Tuesday, February 12, 2013
Wednesday, August 29, 2012
ஆறாம் அறிவு
சில மாதங்களுக்கு முன்பு வழக்கம்போல அதிகாலையில் நடைபயிற்சி செய்து கொண்டிருந்தான் நவீன். அதிகாலை என்பதால் மக்கள் நடமாட்டம் மிகக்குறைவாக இருந்தது. அவனைப் போலவே சிலர் நடைபயிற்சி செய்து கொண்டிருந்தார்கள். சாலையில் அவ்வப்போது சில கார்களும், பேருந்துகளும், இருசக்கர வாகனங்களும் சென்று கொண்டிருந்தன. நவீன் பூங்காவை நெருங்கினான். அங்கே அவன் கண்ட காட்சி அவனைப் பரிதாபப்பட வைத்தது. சாலையின் ஓரமாக ஒரு நாய் "வௌவ்" "வௌவ்" என்று தன் உயிர் கரையும் மட்டும் கத்திக்கொண்டிருந்தது. அதன் கண்களில் கண்ணீர் வடிந்து கொண்டிருந்தது. அதன் ஒரு காலில் பலமாக அடிபட்டு ரத்தம் வடிந்து கொண்டிருந்தது. எதாவது ஒரு வாகனம் மோதிச் சென்றிருக்க வேண்டும். நடைபயிற்சி செய்து கொண்டிருந்தவர்கள் அந்த நாயை வேடிக்கை பார்த்தபடி சென்று கொண்டிருந்தனர். மனிதர்கள் செத்துக்கிடந்தாலே கண்ணிருந்தும் குருடராய் கண்டுகொள்ளாமல் கடந்து செல்லும் கல்மனம் படைத்த இந்த கலிகாலத்தில் ஒரு நாய் துடித்துக் கொண்டிருப்பதை வேடிக்கைப் பார்த்தபடி சென்று கொண்டிருப்பது அவனுக்கு எந்த விதமான அதிர்ச்சியையும் ஏற்படுத்திவிடவில்லை. ஆனால் நவீனால் அப்படி இருக்க முடியவில்லை. ஒரு நாய் துடித்துக்கொண்டிருப்பதைப் பார்த்ததும் ஏதோ ஒரு மனிதன் அங்கே உயிருக்குப் போராடிக்கொண்டிருப்பதாகத்தான் அவனுக்குத் தோன்றியது. நாய்க்கும் மனிதனுக்கும் அங்கே அவனுக்கு வித்தியாசம் தெரியவில்லை. உலகில் உள்ள எல்லா உயிரினங்களும் காற்றைத் தான் சுவாசிக்கின்றன. உயிரின் மதிப்பை அறிந்தவன் ஒரு சிறு புழு பூச்சி துடித்துக்கொண்டிருந்தாலும் கண்ணின் ஓரம் ஈரம் கசிவான். உயிரின் வலியை உணர்ந்தவன் எந்த ஒரு உயிருக்கும் தீங்கு விளைவிக்க மாட்டான். ஒரு உயிர் துடித்துக் கொண்டிருப்பதைப் பார்த்துக் கண்டும் காணாமல் செல்வது அந்த உயிரைக் கொல்வதற்குச் சமம்.
மனிதாபிமானம் என்பது சட்டம் இயற்றியோ அல்லது தண்டனைகள் தருவதாலோ வருவதில்லை. அப்படி வந்தால் அது பயத்தினாலேயன்றி உள்ளத்தால் அல்ல. உள்ளத்தால் உயர்ந்தவராலேயே ஒரு உயிரின் மதிப்பை உணர முடியும். நவீன் சற்றும் யோசிக்கவில்லை. உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த அந்த நாயைத் தூக்கிக்கொண்டு வீட்டை நோக்கி விரைந்து சென்றான். வீட்டிற்குச் சென்றதும் அந்த நாயின் காலைச் சுத்தமாகக் கழுவி அடிபட்ட இடத்தில் மருந்திட்டு கட்டுபோட்டு வீட்டின் ஓரத்தில் கிடத்தினான். நாயின் கண்ணோரத்தில் இன்னும் சிறிது கண்ணீர் வடிந்து கொண்டிருந்தது. ஆனால் அந்த நாய் அவனை ஒரு கனிவான பார்வையில் வைத்த கண் வைத்தபடி பார்த்துக் கொண்டிருந்தது. அந்த பார்வை அவனை ஏதோ செய்வது போல் இருந்தது. அப்படியே அந்த நாயை கட்டி அனைத்துக் கொண்டான். அவன் மனம் மிகவும் லேசாகி, நெஞ்சம் குளிர்ந்து, உயிர் கரைவது போல் இருந்தது. அவனின் அப்போதைய மனநிலையை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. இந்த உலகத்தில் வாழும் நவீனை போன்ற சில உள்ளங்களாலேயே அதை உணர முடியும். நவீன் அந்த நாய்க்கு "ராம்" என்று பெயர் வைத்தான். பிறகு அந்த நாய் சற்று தேறியதும் அதனை கொண்டுபோய் அந்த பூங்காவினுள் விட்டுவிட்டான். அன்றிலிருந்து இன்றுவரை அந்த நாய் தினமும் காலையில் நவீனின் வருகைக்காக காத்திருப்பதும், அவன் வந்தவுடன் அவன் தோளில் ஏறி விளையாடுவதும் இன்றளவும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. ஏதாவது ஒருநாள் அவன் வரவில்லையென்றால் அது அன்று முழுவதும் எதையோ பறிகொடுத்தது போல அங்கும் இங்கும் அலைந்து கொண்டு இருக்கும். அதனால் அதை பார்ப்பதற்காகவே தினமும் அவன் வருவான். சற்று நேரம் அந்த நாயுடன் கொஞ்சிவிட்டு வீடு திரும்புவான். அது அவனுக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தந்தது. அந்த நாய்க்கும்தான். இப்படி கடந்த கால நினைவுகளில் மூழ்கி போனவனாய் சாலையோரம் நடந்து சென்று கொண்டிருந்தான். பூங்காவிற்கு அருகில் வந்துவிட்டான். ராம் அவனின் வருகையை மிகுந்த ஆவலோடு பார்த்துக் கொண்டிருந்தது. நவீன் இன்னும் அந்த நினைவுகளில் இருந்து மீளாதவனாய் சாலையோரத்தில் இருந்து விலகி சாலைக்கு நடுவில் சென்றுவிட்டான். அந்த நேரம் பார்த்து அந்த சாலை வழியே ஒரு "லாரி" மிக வேகமாக வந்துகொண்டிருந்தது. பூங்காவிற்கு அருகில் இருந்த ராம் இந்த காட்சியைப் பார்த்து திகிலடைந்தது. ஏதோ விபரீதம் நடக்க போகிறது என்று அதன் உள்மனம் பதறியது. நவீன் இன்னும் புற உலகிற்குள் வராதவனாய் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தான். ராம் தன் உயிர் கரையும் மட்டும் கத்திகொண்டிருந்தது. ஆனால் நவீன் இன்னும் அகவுலகில் இருந்து மீளவில்லை. லாரி நவீனை மோத இருந்த சமயத்தில் ராம் பாய்ந்து சென்று நவீனை ஓரமாக தள்ளிவிட்டது.
ராம் தள்ளிவிட்டதில் சிறிய சிராய்ப்புகளுடன் கீழே விழுந்து கிடந்தவன் எழுந்து பார்த்தபோது அங்கே அவன் கண்ட காட்சி அவனை நிலைகுலையச்செய்தது. அங்கே ராம் லாரியின் சக்கரத்தில் அடிபட்டு தலை நசுங்கி அந்த இடத்திலேயே செத்துக்கிடந்தது. நவீனுக்கு எல்லாம் கனவு போலத் தோன்றியது. அப்படியே சாலையோரமாக சரிந்து விழுகிறான். மனதில் எண்ண அலைகள் ஓடியது. முன்னொரு நாள் அந்த நாய் அடிபட்டு கிடந்தபோது அதற்கு யாரும் உதவ முன்வராததும்; இன்று தான் செய்த ஒரு சிறிய உதவிற்கு நன்றிக்கடனாய் தன்னைக் காப்பாற்றிவிட்டு அது உயிரைவைட்டதும்; மனிதன் தன்னை ஆறு அறிவுடையவனாக நினைத்து பெருமை பேசிக்கொள்வதும்; மற்ற விலங்குகளை அறிவில் தன்னைவிட தாழ்ந்த பிறப்பாக கருதுவதும்; இப்படி என்னென்னவோ அவன் மனதில் தோன்றியது.
இன்று அவனுக்கு உண்மையிலேயே யார் உயர்ந்தவர்கள் என்று விளங்கியது. அவன் சுயநினைவு திரும்ப மிக நீண்ட நேரம் ஆயிற்று.
Monday, July 19, 2010
கருணாநிதியின் கொள்கை!

1 .பிடித்தது: தம் மக்கள்
2 .பிடிக்காதது: தமிழக மக்கள்
3 .கனவில் வருபவர்: எதிர்க்(எதிரிக்)கட்சி தலைவர் ஜெயலலிதா
4 .பிடித்த பொருள்: பேனா
5 .கொள்கை: பகுத்தறிவு (பிறருக்கு மட்டும்)
6 .சாதனை: அனைத்திலும் இலவசம், குடும்பம் முழுவதையும் ஆட்சியில் அமர வைத்தது
7 .தொழில்: தினசரி அறிக்கை விடுவது, அடிக்கடி விழா நடத்தி தன்னைப் பற்றி துதிபாட வைப்பது
8 .உபதொழில்: சினிமாவிற்கு திரைக்கதை, வசனம் எழுதுவது
9 .பிடித்த நாடு: தமிழ்நாடு
10 .பிடிக்காத நாடு: என்றுமே குடைச்சல் தரும் இலங்கை
Saturday, July 17, 2010
என்னை எழுத தூண்டியது...

ஒரு மாலைப்பொழுது. நேரம் சுமார் 6.30 pm இருக்கும். திநகர் சரவணா ஸ்டோர்ஸ் -இல் துணிமணிகள் எடுத்துக் கொண்டு வேளச்சேரியில் நான் தங்கியிருக்கும் வீட்டிற்கு செல்ல திநகர் பேருந்து நிலையத்தில் 5A பேருந்துக்காக காத்திருந்தேன். அப்போது பேருந்து நிலையத்தின் ஓரத்தில் சுமார் 80 வயதான பாட்டி ஒருவர் பிச்சை எடுத்து கொண்டிருந்தார். மிகவும் தளர்ந்த தேகம். சுருங்கிவிட்ட தோள்கள். ஒடுங்கிவிட்ட கண்கள். இன்றோ நாளையோ என்று சொல்ல முடியாத அளவிற்கு ஒட்டிய வயிறு. எந்த ஒரு மனிதனுக்கும் அந்த காட்சியைப் பார்த்தால் கண்ணீர் வரும். எனக்கும் வந்தது. நான் மனிதன். ஒரு சிலர் அந்த பாட்டி வைத்திருந்த தட்டில் ஒன்று இரண்டு என்று போட்டு சென்றனர். நான் என் பையிலிருந்த ஒரு பத்து ரூபாய் நோட்டை எடுத்து அந்த பாட்டியின் கையில் கொடுத்து விட்டு வந்துவிட்டேன். பின் யோசித்து பார்த்தேன். அந்த பத்து ரூபாயை வைத்து அந்த பாட்டி ஒருவேளை சாப்பாடு கூட சாப்பிட முடியாது என்று நினைத்து ஒரு ஐம்பது ரூபாய் நோட்டை அந்த பாட்டியின் கையில் வைத்துவிட்டு வந்தேன்.

5A பேருந்து வந்ததும் ஏறிக்கொண்டேன். பேருந்து திரும்பும்வரை அந்த பாட்டியைப் பார்த்துக் கொண்டே சென்றேன். மனதில் எண்ண அலைகள் வந்து போய்க்கொண்டிருந்தன. அந்த பாட்டியைப் போல எத்தனை பேர் அனாதைகளாக சொந்த வீட்டிலிருந்து துரத்தப்பட்டிருக்கின்றனர். கடைசி காலத்தில் தான் பெற்ற மகன் தன்னைக் காப்பாற்றுவான் என்று எண்ணியிருந்த அந்த தாயின் எண்ணங்களே அந்த மகனுக்கு பெருஞ்சாபமாக மாறாதா? தன்னுடைய கடைசிகாலத்தில் தன் மகன் தன்னையும் அனாதையாக விடக்கூடும் என்று யோசிக்க தெரியாதா?அனாதையாக விடப்பட்ட அந்த தாயின் கண்ணீர், பிற்காலத்தில் அந்த மகனின் கண்களில் ரத்தக்கண்ணீராய் வெளிப்படக்கூடும். திநகர் பேருந்து நிலையத்தில் பார்த்த பாட்டியிடம் என் தாயைப் பார்த்தேன். அனாதைகளாக விடப்பட்ட ஒவ்வொரு முதியவர்களிடமும் என் ரத்த சொந்தங்களைப் பார்க்கிறேன். என்னுடைய இந்த எண்ணங்கள் இதைப் படித்துக் கொண்டிருக்கும் பலருக்கும் ஒத்துப்போகும் என்று நினைக்கின்றேன்.

சமீபத்தில் இப்படி அனாதைகளாக விடப்பட்ட வயதான ஒருவரின் புகாரின்பேரில் அவருடைய மகனைக் கைது செய்தது சென்னை மாநகராட்சி. வரவேற்கப்பட வேண்டிய விஷயம். ஆனால், இதனால் அந்த மகன் உண்மையிலேயே தன் தவறை உணர்வானா என்பது கவனிக்கப்பட வேண்டிய விஷயம். பள்ளிபருவத்திலேயே பிள்ளைகளிடம் நற்பண்புகளை வளர்க்க வேண்டிய பொறுப்பு ஆசிரியர்களிடம் உள்ளது. சான்றோர்களை மதித்தல்; பெற்றோர்களிடம் தினமும் ஆசிபெறுதல்; தாய்நாட்டை நேசித்தல் போன்ற உயர்ந்த பண்புகளை மாணவர்களுக்கு ஆசிரியர்கள் போதிக்க வேண்டும். இதனால் மாணவர்கள் பிற்காலத்தில் ஒழுக்கத்தில் உயர்ந்தவர்களாக வருவார்கள். இதற்கான பொறுப்பு அரசிடமும், ஆசிரியர்களிடமும் உள்ளது.ஒவ்வொரு குடிமகனும் தன்னுடைய மனசாட்சியின்படி நடந்துகொண்டால் அநாதைகளே இல்லாத இந்தியா மிக விரைவில் மலரும் என்பது திண்ணம்.
Sunday, March 7, 2010
உன்னைக் கைவிடமாட்டேன் - ஒரு பக்க கதை..
அன்று சிறுவர்கள் அந்த அழகிய கிராமத்துத் தெருவில் விளையாடிக் கொண்டிருந்தனர். திருடன் போலீஸ் விளையாட்டு. அதாவது ஒருவன் தன் கண்ணை மூடிக்கொள்ள வேண்டும். மற்றவர்கள் எங்காவது சென்று ஒளிந்து கொள்ள வேண்டும். ஒளிந்து கொண்டவர்களைக் கண்ணைமூடிக்கொள்பவன் கண்டுபிடிக்க வேண்டும். இதுதான் விளையாட்டு. கண்ணை மூடிக் கொள்பவன் போலீஸ். நம்ம ஊரில் நடப்பது போல. ஆனால் நம்ம போலீஸ் கொஞ்சம் திறமைசாலி. ஹீரோவாச்சே. ஓடி உஷாராக ஒளிந்து கொள்பவர்கள் திருடர்கள். இப்போது நம்ம ஹீரோ கண்ணை திறந்து கொள்கிறான். எதிரில் யாரும் இல்லை. சுற்றும் முற்றும் பார்க்கிறான். ஒரு நாதியில்லை.
நீண்ட நேரம் அலைந்து தேடியும் எந்த திருடனையும் பிடிக்க முடியவில்லை நம்ம ஹீரோவால். என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருந்த போது அந்த தெருவில் உள்ள ஒரு வீட்டில் ஏதோ ஒரு உருவத்தின் நிழல் அசைவதைக் கண்டான். அவன் முகம் சந்தோஷத்தில் பிரகாசித்தது. திருடன் அகப்பட்டுவிட்டான் என்ற சந்தோஷத்தில் அந்த வீட்டை நோக்கி ஓடினான். மூச்சிரைக்க ஓடி அந்த வீட்டின் வாசலை அடைந்தவனுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது. அந்த வீட்டில் வசிக்கும் ஒரு சிறுமி தன்னுடைய பென்சில் பாக்ஸ்-ஐ எடுப்பதற்காக ஒரு நாற்காலியில் ஏறி தேடிக்கொண்டிருந்தாள். நம்ம ஹீரோ வந்த அதிர்ச்சியில் அந்த சிறுமி பயந்து நாற்காலியில் இருந்து தவறி விழப்போனாள். விழப்போன அந்த சிறுமியை நம்ம ஹீரோ தாங்கிக் கொள்கிறான்.

கொஞ்ச நேரம் நம்ம ஹீரோ அந்த சிறுமியை தன் கைகளில் தாங்கியபடியே அவளுடைய அழகிய முகத்தை பார்த்துக் கொண்டிருந்தான். அவள் தன்னை இறக்கி விடும்படி கூறுகிறாள். ஹீரோவும் அவளை இறக்கி விடுகிறான். அவளின் பெயர் என்னவென்று கேட்கிறான். தமிழரசி என்கிறாள். அவளின் பெயர் அவளைப் போலவே அழகாக இருப்பதாக கூறுகிறான். அவள் சிறிதாக புன்னகைக்கிறாள். அவனுடைய பெயர் என்னவென்று கேட்கிறாள். தமிழரசன் என்கிறான். அவள் சிரிக்கிறாள். சிறிது நேரம் இருவரும் பேசிக்கொள்கிறார்கள். நம்ம ஹீரோவுக்கு நேரம் ஆகிவிட்டது. ஏதாவது ஒரு திருடனைக் கண்டுபிடித்தாக வேண்டும். அவளிடம் இருந்து விடைபெற்று கொள்கிறான்.
சிறிது நேரத்தில் ஒரு திருடனைக் கண்டுபிடித்து விடுகிறான். ஆட்டம் முடிகிறது. மறுபடியும் புது ஆட்டம். இப்போது கண்டுபிடிக்கப்பட்ட திருடன்தான் போலீஸ். அவன் மற்றவர்களைக் கண்டுபிடிக்க வேண்டும். போலீஸ் கண்ணை மூடிக் கொள்கிறான். மற்றவர்கள் ஓடி மறைந்து கொள்கிறார்கள். நம்ம ஹீரோ ஹீரோயின் வீட்டை நோக்கி ஓடுகிறான். வாசலில் நின்று கொண்டிருந்த நம்ம ஹீரோயின் அவன் வருவதைக் கண்டு நாற்காலியில் ஏறிக் கொள்கிறாள். ஹீரோ வீட்டில் நுழைந்தவுடன் அவள் நாற்காலியில் இருந்து தவறி விழுகிறாள். நம்ம ஹீரோ அவளைத் தாங்கிக் கொள்கிறான். அவளுக்குத் தெரியும் தன் தலைவன் தன்னைத் தாங்கிக் கொள்வான் என்று...
Saturday, March 6, 2010
புத்தகம் எழுதுவது எப்படி?
உங்களுக்கு புத்தகம் எழுத வேண்டும் என்று ஆசையா?. அப்படியென்றால் இதனை சிறிது நேரம் படியுங்கள். மனிதனாய்ப் பிறந்த ஒவ்வொருவருக்கும் ஒரு பொழுதுபோக்கு இருக்க வேண்டும். அது விளையாட்டாக இருக்கலாம்; நெட்டில் அரட்டை அடிக்கலாம்; பூங்காவிற்கு செல்லலாம்; பிளாகில் கிறுக்கலாம் (என்னை மாதிரி); சினிமாவிற்கு செல்லலாம்; இப்படி நிறைய பொழுதுபோக்குகள் இருக்கின்றன. அப்படி ஒன்றுதான் புத்தகம் எழுத ஆரம்பிப்பது. ஆனால் புத்தகம் எழுத வேண்டும் என்றால் உங்களுக்கு தேவையான மிக முக்கியமான ஒன்று புத்தகம் எழுத வேண்டிய ஆர்வம் உங்களுக்கு கொஞ்சம் இருக்க வேண்டும். ஆர்வம் இல்லாமல் புத்தகம் எழுத ஆரம்பிக்காதீர்கள்.எந்த வேலையை செய்தாலும் அதில் ஒரு ஐம்பது சதவீதமாவது ஆர்வம் இருக்க வேண்டும். அதற்கு மேல் இருந்தால் மிக்க நலம். சரி மேட்டருக்கு வருவோம். உங்களுக்கு புத்தகம் எழுத வேண்டிய ஆர்வம் இருந்தால் எதைப் பற்றி எழுத வேண்டும் என்று நிச்சயம் நீங்கள் யோசித்து வைத்திருப்பீர்கள். உதாரணமாக சிலருக்கு காதல் காதல் கவிதைகள் எழுத வேண்டும் என்று ஆர்வம் இருக்கும். சிலருக்கு சிறுகதைகள் எழுத வேண்டும் என்று ஆர்வம் இருக்கும். சிலருக்கு தன்னம்பிக்கை கட்டுரை எழுத வேண்டும் என்ற ஆர்வம் இருக்கும். சிலருக்கு அன்றாட வாழ்க்கையின் மற்றும் மனிதர்களின் நிஜங்களைப் பற்றி எழுத வேண்டும் என்று ஆர்வம் இருக்கும். இவை சில உதாரணங்கள் தான். இன்னும் எக்கச்சக்கமான உதாரணங்கள் இருக்கின்றன. உங்களுக்கு பிடித்தமானவற்றை தேர்வு செய்து கொள்ளலாம்.
உதாரணத்திற்கு நீங்கள் அன்றாட மனிதர்களின் வாழ்க்கையைப் பற்றி எழுத விரும்புகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். தினமும் நீங்கள் பேருந்தில் பயணம் செய்வீர்கள். ரயிலில் பயணம் செய்வீர்கள். நீங்கள் வேலை செய்யும் அலுவலகத்தில் நிறைய பேரை காணக் கூடும். அவர்களின் செயல்கள் உங்களுக்கு வித்தியாசமாக தெரியலாம். நீங்கள் பேருந்தில் பயணம் செய்யும் போது பல எளிமையான மனிதர்களை பார்த்திருப்பீர்கள். நான் பேருந்தில் பயணம் என்று சொல்வது சென்னையில் பயணம் செய்வதை அல்ல. சென்னையில் இருந்து வெளியூருக்கு பயணம் செய்வதைத்தான் சொல்கிறேன். சென்னையில் நான் தினமும் பயணம் செய்கிறேன். ஆனால் எனக்கு ஒரு கற்பனையும் வரவில்லை. அதற்கு சில அமைதியான சூழ்நிலை நிலவ வேண்டும்.சரி. இப்போது நீங்கள் உங்கள் சொந்த ஊருக்கு சென்னையில் இருந்து பயணம் செய்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். ஊர் போய் சேர குறைந்தது எட்டு மணி நேரம் ஆகும் என்று வைத்துக் கொள்வோம். இதில் முக்கியமான ஒன்று நீங்கள் பேருந்தில் பயணம் செய்யும் போது ஜன்னலோர இருக்கையை தேர்வு செய்வது அவசியம். அப்போதுதான் வெளி உலகை ரசிக்க முடியும். உலகத்தை முழுமையாக அனுபவிக்க முடியும். காணும் மனிதர்களின் உள்ளங்களைக் களவாட முடியும். அவர்களின் மனதில் வழிந்தோடும் எண்ணங்களைப் புரிந்து கொள்ள முடியும். அவர்களின் சுகதுக்கங்களை அறிந்து கொள்ள முடியும். பாடும் பறவைகளின் ஓசையை ரசிக்க முடியும். கூவும் குயில்களின் கூரிய இசையை சந்திக்க நேரிடும். சாலையோரத்தில் ஆடுமாடுகள் மேய்த்துக் கொண்டிருக்கும் சிறுவர் சிறுமியர்களின் நிஜ வாழ்க்கையின் நிஜத்தினைப் புரிந்து கொள்ள முடியும். அவர்களின் மனதில் உள்ள சந்தோஷங்கள், கவலைகள், ஆசைகள், நிராசைகள் என பலவற்றை நீங்கள் புரிந்து கொள்ள முயல்வீர்கள். நானும் நிறைய முறை மாடு மேய்த்து இருக்கிறேன். இப்போது வீட்டுக்கு சென்றாலும் நான் மாடு மேய்ப்பேன்.

நான் பயணம் செய்யும் போது ஒவ்வொரு முறையும் ஆடுமாடுகள் மேய்க்கும் சிறுவர் சிறுமிகளை பார்த்திருக்கிறேன். அவர்களை எண்ணி மிகவும் மகிழ்ந்திருக்கிறேன். அதே சமயம் அதே அளவு வருத்தமும் இருக்கும். அவர்கள் மகிச்சியாக இருக்கிறார்களா. அவர்களுக்கும் ஆசைகள் இருக்கும்; நிறைய சம்பாதிக்க வேண்டும்; சந்தோஷமாக இருக்க வேண்டும்; அவர்களின் ஆசைகளை எப்படி அவர்கள் நிறைவேற்றிக் கொள்வார்கள் என இப்படி பல வருத்தங்கள் எனக்குள் இருக்கும். அவர்களின் மனதிற்குள் இருக்கும் ஆசைகளை அவர்களின் வாயிலாக கேட்க வேண்டும் என்று எனக்கு நீண்ட நாட்களாக ஆசை. ஆனால் அது இன்னும் நிறைவேறவில்லை. நான் நிறைவேற்றிக் கொள்ளவில்லை. இன்னும் மனிதர்களின் உள்ளங்களை நன்றாக புரிந்து கொள்ள வேண்டும் என்றால் நிறைய மனிதர்களை சந்தியுங்கள். நகரத்து மனிதர்களை அல்ல; கிராமத்து மனிதர்களை. எளிமையான மனிதர்களை. குக்கிராமங்களுக்கு பயணம் செல்லுங்கள். அங்கு வாழும் எளிமையான, உண்மையான, கருப்பு உருவத்தில் இருக்கும் வெள்ளை மனிதர்களை, குடிக்க நீர் கேட்டால் மோர் கொண்டு வந்து கொடுக்கும் சங்க காலத்து விருந்தோம்பல் மிக்க மனிதர்களிடம் பேசிப் பழகுங்கள். பிறகு நீங்களே எழுத வேண்டாம் என்று நினைத்தால் கூட உங்களால் எழுதாமல் இருக்க முடியாது.
சரி. முதலில் எழுத ஆரம்பிப்பவர்கள் சிறிது சிறிதாக எழுத ஆரம்பிக்கலாம். ஒரே அடியாக பெரிய புத்தகமாக எழுத நினைக்காதீர்கள். முதலில் ஒரு ஐந்து பக்கம் அல்லது பக்கம் கொண்ட சின்ன கட்டுரை எழுதிப் பழகலாம். நீங்கள் எழுதியதை மற்றவர்களிடம் காட்டி கருத்துகள் கேட்கலாம். அவருக்கும் அதில் ஆர்வம் இருக்க வேண்டும். சிலர் உங்கள் முயற்சியை கேலி செய்யலாம். அவர்களைக் கண்டுகொள்ளாதீர்கள்; அவர்களை அலட்சியப்படுத்திவிடுங்கள். நீங்கள் எழுதியதை பத்திரிகை எழுத்தாளர்களை தொடர்பு கொண்டு அவர்களின் கருத்துகளைக் கேட்கலாம். அவர்களின் உதவியை நாடலாம். நீங்கள் நல்ல சிறந்த எழுத்தாளராக வர வேண்டும் என்று நினைத்தால் நிறைய புத்தகங்களைப் படியுங்கள். நான் கூறியது உங்களுக்கு சிறிதளவாவது பயனுள்ளதாக இருந்திருக்கும் என்று நினைக்கிறேன். விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன.
பின்குறிப்பு:
கவிப்பேரரசு வைரமுத்துவின் கள்ளிக்காட்டு இதிகாசம் என்ற நூலைப் படியுங்கள். மிகச் சிறந்த நூல். விலை அதிகமில்லை. நூற்று பத்து ரூபாய்தான்.
Friday, March 5, 2010
மனிதனை மனிதனாய்ப் பாருங்கள்...

சாமியார்கள் என்றாலே சந்தி சிரிக்கிறது. சாமியார்கள் என்றாலே காமியார்கள் என்றாகிவிட்ட பிறகு வேறென்னே சொல்ல?. சுவாமி (?!) நித்யானந்தரின் காமலீலைகள் நமக்கு அதைத்தான் காட்டுகின்றன. இந்திய மக்களுக்கோ அல்லது தமிழக மக்களுக்கோ இது புதிய பிரச்சனை அல்ல. அநேகமாக நாள்தோறும் போலி சாமியார்களைப் பற்றிய வேண்டதகாத செய்திகள் வந்துகொண்டுதான் இருக்கின்றன. ஆனாலும் நம் மக்களின் மனநிலை மாறுவதாக இல்லை. படிக்காத பாமர மக்களில் இருந்து படித்த பணக்காரர்கள் வரை சாமியார்களின் கால்களில் விழுந்து கொண்டிருக்கிறார்கள். இதில் பெரிய காமெடி என்னவென்றால் நம் தமிழக அரசியல்வாதிகளே சாமியார்களின் புகழைப் பாடுவதுதான். இந்த சாமியார் எனக்கு தன் மந்திர சக்தியால் மோதிரம் தந்தார்? செயினை தந்தார்? என்று பகுத்தறிவு இயக்கமான திமுக அமைச்சர்கள் காமெடி அடிக்கிறார்கள். பிரேம்ஜி ஸ்டைலில் சொல்வதென்றால் என்ன கொடுமை சார்.

சாமியார்கள் ஆகிவிட்டாலே அவர்களைப் பணக்காரர்களாக மாற்றிவிடுவது நமது மண்ணின் பெருமை போல. நம் நாட்டில் உள்ள சாமியார்களில் 99 சதவீத சாமியார்கள் காமியார்களாகத்தான் இருக்கிறார்கள். மீதி இருக்கிற ஒரு சதவீத சாமியார்கள் (சந்நியாசிகள்) நமக்கு தெரியாதவர்களாக இருக்கின்றனர். அதுதான் பிரச்சினை. தெரிந்து கொள்ள வேண்டியவற்றை தெரிந்து கொள்ளாமலிருப்பதும்; தெரிந்து கொள்ள கூடாததை தெரிந்து கொள்வதும் நமக்கு வாடிக்கையாகிவிட்டது. கடவுள் இருக்கிறாரா இல்லையா என்பது ஆதி காலம் முதலே நமக்கு விளங்காத விஷயமாகிவிட்டது. கடவுள் மனிதனைப் படைத்தானா அல்லது மனிதன் கடவுளைப் படைத்தானா?. இதற்கும் பதில் இல்லை. ஆத்திகர்கள் கடவுள் மனிதர்களைப் படைத்தார்கள் என்று நம்பிக்கை கொள்கிறார்கள். நல்லது. இருந்து கொள்ளட்டும். அப்படி இருக்கையில் அவர்கள் அந்த கண்ணுக்கு தெரியாத கடவுளை கும்பிடட்டும். ஏன் கண்ணுக்கு தெரிகிற சா(கா)மியார்களை கும்பிடுகின்றனர். நாத்திகர்கள் இந்த வகையில் மிகவும் போற்றத்தக்கவர்கள். கண்ணுக்கு தெரியாதவற்றை நம்ப அவர்கள் தயாராக இல்லை.

சுவாமி விவேகனந்தர் கூட இதையே சொல்கிறார். மூடநம்பிக்கைகள் மண்டிக்கிடக்கும் நாட்டிற்கு ஆத்திகத்தைவிட நாத்திகமே மேல் என்று?. இன்று நம் நாட்டில் சாமியார்கள் என்றாலே ஏதோ வானத்தில் இருந்து குதித்தவர்கள் என்று நினைத்து கொள்கிறார்கள். கடவுள் என்ற ஒன்றே மனிதன் தன் மனசாட்சிக்கு பயந்து தவறு செய்யாமல் இருப்பதற்கு படைக்கப்பட்ட ஒரு பொருள் என்று நிறைய நூல்களில் படித்திருக்கிறேன். அது உண்மைதான் என்பது என் கருத்து. இல்லையென்றால் இவ்வளவு கூத்து நடந்த பின்பும் அந்த கடவுள் வானத்தில் இருந்து இறங்கி வரவில்லை என்றால் அப்புறம் என்ன அவர் கடவுள்?.
மனிதனை மனிதனாய்ப் பாருங்கள். கடவுளாக அல்ல. பிறகு நீங்களே உங்களைக் கடவுளாக உணர்வீர்கள். எப்போதும்...ஒவ்வொருவருக்கும் இந்த எண்ணம் தோன்றுமானால் இந்த பூமி உருவம் உள்ள கடவுள்களின் பூந்தொட்டியாய் மாறும். நன்றி...
Monday, December 21, 2009
அவதார்- திரைவிமர்சனம்
நேற்று தேவி தியேட்டரில் "அவதார்" திரைப்படம் பார்த்தேன். நான் அவ்வளவாக ஆங்கில படம் பார்ப்பதில்லை. பார்க்க விருப்பமுமில்லை. நண்பர்கள் இன்டர்நெட்டில் புக் செய்துவிட்டதால் வேறு வழியில்லாமல் செல்ல நேரிட்டது. ஆனால் படம் பார்த்து முடித்தவுடன் எனக்கு கிடைத்த திருப்தி..அப்பப்பா..அதை வார்த்தைகளில் வர்ணிக்க முடியாது. படத்தை பார்த்தால்தான் அதை உணரமுடியும். சரி கதைக்கு வருவோம்.
வேற்று கிரகத்தில் இருக்கும் விலைமதிக்க முடியாத மினரல்களைக் கவர்ந்துபோக அமெரிக்க படைகள் அந்த கிரகத்தை முற்றுகையிட திட்டமிடுகிறது. அதற்கு அந்த கிரகத்தில் இருக்கும் மக்களைக் கொன்றாக வேண்டும். அதற்காக அந்த மக்களின் வாழ்க்கை முறைகளைப் பற்றி தெரிந்து கொள்ள நம்ம ஹீரோ (சாம் வொர்திங்டன்) தேர்ந்தெடுக்கபடுகிறார்.
வேற்று கிரகத்தில் இருக்கும் மனிதர்கள் உருவத்தில் மிகவும் வித்தியாசமானவர்கள். சாதாரண மனிதர்களைப் போல அல்லாமல் மிகவும் உயரமாக, பெரிய காதுகளோடு, பின்னால் வாலோடு இருப்பவர்கள். அதனால் அவர்களோடு சேர்ந்து பழக நமது ஹீரோவின் ஒரு ஜீனை எடுத்து க்ளோனிங் செய்து, அந்த க்ளோனிங் ஹீரோவை அனுப்புகிறார்கள்.
நம்முடைய ஹீரோ அந்த கிரகத்தில் இருக்கும் பண்டோரா என்னும் அடர்ந்த காட்டிற்குள் நுழைகிறார். அந்த காடு பல விசித்திரங்களை தன்னுள்ளே கொண்டது. தொங்கும் மலைகளும், விசித்திரமான விலங்குகளும், கலர்கலர் பூச்சிகளும் நிறைந்த அழகிய காடு. சாதாரண மக்களால் அந்த காட்டில் சுவாசிக்க முடியாது. அந்த காட்டில் நுழையும் நம் ஹீரோவை அந்த கிரகத்தில் வாழும் ஒருத்தி (அதான்...நம்ம ஹீரோயின்) காப்பாற்றி, அந்த கிரகத்தில் உயிர் பிழைத்திருக்க வேண்டிய விஷயங்களைக் கற்று கொடுக்கிறாள். இரண்டு பெரும் ஒருவரையொருவர் காதலிக்கிறார்கள். நம் ஹீரோ அந்த மக்களோடு அன்பாக பழகுகிறான். தான் வந்த நோக்கம் அழிந்து அந்த மிக அழகிய கிரகத்தையும், அதில் வாழும் மக்களையும் காப்பாற்ற முயல்கிறான்.அவனுக்கு உதவியாக மேலும் நான்கு பேர் வருகிறார்கள்.இதனிடையே அமெரிக்க படைகள் அந்த கிரகத்தை முற்றுகையிடுகின்றன. அமெரிக்க படைக்கும் வேற்று கிரக வாசிகளுக்கும் இடையே பயங்கர சண்டை மூள்கிறது. இறுதியில் யார் வென்றார்கள் என்பது கிளைமாக்ஸ்.
ஜேம்ஸ் கேமரூனின் மிக பிரம்மாண்ட படைப்பு "அவதார்". சுமார் 500 மில்லியன் டாலர் செலவில் எடுக்கப்பட்ட திரைப்படம். அந்த உழைப்பு படம் முழுக்க தெரிகிறது. ஒவ்வொரு காட்சியிலும் அவ்வளவு பிரம்மாண்டம். படத்தின் ஒளிப்பதிவு படத்தைப் பல மடங்கு தூக்கி நிறுத்தியிருக்கிறது. பின்னணி இசையும் படத்திற்கு பக்க பலம். கதை, நாம் ஏற்கனவே பல தமிழ் படங்களில் பார்த்த கதைதான் என்றாலும், அதை எடுத்த விதம் சூப்பர். டெக்னிகலாக மிரட்டியிருக்கிறார்கள்.
தேவி தியேட்டரில் படத்தை 2D -யில் காண்பித்தார்கள். மறுபடியும் நாளை மறுநாள் சத்யம் தியேட்டரில் 3D -யில் பார்க்க நண்பர்களிடம் சொல்லியாகி விட்டது. கண்டிப்பாக அனைவரும் "திரையரங்கம்" மட்டுமே சென்று பார்க்க கூடிய திரைப்படம் "அவதார்".
அவதார்- பிரம்மாண்டத்தின் பிறப்பிடம்.
பின்குறிப்பு:
இந்த படத்தை பார்ப்பதற்கு முன்னால் "வேட்டைக்காரன்" படத்தை பார்க்கலாமென்று இருந்தேன். ஆனால் "அவதார்" படத்தைப் பார்த்தவுடன் அந்த முடிவை மாற்றி கொண்டேன்.
Wednesday, August 5, 2009
களவாடிய பொழுதுகள்

கடற்கரை மணல்திட்டுகளில்
காலில் மணலூற-நாம்
களவாடிய பொழுதுகள்
கருகிப் போனதடி
என் கண்ணே!
மடிமீது தலைவைத்து
மனதை வான்வைத்து-அழகு
மயில்போல மறைந்த
மாலை பொழுதுகள்
மீண்டும் திரும்புமோ
என் கண்ணே!
கன்னம் திருப்பினாய்
செவ்விதழில் முத்தமிட்டேன்
பொய்யாய் அடித்தாய்-சிறு
பொய்யாகவேனும் புலருமோ
அந்த பொழுதுகள்
என் கண்ணே!
இரவைச் சுட்டெரித்த
சூரியன் போல- நம்
பிரிவை சுட்டெரிக்க
நினைவுகள் ஒன்றே போதும்
என் கண்ணே!
Tuesday, August 4, 2009
திரைப்பட ரசிகர்களின் வன்மம்..

சமீபத்திய சில படங்களின் வெற்றி என்னை பாதித்திருக்கிறது. குறிப்பாக சுப்ரமணியபுரம் மற்றும் நாடோடிகள். தமிழ் திரைப்பட ரசிகர்கள் இத்தகைய படங்களுக்கு கொடுக்கும் ஆதரவைப் பார்க்கும்போது எங்கே அவர்களின் உள்ளங்களிலும் அத்தகைய வன்மம் இருக்குமோ என்ற பயம் எழுகிறது. சுப்ரமணியபுரம் படத்தில் இயக்குனர் சசிகுமார் ஒருவனுடைய தலையை ஆடு அறுப்பது போல் அறுக்கும் காட்சிக்கு ரசிகர்கள் கைகொட்டி ஆரவாரம் செய்தபோது அப்படிதான் எனக்கு தோன்றியது. அதே மாதிரி நாடோடிகள் படத்தில் இரண்டு காதலர்கள் சில காரணங்களால் பிரிந்து விடுகின்றனர். அவர்களை சேர்த்துவைத்த நண்பர்கள் அவர்களை கடத்திக் கொண்டு போய் சித்திரவதை செய்வதையும் வெகுவாக ரசித்தனர் ரசிகர்கள்.
படத்தை மேலோட்டமாக பார்க்கும்போது சில விஷயங்கள் நன்றாக இருப்பதுபோல் தோன்றும். ஆனால் அதை சற்று நிதானமாக யோசித்துப் பார்க்கும் போது அதனுள் இருக்கும் வக்கிரம் புரிய வரும். திரைப்படங்கள் மக்களை எளிதாய் சென்றடையக் கூடிய ஒரு மீடியா. அதில் நல்லதும் இருக்கும். தீயதும் இருக்கும். மக்களாகிய நாம்தான் எது நல்லது எது கெட்டது என்று பகுத்தறிய வேண்டும். மக்களுக்கு நல்ல விஷயங்கள் சொல்ல வேண்டியது இயக்குனர்களின் கடமை. மக்கள் மனதில் வன்மங்களை வளர்க்க அவர்கள் காரணமாக இருக்க கூடாது. இயக்குனர்களின் படைப்புரிமையில் தலையிட நான் இங்கே வரவில்லை. மக்களின் மனதில் நல்ல எண்ணங்களை உருவாக்குவதில் அவர்களுக்கு பெரும்பங்கு உண்டு என்பதை அவர்கள் உணர வேண்டும்.

காதல் செய்யும் காதலர்கள் பிரிவது என்பது நம் நாட்டில் தினமும் நடக்கின்ற ஒரு கேவலமான விஷயமாக மாறிவிட்டது. அதற்காக தாங்கள் சேர்த்து வைத்தோம் என்ற ஒரே காரணத்திற்காக அவர்களை கடத்தி துன்புறுத்துவது என்பது முட்டாள்தனமான செயல். அதை ரசிகர்கள் ஏற்றுகொள்கிறபோது மனதில் ஒருவித நெருடல். இனிவரும் படங்களிலாவது மக்கள் இத்தகைய காட்சிகளை ரசிக்காமல் இருக்க கற்றுக்கொள்ள வேண்டும். இயக்குனர்கள் சற்று கவனத்துடன் செயல்படுவது நல்லது.
Sunday, July 26, 2009
அழகிய திருமுகம்

தெருவோரம்
நடந்து செல்கையில்
தெய்வத்தினும் அழகிய
திருமுகத்தைப் பார்த்தேன்
சிரித்த தெனைப்பார்த்து
சிரித்தேன் அதைப்பார்த்து
கண்ணடித்த தெனைப்பார்த்து
கண்ணடித்தேன் அதைப்பார்த்து
கைநீட்டி அழைத்தது
கையருகில் சென்றேன்
இருகைகளையும் உயர்த்தியது-தூக்கி
மார்போடு இருத்திக் கொண்டேன்
முத்தமிட்டது கன்னத்தில்
முத்தமிட்டேன் அதன் கன்னத்தில்
நேரமாகிவிட்டது எனக்கு
செல்லவேண்டும் ஓரிடம்
இறக்கி விடைகொடுத்தேன்
பிரிய மனமில்லாமல்
தெருகடந்து செல்லும்வரை
திரும்பி நடந்தேன்
தெய்வத்தினும் அழகிய-அந்த
திருமுகத்தைப் பார்த்தபடி....
Thursday, July 23, 2009
அவள் அன்று விடுமுறை

மனம் மயக்கும்
மாலை வேளையில்
மனம் அலைபாய்ந்தது
அவளை எண்ணி...
அலுவலகத்தில் நாளை
அவளிடம் பேச வேண்டும்-என
ஆவல் கொள்ளும்
என் மனம்...
மனதின் ஆற்றல்
மகாவல்லமை-என
மறுநாள் உணர்த்தியது
அவள் அன்று விடுமுறை.....
Thursday, July 9, 2009
புதிய தேடல்.....

நேற்று சைதை ராஜ் தியேட்டரில் 'பசங்க' படம் பார்த்தேன். அருமையாக இருந்தது. தமிழ் சினிமாவில் சிறுவர்களுக்கான படங்கள் மிக குறைவான அளவே எடுக்கிறார்கள். அதுதான் ஏன் என்று புரியவில்லை. சிறுவர்களுக்கான ஹாலிவுட் படங்கள் நிறைய வருகின்றன. ஆனால் தமிழ் சினிமாவில் ஒரு வருடத்தில் சிறுவர்களுக்கான படம் எத்தனை வருகின்றது என்று பார்த்தால் மிக அதிகமாக இரண்டு அல்லது மூன்று படங்கள்தான் இருக்கும். இத்தகைய நிலை மாற வேண்டும். சிறுவர்களுக்கான படங்கள் நிறைய வெளி வர வேண்டும். அது தமிழ் சினிமாவிற்கு நல்லது.
சிறுவர்களுக்கான படங்களை குடும்பத்துடன் சென்று பார்ப்பதால் வசூலும் கூடும். அது சிறுவர்களுக்கான நல்ல பாடமாகவும் இருக்கும். 'பசங்க' படம் சிறுவர் மற்றும் பெரியவர்களுக்கான படம். பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை எப்படி வளர்க்க வேண்டும் என்பதை இயக்குனர் அழகாக, சுவாரஸ்யமாக சொல்கிறார். பிள்ளைகள் தங்கள் பெற்றோர்களிடமிருந்து தாங்கள் செய்யும் ஒவ்வொரு நல்ல செயலுக்கும் பாராட்டை எதிர்பார்க்கிறார்கள். அது கிடைக்காத போது அவர்களுடைய உள்ளம் உடைந்து போகிறது. அது கொடுமையான விஷயம்.

குழந்தைகள் செய்யும் செயல்களுக்கு பாராட்டு கிடைத்து விட்டால் அது அவர்களை உற்சாகப்படுத்தும். அது அவர்களை மேதைகளாய் உருவாக்க வழிவகுக்கும். சிறுவர்கள் செய்யும் எந்த செயலையும் அலட்சிய படுத்தாதீர்கள். உங்களின் லட்சியங்களை அவர்களின் மேல திணிக்காதீர்கள். அவர்களின் உணர்ச்சிகளைப் புரிந்து கொள்ளுங்கள். முக்கியமாக அவர்களிடம் அன்பு செலுத்துங்கள். அன்பு ஒன்றுதான் சிறுவர்கள் எதிர்பார்க்கும் மருந்து. அந்த மருந்தை அவர்களுக்கு முடிந்த மட்டும் ஊட்டுங்கள்.
பெற்றோர்கள் தங்களுக்குள் இருக்கும் சண்டையை குழந்தைகளின் முன்னால் வெளிப்படுத்தாதீர்கள். அது அவர்களை மனரீதியாய் பாதிக்கும். நாமும் பெண்களிடம் இப்படிதான் நடந்து கொள்ள வேண்டுமோ என்ற எண்ணத்தை அது ஏற்படுத்தும். அதனால் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்காகவேனும் விட்டுக் கொடுத்து நடக்க வேண்டும். அவர்களிடம் தினமும் மனம் விட்டு பேசுங்கள். அவர்களுக்காக நேரத்தை ஒதுக்குங்கள். இன்றைய சூழ்நிலையில் வீட்டில் கணவன் மனைவி இருவருமே வேலைக்கு சென்று விடுகின்றனர். அவர்கள் வருவதற்குள் இரவு நேரமாகிவிடுகிறது. பிள்ளைகள் அவர்களிடம் பேச வந்தால் தனக்கு அசதியாய் இருக்கிறது என்று சொல்லிவிட்டு சிறிது சாப்பிட்டுவிட்டு உறங்கி விடுகின்றனர். பிள்ளைகள் எப்படி வளர்கிறார்கள் என்பதைப் பற்றி அவர்கள் கண்டு கொள்வதில்லை. அவர்கள் எப்படி படிக்கிறார்கள், அவர்களின் நண்பர்கள் சகவாசம் எப்படி என்பதைப் பற்றி அவர்கள் அறிந்து கொள்வதில்லை.

இப்படி இருந்தால் பிள்ளைகள் எப்படி உயர்ந்தவர்களாய் உருவாவார்கள். சில வருடங்களுக்கு முன்பு பிள்ளைகள் தாத்தா பாட்டிகளிடம் நல்ல கதை கேட்டு வளர்ந்தனர். எனக்கு என்னுடைய அம்மா நல்லதங்காள் புராணத்தையும், என்னுடைய அப்பா ராமாயணம் மற்றும் மகாபாரதம் ஆகியவற்றை சொல்லி வளர்த்ததும் இன்றும் பசுமையான நினைவுகளாய் இருக்கின்றன. ஆனால் இன்று துரதிஷ்டவசமாக அவையெல்லாம் குழந்தைகளுக்கு கிடைக்க பெறுவதில்லை. இந்தியாவின் எதிர்காலம் இளைஞர்களின் கையில் என்று விவேகானந்தர் முதல் அப்துல் கலாம் வரை கூறுகின்றனர். இன்றைய சிறுவர்களே நாளைய இளைஞர்கள். இந்தியா வல்லரசாக ஆவது அவர்கள் கையில்தான் இருக்கிறது என்பதை ஒவ்வொரு பெற்றோரும் உணர வேண்டும். அது அந்த சிறுவர்களின் வளர்ச்சியை பொறுத்தே உள்ளது. அதனால் பெற்றோர்கள் தங்களின் பிள்ளைகளின் மேல் அன்பு செலுத்தி அவர்களை வருங்கால வல்லரசு இந்தியாவின் தூண்களாய் உருவாக்க முயற்சிக்க வேண்டும். ஜெய் ஹிந்த்....
Tuesday, July 7, 2009
Monday, July 6, 2009
இன்பம் துன்பமற்ற வாழ்க்கை!

மனித வாழ்க்கையில் இன்பம் துன்பம் இரண்டுமே நம் மரணத்தின் கடைசி நொடி வரை நம்மை ஆட்டுவித்துக் கொண்டிருக்கிறது. இன்பம் வரும்போது மகிழ்வதும், துன்பம் வரும்போது வருந்துவதும் மனித இயல்பு. ஆனால் துரதிஷ்டவசமாக பெரும்பாலான நேரங்களில் பெரும்பாலான மனிதர்களை துன்பங்களே ஆட்டுவிக்கின்றன. நமக்கு வரும் இன்பம் மற்றும் துன்பம் ஆகிய இரண்டிற்குமே நாம்தாம் காரணம் என்பது யாரும் மறுக்க முடியாத உண்மை. அப்படியிருந்தும் நாம் துன்பத்தின் வாயிலில் சென்று சிக்கிக் கொள்கிறோம். அதற்கு காரணம்தான் என்ன? ஒரு சிறிய அலசல்.
ஒரு வேலையை நாம் தொடங்குகிறோம் என்று வைத்துக் கொள்வோம். அந்த வேலையை பற்றின்றி செய்ய கற்றுக் கொள்ள வேண்டும். அதாவது அந்த வேலையின் பலனை எதிர்பாராமல் செய்ய வேண்டும். பற்றின்றி செய்ய வேண்டும் என்பதை யாரும் தவறாக எடுத்துக் கொள்ள கூடாது. எடுத்த வேலையை ஏனோ தானோ என்று செய்வதற்கு பற்றின்றி வேலை செய்தல் என்பது பொருள் இல்லை. ஒரு செயலை எந்த பற்றும் இல்லாமல், அதாவது அந்த வேலைக்கு அடிமையாகாமல், அதன் பந்தத்திற்கு உள்ளாகாமல், அதன் முடிவு பற்றிய பயம் இல்லாமல், முழு மூச்சோடு அந்த வேலையை செய்ய வேண்டும். அப்போது அந்த வேலையை நாம் நன்றாக செய்ய முடியும். அந்த செயலின் முடிவு நமக்கு சாதகமாக இருந்தாலும் நாம் அதனால் மகிழ்ச்சி கொள்ள மாட்டோம். முடிவு பாதகமாக இருந்தாலும் அதனால் நாம் வருத்தம் கொள்ளவும் மாட்டோம். காரணம் நாம் பற்றின்றி வேலை செய்கிறோம்.

எந்த ஒரு வேலையையும் என் உடம்பு செய்வதில்லை. நான் என்ற என் ஆன்மா இந்த உடம்பைக் கருவியாகக் கொண்டு செயல்படுகிறது என்ற எண்ணத்துடன் ஒரு செயலை செய்ய செய்ய முயற்சிக்க வேண்டும். அவ்வாறு செய்யும் போது நம்மை இன்பம் துன்பம் ஆகிய இரண்டுமே நம்மை நெருங்குவதில்லை. காரணம் நாம் அந்த செயலை ஆன்மாவால் செய்கிறோம். ஆன்மா இன்பம் துன்பம் ஆகிய எதுவுமே அறியாதது. ஆன்மா நிலையானது, அழிவற்றது. இந்த உடம்பு நிலையற்றது. கண்டிப்பாக ஒருநாள் அழியக் கூடியது. உடம்பு அழியும்போது ஆன்மா வேறொரு உடலைத் தேடி செல்கிறது.
இப்படி ஒரு செயலைப் பற்றில்லாமல் செய்ய முயற்சிப்போம். பிறகு நம்மை இன்பம் துன்பம் எதுவுமே கட்டுப்படுத்தாது. எந்த ஒரு மனிதன் இன்பம் துன்பம் ஆகிய நிலைகள் இல்லாமல் எப்போதும் ஒரே நிலையில் இருக்கின்றானோ, அந்த மனிதன் ஒரு செயலை ஆன்மாவால் செய்கிறான் என்று அர்த்தம். அவன் முழு சுதந்திரம் உடையவனாக இருக்கின்றான் என்று சுவாமி விவேகானந்தர் கூறுகிறார்.
மேலே சொன்ன கருத்துக்கள் கீதையின் மையக் கருத்தாகும். அதனைக் கடைப்பிடிப்பது என்பது சாதாரண விஷயமில்லை. ஆனால் கடைபிடித்தால் உங்களுக்கு இன்பமும் இல்லை; துன்பமும் இல்லை. ஆன்மாவில் நிலைபெற்று விட்டீர்கள். அடுத்த பிறவியும் இல்லை. காரணம் உங்களுக்கு ஆசைகள் இருப்பதில்லை. ஆசை இருக்கும் வரை உங்களுக்கு மறுபிறவி என்ற ஒன்று இருந்து கொண்டே இருக்கும். அதனால்தான் ஆசையில்லாமல், பற்றில்லாமல் வேலை செய்ய வேண்டும் என்று கீதையில் சொல்லப்படுகிறது.
நான் ஏதோ கீதையை உபதேசிப்பதாக யாரும் நினைக்க வேண்டாம். கீதையில் நான் படித்த எனக்கு பிடித்த விஷயத்தை பகிர்ந்து கொண்டேன். அவ்வளவுதான். உங்களுக்கு பிடித்திருந்தால் நீங்கள் மேலே கூறியவற்றை கடைபிடிக்க முயற்சி செய்யலாம். இல்லையென்றால் விட்டுவிடலாம். வாசித்தமைக்கு மிக்க நன்றி....
Thursday, July 2, 2009
கவிதைகள்
Wednesday, June 24, 2009
குயிலுக்கு கூ கூ கூவிட சொல்லி கொடுப்போம்
குயிலுக்கு கூ கூ கூவிட சொல்லி கொடுப்போம்- அட ஆமா
மயிலுக்கு தை தை தாளங்கள் சொல்லி கொடுப்போம் - அட ஆமா
நதி நடந்து நடை பழகி கடலுடன் கலந்தது இந்நேரம்
நடந்ததெல்லாம் மறந்துவிட்டு அலைகடல் இசையினில் விளையாடும்
உயிரை பிரித்தாலும் வேறாகி போகாது
இன்பம் கரைமீற இனி என்றும் குறையாது
குயிலுக்கு கூ கூ கூவிட சொல்லி கொடுப்போம்- அட ஆமா
மயிலுக்கு தை தை தாளங்கள் சொல்லி கொடுப்போம் - அட ஆமா
நிலவு வளரும் வளர்ந்து தளரும் அன்பிலேது தேய்பிறை
அன்புக்கொரு எல்லையில்லை கண்ணம்மா
மலர்கள் உதிர கிளையில் குதிக்கும் குருவிக்கென்றும் விடுமுறை
கொள்ளை இன்பம் நட்பில் உண்டு கண்ணம்மா
வானில் திரண்ட மேகத்தின் மின்னல் வானைப் பிரிக்காது
எங்கள் இடையில் யார் வந்த போதும் நெஞ்சம் பிரியாது
துயர் போன நினைவோடு இனி என்றும் ஆனந்தம் கொண்டாடு..
குயிலுக்கு கூ கூ கூவிட சொல்லி கொடுப்போம்- அட ஆமா
மயிலுக்கு தை தை தாளங்கள் சொல்லி கொடுப்போம் - அட ஆமா
நதி நடந்து நடை பழகி கடலுடன் கலந்தது இந்நேரம்
நடந்ததெல்லாம் மறந்துவிட்டு அலைகடல் இசையினில் விளையாடும்
உயிரை பிரித்தாலும் வேறாகி போகாது
இன்பம் கரைமீற இனி என்றும் குறையாது
இதய வயலில் குளிர்ந்த காற்று இனிக்க இனிக்க வீசுதே
விண்ணைத் தொட றெக்கை கொடு குயிலே..
இரவு முழுதும் சிமிட்டும் விண்மீன் சிரிப்பு கதைகள் பேசுதே
பக்கம் வந்து என்னைத் தொடு முகிலே..
ஜென்மம் நூறு என்றான போதும் சேர்ந்து பிறப்போமே
தரையில் வானம் விழுகின்ற போதும் துயரம் மறப்போமே
துயர் போன நினைவோடு இனி என்றும் ஆனந்தம் கொண்டாடு..
குயிலுக்கு கூ கூ கூவிட சொல்லி கொடுப்போம்- அட ஆமா
மயிலுக்கு தை தை தாளங்கள் சொல்லி கொடுப்போம் - அட ஆமா
நதி நடந்து நடை பழகி கடலுடன் கலந்தது இந்நேரம்
நடந்ததெல்லாம் மறந்துவிட்டு அலைகடல் இசையினில் விளையாடும்
உயிரை பிரித்தாலும் வேறாகி போகாது
இன்பம் கரைமீற இனி என்றும் குறையாது
குயிலுக்கு கூ கூ கூவிட சொல்லி கொடுப்போம்- அட ஆமா
மயிலுக்கு தை தை தாளங்கள் சொல்லி கொடுப்போம்..
Tuesday, June 23, 2009
கண்ணகி மண்ணில் இருந்து ஒரு கருஞ்சாபம்!

தமிழ் சினிமாவில் நல்ல தமிழில் பாட்டெழுத முடியாது என்கிற எழுதப்படாத விதியை உடைத்தெறிந்தவர், கவிஞரும் பாடலாசிரியருமான தாமரை. ‘கண்கள் இரண்டால்’ என்று காதல் பேசி இவரது பாடல் ஒலிக்காத இடமே இல்லை. ஆனால் அவர் எழுதிய இந்தக் கவிதையை பிரசுரிக்க பலரும் தயங்கி நின்றார்கள். இந்த வாரம் குமுதம் வார இதழில் இந்தக் கவிதையின் ஒரு பகுதி பிரசுரமாகியிருக்கிறது. இப்படியொரு அறம் பாடும் தைரியம் கவிஞருக்கு இருந்த போதும் அதை வெளியிடும் தைரியம் நம் பத்திரிகைகளுக்கு இல்லை என்பதை வெட்கத்துடன் ஒப்புக்கொள்ள வேண்டியிருக்கிறது. குமுதம் டாட் காமிலும் கவிஞர் தாமரை இந்தக் கவிதையை வாசிக்கும் வீடியோ வெளியிடப்பட்டிருக்கிறது.
தாமரை: கண்ணகி மண்ணில் இருந்து ஒரு கருஞ்சாபம்!
நிர்வாணமாக எங்களை அலையவீட்டீர்களே...
Wednesday, June 17, 2009
Tuesday, June 9, 2009
வாசகர்களுக்கு என் வணக்கங்கள்...









