Saturday, March 6, 2010

புத்தகம் எழுதுவது எப்படி?

உங்களுக்கு புத்தகம் எழுத வேண்டும் என்று ஆசையா?. அப்படியென்றால் இதனை சிறிது நேரம் படியுங்கள். மனிதனாய்ப் பிறந்த ஒவ்வொருவருக்கும் ஒரு பொழுதுபோக்கு இருக்க வேண்டும். அது விளையாட்டாக இருக்கலாம்; நெட்டில் அரட்டை அடிக்கலாம்; பூங்காவிற்கு செல்லலாம்; பிளாகில் கிறுக்கலாம் (என்னை மாதிரி); சினிமாவிற்கு செல்லலாம்; இப்படி நிறைய பொழுதுபோக்குகள் இருக்கின்றன. அப்படி ஒன்றுதான் புத்தகம் எழுத ஆரம்பிப்பது. ஆனால் புத்தகம் எழுத வேண்டும் என்றால் உங்களுக்கு தேவையான மிக முக்கியமான ஒன்று புத்தகம் எழுத வேண்டிய ஆர்வம் உங்களுக்கு கொஞ்சம் இருக்க வேண்டும். ஆர்வம் இல்லாமல் புத்தகம் எழுத ஆரம்பிக்காதீர்கள்.

எந்த வேலையை செய்தாலும் அதில் ஒரு ஐம்பது சதவீதமாவது ஆர்வம் இருக்க வேண்டும். அதற்கு மேல் இருந்தால் மிக்க நலம். சரி மேட்டருக்கு வருவோம். உங்களுக்கு புத்தகம் எழுத வேண்டிய ஆர்வம் இருந்தால் எதைப் பற்றி எழுத வேண்டும் என்று நிச்சயம் நீங்கள் யோசித்து வைத்திருப்பீர்கள். உதாரணமாக சிலருக்கு காதல் காதல் கவிதைகள் எழுத வேண்டும் என்று ஆர்வம் இருக்கும். சிலருக்கு சிறுகதைகள் எழுத வேண்டும் என்று ஆர்வம் இருக்கும். சிலருக்கு தன்னம்பிக்கை கட்டுரை எழுத வேண்டும் என்ற ஆர்வம் இருக்கும். சிலருக்கு அன்றாட வாழ்க்கையின் மற்றும் மனிதர்களின் நிஜங்களைப் பற்றி எழுத வேண்டும் என்று ஆர்வம் இருக்கும். இவை சில உதாரணங்கள் தான். இன்னும் எக்கச்சக்கமான உதாரணங்கள் இருக்கின்றன. உங்களுக்கு பிடித்தமானவற்றை தேர்வு செய்து கொள்ளலாம்.

உதாரணத்திற்கு நீங்கள் அன்றாட மனிதர்களின் வாழ்க்கையைப் பற்றி எழுத விரும்புகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். தினமும் நீங்கள் பேருந்தில் பயணம் செய்வீர்கள். ரயிலில் பயணம் செய்வீர்கள். நீங்கள் வேலை செய்யும் அலுவலகத்தில் நிறைய பேரை காணக் கூடும். அவர்களின் செயல்கள் உங்களுக்கு வித்தியாசமாக தெரியலாம். நீங்கள் பேருந்தில் பயணம் செய்யும் போது பல எளிமையான மனிதர்களை பார்த்திருப்பீர்கள். நான் பேருந்தில் பயணம் என்று சொல்வது சென்னையில் பயணம் செய்வதை அல்ல. சென்னையில் இருந்து வெளியூருக்கு பயணம் செய்வதைத்தான் சொல்கிறேன். சென்னையில் நான் தினமும் பயணம் செய்கிறேன். ஆனால் எனக்கு ஒரு கற்பனையும் வரவில்லை. அதற்கு சில அமைதியான சூழ்நிலை நிலவ வேண்டும்.


சரி. இப்போது நீங்கள் உங்கள் சொந்த ஊருக்கு சென்னையில் இருந்து பயணம் செய்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். ஊர் போய் சேர குறைந்தது எட்டு மணி நேரம் ஆகும் என்று வைத்துக் கொள்வோம். இதில் முக்கியமான ஒன்று நீங்கள் பேருந்தில் பயணம் செய்யும் போது ஜன்னலோர இருக்கையை தேர்வு செய்வது அவசியம். அப்போதுதான் வெளி உலகை ரசிக்க முடியும். உலகத்தை முழுமையாக அனுபவிக்க முடியும். காணும் மனிதர்களின் உள்ளங்களைக் களவாட முடியும். அவர்களின் மனதில் வழிந்தோடும் எண்ணங்களைப் புரிந்து கொள்ள முடியும். அவர்களின் சுகதுக்கங்களை அறிந்து கொள்ள முடியும். பாடும் பறவைகளின் ஓசையை ரசிக்க முடியும். கூவும் குயில்களின் கூரிய இசையை சந்திக்க நேரிடும். சாலையோரத்தில் ஆடுமாடுகள் மேய்த்துக் கொண்டிருக்கும் சிறுவர் சிறுமியர்களின் நிஜ வாழ்க்கையின் நிஜத்தினைப் புரிந்து கொள்ள முடியும். அவர்களின் மனதில் உள்ள சந்தோஷங்கள், கவலைகள், ஆசைகள், நிராசைகள் என பலவற்றை நீங்கள் புரிந்து கொள்ள முயல்வீர்கள். நானும் நிறைய முறை மாடு மேய்த்து இருக்கிறேன். இப்போது வீட்டுக்கு சென்றாலும் நான் மாடு மேய்ப்பேன்.

நான் பயணம் செய்யும் போது ஒவ்வொரு முறையும் ஆடுமாடுகள் மேய்க்கும் சிறுவர் சிறுமிகளை பார்த்திருக்கிறேன். அவர்களை எண்ணி மிகவும் மகிழ்ந்திருக்கிறேன். அதே சமயம் அதே அளவு வருத்தமும் இருக்கும். அவர்கள் மகிச்சியாக இருக்கிறார்களா. அவர்களுக்கும் ஆசைகள் இருக்கும்; நிறைய சம்பாதிக்க வேண்டும்; சந்தோஷமாக இருக்க வேண்டும்; அவர்களின் ஆசைகளை எப்படி அவர்கள் நிறைவேற்றிக் கொள்வார்கள் என இப்படி பல வருத்தங்கள் எனக்குள் இருக்கும். அவர்களின் மனதிற்குள் இருக்கும் ஆசைகளை அவர்களின் வாயிலாக கேட்க வேண்டும் என்று எனக்கு நீண்ட நாட்களாக ஆசை. ஆனால் அது இன்னும் நிறைவேறவில்லை. நான் நிறைவேற்றிக் கொள்ளவில்லை. இன்னும் மனிதர்களின் உள்ளங்களை நன்றாக புரிந்து கொள்ள வேண்டும் என்றால் நிறைய மனிதர்களை சந்தியுங்கள். நகரத்து மனிதர்களை அல்ல; கிராமத்து மனிதர்களை. எளிமையான மனிதர்களை. குக்கிராமங்களுக்கு பயணம் செல்லுங்கள். அங்கு வாழும் எளிமையான, உண்மையான, கருப்பு உருவத்தில் இருக்கும் வெள்ளை மனிதர்களை, குடிக்க நீர் கேட்டால் மோர் கொண்டு வந்து கொடுக்கும் சங்க காலத்து விருந்தோம்பல் மிக்க மனிதர்களிடம் பேசிப் பழகுங்கள். பிறகு நீங்களே எழுத வேண்டாம் என்று நினைத்தால் கூட உங்களால் எழுதாமல் இருக்க முடியாது.

சரி. முதலில் எழுத ஆரம்பிப்பவர்கள் சிறிது சிறிதாக எழுத ஆரம்பிக்கலாம். ஒரே அடியாக பெரிய புத்தகமாக எழுத நினைக்காதீர்கள். முதலில் ஒரு ஐந்து பக்கம் அல்லது பக்கம் கொண்ட சின்ன கட்டுரை எழுதிப் பழகலாம். நீங்கள் எழுதியதை மற்றவர்களிடம் காட்டி கருத்துகள் கேட்கலாம். அவருக்கும் அதில் ஆர்வம் இருக்க வேண்டும். சிலர் உங்கள் முயற்சியை கேலி செய்யலாம். அவர்களைக் கண்டுகொள்ளாதீர்கள்; அவர்களை அலட்சியப்படுத்திவிடுங்கள். நீங்கள் எழுதியதை பத்திரிகை எழுத்தாளர்களை தொடர்பு கொண்டு அவர்களின் கருத்துகளைக் கேட்கலாம். அவர்களின் உதவியை நாடலாம். நீங்கள் நல்ல சிறந்த எழுத்தாளராக வர வேண்டும் என்று நினைத்தால் நிறைய புத்தகங்களைப் படியுங்கள். நான் கூறியது உங்களுக்கு சிறிதளவாவது பயனுள்ளதாக இருந்திருக்கும் என்று நினைக்கிறேன். விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன.

பின்குறிப்பு:

கவிப்பேரரசு வைரமுத்துவின் கள்ளிக்காட்டு இதிகாசம் என்ற நூலைப் படியுங்கள். மிகச் சிறந்த நூல். விலை அதிகமில்லை. நூற்று பத்து ரூபாய்தான்.

4 comments:

பனித்துளி சங்கர் said...

Really nice

Murugan k said...

அருமை நண்பரே

Surya said...

நன்றி சகோதரா

Unknown said...

பயன் உள்ளதாக இருந்தது நன்றி....