Tuesday, April 14, 2009

இளைஞர்களே இந்தியாவின் வளர்ச்சி உங்கள் கையில்!

இந்தியா ஒரு விவசாய நாடு என்பது நாம் எல்லோரும் அறிந்ததே. எந்த ஒரு நாட்டிற்கும் பாரம்பரிய தொழில் என்று ஒன்று உண்டு. இந்தியாவுக்கு விவசாயத்தைப் போல. அதே மாதிரி அந்தந்த நாட்டின் வளர்ச்சியும் அந்த பாரம்பரிய தொழிலை சார்ந்தே இருந்தால்தான் அந்த நாடு பொருளாதாரத்தில் திடமான வளர்ச்சி அடைய முடியும் என்பது என் கருத்து. அதற்காக சாப்ட்வேர் தொழில், அல்லது மற்ற துறைகளை ஒதுக்கி விடுங்கள் என்று நான் ஒருபோதும் சொல்ல மாட்டேன். அது மிகவும் தவறு. ஆனால் நம்முடைய பாரம்பரிய தொழிலான விவசாயத்தில் முழுமையான கவனம் செலுத்தாமல் இருந்தோமேயானால் இந்தியா ஒருபோதும் நிரந்தர வளர்ச்சியைக் காண முடியாது.

இன்று ஒரு விவசாயின் நிலைமை எப்படி இருக்கிறது?. நானும் ஒரு விவசாய குடும்பத்தை சேர்ந்தவன் என்பதால் ஒரு விவசாயின் நிலைமைப் பற்றி ஓரளவு தெரியும் என்பதால் இதை சொல்கிறேன். நாங்கள் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு பயிரிட்டு விளைந்ததைப் பற்றியும் இப்போது பயிரிட்டு விளைந்ததைப் பற்றியும் கணக்கில் எடுத்தால் ஒரு விவசாயின் நிலைமையை நன்கு உணரலாம். கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு நாங்கள் ஒரு ஏக்கரில் வேர்க்கடலைப் பயிரிட்டோம். அது விளைந்து அந்த ஒரு ஏக்கரில் இருந்து இருபத்தைந்து மூட்டை பயிறு கிடைத்தது. ஒரு மூட்டைப் பயிறு 1500 ரூபாய் என்று வைத்துக் கொண்டால் 25 மூட்டைப் பயிரின் விலை 37500 ரூபாய். ஆனால் இந்த வருடம் நாங்கள் மூன்று ஏக்கரில் வேர்க்கடலைப் பயிரிட்டு அதனால் கிடைத்த மகசூல் வெறும் 20 மூட்டைதான். ஒவ்வொரு வருடமும் குறைந்து கொண்டே வருகிறதே தவிர கொஞ்சம் கூட மகசூல் அதிகரிக்கவில்லை.

நிலைமை இப்படி இருக்க என்ன காரணம் என்று பார்த்தோமேயானால், பல காரணங்கள் இருக்கின்றன. அதில் ஒன்று விவசாய நிலத்தில் உள்ள மண்ணின் தன்மை முழுவதுமாக கெட்டு போகக்கூடிய நிலையில் இருக்கிறது. காலங்காலமாக நாம் பயன்படுத்தி வந்த செயற்கை உரங்கள் மண்ணின் தன்மையை அடியோடு மாற்றி விட்டன. இயற்கை உரங்களைப் போட்டு பயிர்களை வளர்க்கும் முறை இன்று விவசாயிகளிடம் இல்லை. மற்றொன்று அரசின் அலட்சியம். விவசாய வளர்ச்சிக்கு உண்மையான, தேவையான, முழுமையான பலன் தரக்கூடிய செயல்களை விட்டுவிட்டு குறுகிய நோக்கில், அரசியல் ஆதாயம் தேடும் நோக்கிலேயே இன்று வரை அத்தனை அரசுகளும் செயல்பட்டுள்ளன. இப்போது 60000 கோடி ரூபாய் விவசாய கடனை தள்ளுபடி செய்தார்கள். நல்ல விஷயம்தான். அதனால் சில விவசாயிகள் பயன் அடைந்தார்கள் என்பதை விட பெரும் பணமுதலைகள் தான் அதிகமாக பயன் அடைந்தார்கள். ஆனால் கடன் தள்ளுபடி செய்வதனால் விவசாய வளர்ச்சிக்கு முழு பலன் கிடைக்குமா என்று பார்த்தால் இல்லை என்றே பதில் கிடைக்கும்.

இதற்கு அரசு எந்த மாதிரி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மாவட்டந்தோறும் வேளாண்மை பல்கலைக் கழகங்களை அமைத்து நல்ல வீரியமுள்ள விதைகளை உற்பத்தி செய்து அதனை விவசாயிகளுக்கு குறைந்த விலையில் விற்பனை செய்யலாம். விவசாயிகளுக்கு எந்தெந்த மாதங்களில் எந்தெந்த வகையான பயிர்களை இடலாம் என்று சொல்லி தரலாம். பிறகு முக்கியமாக இயற்கை உரங்களை உற்பத்தி செய்யும் முறை பற்றியும், விவசாய உரங்களை பயன்படுத்தி பயிர்களை விளைவிப்பதை பற்றியும், அதனால் மண்ணின் தன்மை எப்படி வளமையாகின்றன என்பதைப் பற்றியும் சொல்லி தரலாம். இதெல்லாம் அரசு மேற்கொள்ள வேண்டிய சில சீரியசான நடவடிக்கைகள். அதை விட்டுவிட்டு வெறும் கடனைத் தள்ளுபடி செய்வதால் மட்டுமே விவசாயிகள் மகிழ்ச்சியடைய மாட்டார்கள். விவசாய வளர்ச்சிக்கும் அதனால் தொலைநோக்கு பயன் கிடைக்க போவதில்லை.


அடுத்தது விவசாய நிலத்தில் விளையும் பயிர்களுக்கு விவசாயிகளே விலை நிர்ணய செய்யும் நிலை இந்தியாவில் வர வேண்டும். ஒரு சோப்பு தயாரிக்கும் கம்பெனி எப்படி அந்த சோப்புக்கு அதுவே விலையை நிர்ணயம் செய்யுதோ அதே மாதிரி ஒரு விவசாயியும் அவன் விளைவித்த பயிர்களுக்கு அவனே விலை நிர்ணயம் நிலைமை வர வேண்டும். அரசே விவசாயிகள் விளைவித்த பயிரை நேரடியாக உரிய விலை கொடுத்து கொள்முதல் செய்ய வேண்டும். இதெல்லாம் அரசு நினைத்தால் முடியாத காரியமல்ல. உடனடியாக அரசு தீர்க்கமான நடவடிக்கைகளை மனசாட்சியோடு எடுக்க வேண்டும். அப்போதுதான் விவசாயம் வளர்ச்சி பெரும்.

முடிவாக ஒன்று. ஒரு இன்ஜினியர் தந்தை தன் மகன் ஒரு இன்ஜினியர் ஆக வேண்டும் என்று ஆசைப் படுகிறார். ஒரு டாக்டர் தந்தை தன் மகன் ஒரு டாக்டர் ஆக வேண்டும் என்று ஆசைப்படுகிறார். ஒரு பிசினஸ் மேன் தன் மகன் ஒரு பெரிய பிசினஸ் மேக்னட்டாக வரவேண்டும் என்று ஆசைபடுகிறார். எதுவும் தவறில்லை. ஆனால் ஒரு விவசாயி தந்தை தன் மகன் ஒரு பெரிய விவசாயியாக வரவேண்டும் என்று ஏன் நினைப்பதில்லை. அவனை ஊக்கப்படுத்துவதில்லை. இது எவ்வளவு பெரிய தவறு. பிறகு பிற்காலத்தில் யார் விவசாயம் செய்வார்கள். உணவிற்காக மற்ற நாடுகளிடம் பிச்சை எடுக்க வேண்டிய நிலைமை வரவேண்டுமா?. என்று ஒரு விவசாயி தன் மகனும் ஒரு விவசாயியாக வரவேண்டும் என்று நினைக்கிறானோ அன்றுதான் இந்தியாவின் உண்மையான வளர்ச்சி தொடங்கும். இளைஞர்களே கொஞ்சம் யோசித்து பாருங்கள். இப்போது வேறு வேலை பார்த்தாலும் பிற்காலத்தில் உங்களால் முடிந்த அளவு விவசாய வளர்ச்சிக்கு உறுதுணையாய் இருங்கள். வணக்கம்.

1 comment:

Suresh said...

machan unnoda blog a follow panrom la :-) inimae