனிதனாய்ப் பாருங்கள். கடவுளாக அல்ல. பிறகு நீங்களே உங்களைக் கடவுளாக உணர்வீர்கள். எப்போதும்...ஒவ்வொருவருக்கும் இந்த எண்ணம் தோன்றுமானால் இந்த பூமி உருவம் உள்ள கடவுள்களின் பூந்தொட்டியாய் மாறும். நன்றி...

No comments: