Thursday, July 9, 2009

புதிய தேடல்.....


நேற்று சைதை ராஜ் தியேட்டரில் 'பசங்க' படம் பார்த்தேன். அருமையாக இருந்தது. தமிழ் சினிமாவில் சிறுவர்களுக்கான படங்கள் மிக குறைவான அளவே எடுக்கிறார்கள். அதுதான் ஏன் என்று புரியவில்லை. சிறுவர்களுக்கான ஹாலிவுட் படங்கள் நிறைய வருகின்றன. ஆனால் தமிழ் சினிமாவில் ஒரு வருடத்தில் சிறுவர்களுக்கான படம் எத்தனை வருகின்றது என்று பார்த்தால் மிக அதிகமாக இரண்டு அல்லது மூன்று படங்கள்தான் இருக்கும். இத்தகைய நிலை மாற வேண்டும். சிறுவர்களுக்கான படங்கள் நிறைய வெளி வர வேண்டும். அது தமிழ் சினிமாவிற்கு நல்லது.

சிறுவர்களுக்கான படங்களை குடும்பத்துடன் சென்று பார்ப்பதால் வசூலும் கூடும். அது சிறுவர்களுக்கான நல்ல பாடமாகவும் இருக்கும். 'பசங்க' படம் சிறுவர் மற்றும் பெரியவர்களுக்கான படம். பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை எப்படி வளர்க்க வேண்டும் என்பதை இயக்குனர் அழகாக, சுவாரஸ்யமாக சொல்கிறார். பிள்ளைகள் தங்கள் பெற்றோர்களிடமிருந்து தாங்கள் செய்யும் ஒவ்வொரு நல்ல செயலுக்கும் பாராட்டை எதிர்பார்க்கிறார்கள். அது கிடைக்காத போது அவர்களுடைய உள்ளம் உடைந்து போகிறது. அது கொடுமையான விஷயம்.


குழந்தைகள் செய்யும் செயல்களுக்கு பாராட்டு கிடைத்து விட்டால் அது அவர்களை உற்சாகப்படுத்தும். அது அவர்களை மேதைகளாய் உருவாக்க வழிவகுக்கும். சிறுவர்கள் செய்யும் எந்த செயலையும் அலட்சிய படுத்தாதீர்கள். உங்களின் லட்சியங்களை அவர்களின் மேல திணிக்காதீர்கள். அவர்களின் உணர்ச்சிகளைப் புரிந்து கொள்ளுங்கள். முக்கியமாக அவர்களிடம் அன்பு செலுத்துங்கள். அன்பு ஒன்றுதான் சிறுவர்கள் எதிர்பார்க்கும் மருந்து. அந்த மருந்தை அவர்களுக்கு முடிந்த மட்டும் ஊட்டுங்கள்.

பெற்றோர்கள் தங்களுக்குள் இருக்கும் சண்டையை குழந்தைகளின் முன்னால் வெளிப்படுத்தாதீர்கள். அது அவர்களை மனரீதியாய் பாதிக்கும். நாமும் பெண்களிடம் இப்படிதான் நடந்து கொள்ள வேண்டுமோ என்ற எண்ணத்தை அது ஏற்படுத்தும். அதனால் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்காகவேனும் விட்டுக் கொடுத்து நடக்க வேண்டும். அவர்களிடம் தினமும் மனம் விட்டு பேசுங்கள். அவர்களுக்காக நேரத்தை ஒதுக்குங்கள். இன்றைய சூழ்நிலையில் வீட்டில் கணவன் மனைவி இருவருமே வேலைக்கு சென்று விடுகின்றனர். அவர்கள் வருவதற்குள் இரவு நேரமாகிவிடுகிறது. பிள்ளைகள் அவர்களிடம் பேச வந்தால் தனக்கு அசதியாய் இருக்கிறது என்று சொல்லிவிட்டு சிறிது சாப்பிட்டுவிட்டு உறங்கி விடுகின்றனர். பிள்ளைகள் எப்படி வளர்கிறார்கள் என்பதைப் பற்றி அவர்கள் கண்டு கொள்வதில்லை. அவர்கள் எப்படி படிக்கிறார்கள், அவர்களின் நண்பர்கள் சகவாசம் எப்படி என்பதைப் பற்றி அவர்கள் அறிந்து கொள்வதில்லை.


இப்படி இருந்தால் பிள்ளைகள் எப்படி உயர்ந்தவர்களாய் உருவாவார்கள். சில வருடங்களுக்கு முன்பு பிள்ளைகள் தாத்தா பாட்டிகளிடம் நல்ல கதை கேட்டு வளர்ந்தனர். எனக்கு என்னுடைய அம்மா நல்லதங்காள் புராணத்தையும், என்னுடைய அப்பா ராமாயணம் மற்றும் மகாபாரதம் ஆகியவற்றை சொல்லி வளர்த்ததும் இன்றும் பசுமையான நினைவுகளாய் இருக்கின்றன. ஆனால் இன்று துரதிஷ்டவசமாக அவையெல்லாம் குழந்தைகளுக்கு கிடைக்க பெறுவதில்லை. இந்தியாவின் எதிர்காலம் இளைஞர்களின் கையில் என்று விவேகானந்தர் முதல் அப்துல் கலாம் வரை கூறுகின்றனர். இன்றைய சிறுவர்களே நாளைய இளைஞர்கள். இந்தியா வல்லரசாக ஆவது அவர்கள் கையில்தான் இருக்கிறது என்பதை ஒவ்வொரு பெற்றோரும் உணர வேண்டும். அது அந்த சிறுவர்களின் வளர்ச்சியை பொறுத்தே உள்ளது. அதனால் பெற்றோர்கள் தங்களின் பிள்ளைகளின் மேல் அன்பு செலுத்தி அவர்களை வருங்கால வல்லரசு இந்தியாவின் தூண்களாய் உருவாக்க முயற்சிக்க வேண்டும். ஜெய் ஹிந்த்....

1 comment:

Anonymous said...

First read this... This incident has happened for one of our citizen in chennai. Might be it will happen in future for us also.Let us not fear to exercise our rights.

http://thirumbiparkiraen.blogspot.com/2009/07/blog-post.html